பக்கம் எண்: - 9 -

இருந்து வருகிறது. இந்தோ ஐரோப்பிய இனம் என்று குறிக்கப்படும் வடஇந்திய மொழிகளும் இவ்வகையில்மட்டும் திராவிட மொழியினத்தோடு உறவு உள்ளவை என்று சொல்லலாம். பழந்திராவிட மொழிகளைப் பேசி வந்த மக்கள் கையாண்ட அதே வகையான வாக்கிய அமைப்பையே, இன்றைய வட இந்திய மொழிகளிலும் காணலாம். மொழியின் மேற்பகுதிகள் எவ்வளவு மாறினாலும் அடிப்படையான வாக்கிய அமைப்புமட்டும் மாறாமல் இருந்துவரும் என்ற உண்மையே இதற்குக் காரணம். ஆகவே, வட இந்திய மொழிகளின் வாக்கிய அமைப்பு, சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஜெர்மன் முதலியவற்றின் வாக்கிய அமைப்போடு ஒத்திருக்கவில்லை. தமிழ் முதலான திராவிட மொழிகளின் வாக்கிய அமைப்போடு ஒத்திருக்கிறது. இந்த ஒற்றுமை, தென்னிந்திய மொழிகள் நான்கையும் ஆராயும்போது மேலும் தெளிவாக விளங்குகிறது. இந்தப் பழங்கால வாக்கிய அமைப்பே, பழைய தமிழிலக்கியம்முதல் இன்றைய சிறுகதைவரையில் ஒரே தன்மையாக இருப்பதும், மொழியின் தொடர்ந்த வளர்ச்சியினூடே காணத்தக்க உண்மையாகும்.

வீண் வம்பு

இந்தியாவில் இன்று பேச்சுவழக்கில் உள்ள மொழிகளில் தமிழ் மிகப் பழங்காலத்திலேயே பண்பட்ட மொழியாகும். வடமொழி இலக்கிய வளர்ச்சி பெற்ற காலத்திலேயே தமிழும் இலக்கிய வளர்ச்சி பெற்று விளங்கியது. மற்ற மொழிகள் எல்லாம் அதற்குப் பிறகு சில பல நூற்றாண்டுகள் கழித்தே இலக்கியம் பெறத் தொடங்கின. அதனால் தமிழின் வளர்ச்சி பழமை உடையது. தவிர, தமிழின் பழைய இலக்கியம் தமிழ்நாட்டின் நாட்டுப் பாடல்களிலிருந்து மலர்ந்த பாடல்கள். அந்தப் பாடல்களின் செய்யுள் வடிவமும் வேறு எந்த மொழியிலிருந்தும் கடன் வாங்கப்பட்டவை அல்ல; அவை மக்களிடையே வழங்கிவந்த நாட்டுப் பாடல்களிலிருந்து வடித்து அமைக்கப்பட்ட வடிவங்களே. அப்படிப்பட்ட பழமையும் தனிமையும் உடைய வளர்ச்சி தமிழ் இலக்கியத்திற்கு இருப்பதைப் பிற்கால வடமொழி அறிஞர் மறந்துவிட்டார்கள். மற்ற இந்திய மொழிகள் வடமொழியிலிருந்து கடன் பெற்று வளர்ந்தமை போலவே, தமிழும் வளர்ந்தது என்று தவறாகக் கருதி விட்டார்கள். அதனால் தமிழுக்குத் தர வேண்டிய உரிமையான சிறப்பைத் தராமல். அதுவும் வடமொழிக்கே ஆதிமுதல் கடன்பட்டது என்ற எண்ணத்தோடு தாழ்வாக நோக்கத் தொடங்கினார்கள். தமிழுக்கு எந்தப் பெருமையும் இல்லை, எல்லாப் பெருமையும் வடமொழிக்கே என்று வீண் வம்பு பேசத் தொடங்கினார்கள். இலக்கணக் கொத்து என்னும் நூலை எழுதிய சுவாமிநாத தேசிகர் என்னும் வடமொழி அறிஞர், இதை