மழையில் !

மழையில் ஆறு தாண்ட முயன்ற காதலன் பாட்டைக் கேட்டோம். அதே போல் மார்பளவு தண்ணீரில் செல்லும் காதலனது பாட்டைக் கேட்போம்.

காதலன் பாடுவது

  மழைக்கா இருட்டுக்குள்ள
மாரளவு தண்ணியிலே
பாதை தெரியலியே
பாதகத்தி உன் வீடு
பக்கத்து வீட்டுக்காரி
பழைய உறவுக்காரி
பழயுறவும் மங்குதடி
பாதகத்தி உன்னாலே

மழைக்கா இருட்டிலேயே
மாரளவு தண்ணியிலே
குடைபோட்டு நான் வருவேன்
குணமயிலே தூங்கிராத
ஏல முகத்தாளே
ஒட்ட வச்ச காத்தாளே
ஒட்ட வச்ச காத்துக்கில்லோ-நான்
இட்டனடி தங்க நகை

மழையே வருகுதடி
மய்யல் குய்யல் ஆகுதடி
தலையே நனையுதடி
தண்டிப் புள்ளஉன் மையலிலே
நெத்திலி வத்தல் போல
நெஞ்சடர்ந்த செவத்தப் புள்ள
நெஞ்சில் படுத்துறங்கும்-நீ
பஞ்சணை மெத்தையடி.

 

வட்டார வழக்கு: மய்யல் குய்யல்-குழப்பம்  ;தண்டிப்புள்ள-பருத்த பெண்; நெத்திலி-ஒருவகை மீன்.

குறிப்பு : ஒட்டவச்ச காது-பாம்பாட்டம் போடுவதற்காக காது வடித்திருக்கும் பெண்கள் அது அநாகரிகம் என்று காதை வெட்டி ஒட்ட வைத்தார்கள். 30 வருஷத்துக்கு முன் இது நடைபெற்றது. சில டாக்டர்கள் இத் தொழிலில் நல்ல ஊதியம் பெற்றார்கள்.

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி,
திருநெல்வேலி மாவட்டம்.