பழகினவள் எங்கே
போவாள்
இரு காதலர்களுக்கு அண்மையில் மணம் நடக்கவிருக்கிறது.
அதுவரை, தன்னைச் சுற்றிச் சுற்றி வர வேண்டாமென்றும்,
தனது குறும்புகளை நிறுத்தி வைத்துக் கொள்ளுமாறும், நடை
உடைகளை மாற்றிக் கொள்ளுமாறும், அவனிடம் அவள்
கூறுகிறாள்,
|
தெற்குத் தெருவிலே தெல் தெறிக்கும் புள்ளையாண்டா
ஓடித் திரியாதய
ஒங்க மேல தூசு படும்
சாய வேட்டி கட்டாதிய-ஒங்க
சதிரத்துக்கோ நல்லால்லே
வெள்ளை வேட்டி கட்டி வாங்க
வெளுப்பாருந்தா நல்லாருக்கும்
கந்தை வேட்டி கட்டாதிய
கடைக் கெதுக்கே நிக்காதிய
மல்லு வேட்டி வாங்கித் தாரேன்
மெல்லுதமா கட்டி வாங்க
நீல வர்ணப் பொட்டுக்காரா
நிறத்துக் கேத்த சட்டைக்காரா
கண்ணாடி வேண்டாமய்யா
தன்னழகே போது மையா
ஆசை வச்சேன் ஒங்க மேல
ஆளான மாசி மாதம்
பேச நல்ல ஆசை ஐயா
பிறருக்கிடம் வையாதிய
சாய வேட்டி கட்டாதிய
சாயலுல பாராதிய
மல்லு வேட்டி வாங்கித்தாரேன்
மற்ற முகம் பாராதிய
முக்குல நில்லாதிய
முழி சுருட்டிப் பாராதிய
சுத்தி யுமுள்ள வுக
சூதாக எண்ணுவாக
கொல்லையிலே நில்லாதிய
கொடி அரளி சூடாதிய
மதி லெட்டிப் பாராதிய
மதினி வார நேரமாச்சு
ஒத்த வேட்டி கட்டாதிய
உதறி நடக்காதிய
பரக்க முழியாதிய
பழகின எங்க போவா? |
வட்டார வழக்கு:
சதுரம்-சரீரம்; கட்டாதிய-கட்டாதீர்கள்;
நிக்காதிய-நிற்காதீர்கள்
என்ற எதிர்மறை வினைகள்; சாயலுல-கோணலாக; பரக்க-அகல
விழித்து;
முக்கு-சந்தி.
சேகரித்தவர்:
S.S.
போத்தையா |
இடம்:
விளாத்திக்குளம் பகுதி,
திருநெல்வேலி. |
|