நூல்களும் வடமொழியில்
உள்ள நூல்களின் மொழிபெயர்ப்பே என்று காரணப்பொருத்தம் இல்லாமல் தாழ்த்த முற்பட்டார்கள்.
தொல்காப்பியனார் தமிழுக்கு எழுதிய இலக்கண நூலும் அவ்வாறு வட மொழியிலிருந்து கற்று
எழுதப்பட்டது என்று கற்பனை செய்து, திரணதூமாக்கினி என்ற வடமொழிப் பெயர் அவருக்கு
இருந்ததாகவும் படைத்துக் கூறினார்கள். இராமாயணம், பாரதம், புராணங்கள், தத்துவ நூல்கள்
முதலியவை வட மொழியிலிருந்து கொள்ளப்பட்டவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இவை
தவிர, வேறு நூல்கள் தமிழில் இலக்கியமாகத் தோன்றி வளர்ந்தவை உள்ளன என்பதை மூடி
மறைக்க முயன்றார்கள். தமிழுக்கு உரிய சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி
இலக்கியம் முதலியவற்றைப் புறக்கணித்தார்கள். வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்,
மறைமலையடிகள் முதலான புலவர்கள் தோன்றித் தமிழுக்கு உள்ள இலக்கிய வளத்தை எடுத்துச்
சொன்ன பிறகே அந்தப் போலி முயற்சி அடங்கியது.
இருவகைத்
தமிழ்நடை
இந்தப்
போலி முயற்சிகள் இன்று அடங்கிவிட்டன. ஆயினும், இவற்றின் விளைவுகள் தீரவில்லை.
தமிழுக்குத் தாழ்வு கற்பிக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்புணர்ச்சி இன்னும் தணியவில்லை.
வடமொழிக்கே எல்லாப் பெருமையும் என்று மயங்கிக் கூறிய காலத்தில், சூரியநாராயண
சாஸ்திரியார் என்ற தமிழ் அறிஞர் தம் பெயரையும் வட சொல்லாக இல்லாமல் பரிதிமாற்கலைஞர்
என்று தமிழாக மாற்றிக்கொண்டார். சுவாமி வேதாசலம் என்ற அறிஞரும் தாம் வடமொழியை
நன்கு கற்றவராக இருந்தும், தம் பெயரை மறைமலையடிகள் எனத் தமிழாக்கிக்கொண்டார்.
இருவரும் தொடக்கத்தில் வட சொற்கள் கலந்தே எழுதிவந்தவர்கள். வட மொழி அறிஞர்களின்
போலி முயற்சியை எதிர்க்கும் போக்கில், அவர்கள் வட சொற்களே கலக்காமல் தனித்தமிழில்
எழுத முற்பட்டார்கள். சூரியநாராயண சாஸ்திரியார் மறைந்த பிறகு மறைமலையடிகள் நெடுங்காலம்
வாழ்ந்து, 1916 முதல் அதை ஓர் இயக்கமாகவே வளர்த்தார். அந்தத் தனித்தமிழ் இயக்கத்தின்
செல்வாக்கு இன்றும் உள்ளது. இன்றும் தமிழ் ஆர்வம் நிரம்பிய பலர் தம் பெற்றோர்
தமக்கு இட்ட வடமொழிப்பெயரை மாற்றித் தமிழ்ப் பெயர் சூட்டிக்கொள்கிறார்கள்.
ஆங்கிலச் சொல் கலந்தாலும் கலக்கலாம், தமிழைத் தாழ்வுபடுத்திக் குறைகூறுவதற்குக்
காரணமான வட சொல் கலக்கக்கூடாது என்று வெறுப்போடு வடசொற்களை விலக்குகிறார்கள்.
தமிழ்ப் புலவர்கள் வட சொல் கலக்காத தனித் தமிழில் எழுதுவதே தம் கடமை என்று உணர்ந்து
எழுதிவருகிறார்கள். வடமொழி அறிஞர்கள் யார் யாரோ
|