காதலியைக் கொன்ற
தகப்பன்
மலையோரங்களில் தோட்டங்கள்
உள்ள வெள்ளாமையைக் காட்டுப் பன்றி, காட்டெருமை முதலிய மிருகங்கள் நாசம் செய்யாவண்ணம்
காக்க, கண்ணி வைத்தல், அம்பு எய்தலும் உண்டு. அப்படி மலையோரம் உள்ள தோட்டத்தில்
ஒரு இளைஞன் காவல் காத்து வந்தான், அவன் தினமும் இரவு வேளையில் தனது காதலியைச் சந்திக்க
மகுடி வாசிப்பான். அவளும் அவனைத் தேடிவந்து கூடிய பின்னர் திரும்புவாள். மகுடிச்
சத்தம் இல்லையேல் அவள் வரமாட்டாள்.
ஒருநாள் தன் தகப்பனின்
உத்தரவுப்படி அவன் வேற்றூருக்குச் சென்றான். செல்லும் பொழுது மகுடியை வேறு யாரும் ஊதாமலிருக்க
அதை உடைத்து வைத்து விட்டுச் சென்றான், அன்று இரவு கொல்லைக்கு வந்த அவன் தகப்பன்
யாரோ போக்கிரிகள் அதை உடைத்து விட்டதாக எண்ணி ஒட்டவைத்து ஊதினான். இச்சத்தத்தைக்
கேட்டதும் அவன் காதலி தன் காதலன் மகுடி வாசிப்பதாக எண்ணி அங்கு வருகிறாள். அப்பொழுது
அவன் தகப்பன் யாரோ திருடன் என எண்ணி அவள் மீது அம்பு விடுகிறான். அவள் சத்தமிட்டபடி
கீழே விழுகிறாள். அவள் அருகில் வந்ததும் விஷயத்தைப் புரிந்து கொள்கிறான், மறுநாள்
அவள் காதலன் அங்கு வந்து பார்த்துப் புலம்புகிறான். தகப்பனைத் திட்டுகிறான். தகப்பனும்
தான் தெரியாமல் செய்ததாக வருந்துகிறான். இச்சம்பவத்தை விவரிப்பதுதான் இந்தப் பாடல்கள்.
காதலன்: |
மழையா
கருக்கலாடி
மாமயிலே பெண்ணரசே
வழி தேடி வந்தே
|
காதலி: |
அத்தி
நார்ப் பட்டெடுத்து
அழகு கன்னிப் பால் பிடித்து
உன்னிலும் உன்னிதமாய்
ஊதினார் உன் தகப்பன்
|
மகன்: |
சாதா
குருடா
சண்டாளா என் தகப்பா
சந்தன மாமரத்தை
தாளுருவக் கொல்ல லாமா?
|
தகப்பன்: |
உன்னானை
என்னானை
உன் தேவின்னு நானறியேன்
காவலை அழிக்க வந்த
கள்ளன்னு அம்பு போட்டேன்
|
பக்கத்துக்
கிராமங்களில் தகப்பனுக்கும் மகனுக்கும் நடக்கும்
விவாதங்கள் வேறு உருவத்தில் பாடலாகப் பாடப்படுகிறது.
அதையும் பார்ப்போம்,
மகன்
:
|
மழைக்கால்
இறங்கி
மாமழை மின்னல் மின்ன
சாதா குருடா
சண்டாளா என் தகப்பா
ஓரக் கண்ணா உனக்கு
ஒரு கண்ணும் நொள்ளையா
காவல் பறி போகுதின்னு-என்
காதலியே
கொன்னாயா?
|
இதைக் கேட்டதும்
அருகில் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த அவன் காதலி கூறுகிறாள்.
காதலி: |
சீந்திக்
கொடி பிடுங்கி
சீலப் பேன் மெழுகடைத்து
உன்னிலும் உன்னிதமாய்
ஊதினார் உன் தகப்பன்.
|
வட்டார
வழக்கு:
உன்னிதமாய்-உன்னதமாய்
;
கள்ளன்னு-கள்ளன் என்று.
குறிப்பு:
சீலைப்பேன் மெழுகு நிறம் இருக்கும். இறுகிய மெழுகு மேலே ஒட்டுவது போல் அது ஒட்டிக்கொள்ளும்.
இது ஒரு சிறுகதைப்பாடல்.
சேகரித்தவர்:
சந்திரன் |
இடம்:
வாழப்பாடி,
சேலம் மாவட்டம்.
|
|