சிறுவர் பாடல்கள்

குழந்தைக்குப் பேச்சுக் கற்றுக் கொடுப்பதற்குச் சில எளிய சொற்களைச் சேர்த்துப் பாடும் பாடல்கள் ஒருவகை. இவற்றைப் பிறர் பாட, குழந்தைகள் திருப்பிச் சொல்வார்கள்.

தமிழ் நாட்டில் பலவகையான குழந்தை விளையாட்டுகள் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு பாட்டு உண்டு. இவற்றில் கோஷ்டி விளையாட்டுக்களில் ஒரு கோஷ்டியார் ஒரு பாட்டைப் பாட, எதிர் கோஷ்டியார் அதற்குப் பதில் பாட்டுப் பாடுவார்கள். இத்தகைய பாடல்களில் சடு குடு, கழங்கு முதலியவற்றை தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்களில் சேர்த்துள்ளோம். இப் பகுதியில் மேலும் சில பாடல்களை வெளியிடுகிறோம்.

இவற்றில் பொருளை விட சந்தப் பயிற்சியும், சொற்பயிற்சியுமே முக்கியமாகக் காணப்படுகிறது.

சடு குடு

உடற் பயிற்சிக்கும், சுவாசப் பயிற்சிக்கும், இவ் விளையாட்டு மிகவும் சிறந்தது. இதனை விளையாடும் முறை அனைவருக்கும் தெரியும். எதிர்கட்சிக்குள் உப்பைத் தாண்டிச் செல்லும் சிறுவன் சடு குடுப் பாடலைப் பாடிக் கொண்டே செல்வான். இப்பாடல் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். இரண்டு பாடல்கள் இத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

  நான்தான் வீரன்
நல்ல முத்து பேரன்
வெள்ளிப் பிரம்பு எடுத்து
விளையாட வாரேண்டா
தங்சப் பிரம்பு எடுத்து
தாலிகட்ட வாரேண்டா, வாரேண்டா,
குடு குடு சல்லி
குப்பன் சல்லி
ராவூத்தன் சல்லி
ரவ்வாச் சல்லி
வேத்து வடியும் சாராயம்
காத்து இருந்து பூசை பண்ணும்
காவடிப் பண்டாரம்
சடு குடு என்பது
சாட்டை என்பது
மேட்டுப் பத்திரி
முத்தையா நாடான்
செத்துக் கிடக்கான்
சம்புருக் கொண்டாடா
சம்புருக் கொண்டாடா

சேகரித்தவர்:
எம். பி. எம். ராஜவேலு

இடம்:
மீளவிட்டான்,
தூத்துக்குடி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்.