|
வேடுவர்க்குத் தங்கை
அவள் பிறந்த வீடு செல்லவேயில்லை. அவளைத் திருமணம் செய்து
கொடுத்த அவளது பெற்றோர் மணம் செய்து கொடுத்த பின்னர் அவனைக் கூப்பிடவேயில்லை. பெற்றோர்களின்
காலத்திற்குப்பின் உடன் பிறந்தானாவது அழைப்பான் என்று நினைத்தால் அவனும் பேசாமலிருந்து
விட்டான். இந்நிலையில் வேளாளப் பெண்ணாகிய அவள் விதவையாகி விட்டாள். விதவையான
பின்பு வெள்ளையுடுத்தி பிறந்த ஊருக்கு வருகிறாள். வீதியிலே அவளை இனத்தார் அடையாளம் கண்டுகொள்ள
முடியவில்லை. ஏனெனிறால் அவள் ஊருக்கு வந்து போய் இருக்கவில்லையல்லவா? ஒருத்தி அவளைப்
பார்த்து “காராளச்சியாகிய நீ யார்?”
என்று அறிந்துகொள்ளும்
ஆவலோடு கேட்கிறாள். இதைக் கேட்ட அவள் தான் இந்நிலையில்
ஊருக்கு வந்திருக்கிறோமே
! தன் சகோதரன்
தன்னைப் பிறர் இனம் கண்டு கொள்ள முடியாத நிலையில் வைத்து விட்டானே
!
என்ற எரிச்சலில் “நான் யாருக்கும் உறவினளல்ல. காட்டில்
வாழும் வேடுவர்களின் தங்கை” என வருந்திக் கூறகிறாள்.
கருப்பருகு சேலை கட்டி-நாம் பொறந்த
காஞ்சிக்குப் போனாலே
காஞ்சி பொரம் பெண்களெல்லாம்-அங்கவரும்
காராளச்சி யாருயிண்ணர்
காராளச்சியில்லையம்மா-நான்
கர்ணனொட தங்கையிண்ண
வெள்ளருகு சேலைக்கட்டி-நான் பொறந்த
வீராணம் போனாலே
வீராணத்துப் பெண்களெல்லாம்
அங்கவரும்
வெள்ளாளச்சி யாருயிண்ணர்
வெள்ளாளச்சி யில்லையம்மா-நான்
வேடுவர்க்குத் தங்கை யிண்ணேன்
குறிப்பு:
காராளச்சி-வெள்ளாளப் பிள்ளைகளில் கார்காத்தார் என்பது ஒரு பிரிவு.
வட்டார வழக்கு:
காஞ்சிபொரம்-காஞ்சீபுரம்.
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர், தருமபுரி மாவட்டம். |
|