|
உலா
கோயிலில் தெய்வம் அலங்காரச் சிறப்புகளுடன் பரிவாரங்கள்
சூழப் புறப்பட்டுப் பெரிய தெருக்களில் (மாட வீதிகளில்) உலா வருவது உண்டு. தெய்வம்
புறப்படுவதுமுதல் சுற்றித் திரும்பி வருவதுவரையில் எல்லா நிலையிலும் தெய்வத்தைப் போற்றிப்
புகழ்ந்து பாடல்கள் பாடப்படுவது வழக்கமாக இருந்தது; புறப்படுவதற்கு முன் அந்தத் தெய்வத்தின்
பெருமையும் அற்புத வீரச்செயல்களும் போற்றிக் கூறப்படுவதும், புறப்படும்போது பரிவாரமாகச்
சூழ்ந்து வருவோரின் விளக்கங்கள் கூறப்படுவதும், உலா வரும்போது தேவதாசியர் பலர்
தெய்வத்தைக் கண்டு காதல் கொள்வதுபற்றி எடுத்துரைப்பதும் முற்காலத்தில் நாட்டுப்
பாடல்களாக வழக்கத்தில் இருந்தன. அந்த நாட்டுப் பாடல்கள் எல்லாம் அந்தந்த ஊர்களில்
சிறுசிறு வேறுபாடுகளோடு வழங்கியிருக்க வேண்டும். முதல்முதல் புலவர் ஒருவர் ஓர் ஊரில்
கோயில் விழாவை நன்றாக ஆராய்ந்து. அந்தப் பாடல்களைப்போல் பாடி ஒரு நூலாக அமைத்துத்
தர வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அவ்வாறு அவர் இயற்றிய இலக்கிய வகையே உலா
என்று பெயர் பெற்றது. இப்போது கிடைக்கும் உலா நூல்களுள் மிகப் பழமையானது கி. பி.
ஒன்பதாம் நூற்றாண்டில் சேரமான் பெருமாள் நாயனாரால் பாடப்பெற்ற திருக்கைலாய ஞான
உலா என்பது. அதனால் அதற்கு ஆதியுலா என்ற பெயரும் வழங்குகிறது.
திருக்கைலாய ஞான உலாவில் போற்றப்படும் தெய்வம்
சிவ பெருமான். சிவலோகத்தில் தேவர்கள் எல்லோரும் கூடிச் சிவ பெருமான் உலா வந்து
காட்சி தரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்கள். சிவபெருமான் அவர்களின் வேண்டுகோளுக்கு
இசைகிறான். பார்வதி கடவுளுக்கு எல்லா வகையான அணிகளையும் அணிவித்து அலங்காரம் செய்கிறாள்.
சூட்டிக்கொள்வதற்கு உரிய மாலை மன்மதனால் தரப்படுகிறது. சந்தனம் பூசி, குண்டலம்
முதலியவை பூண்டு சிவன் கிளம்புகிறான். நந்தியும் மாகாணரும் காவல் புரியும் கைலாய
வாயில்களைக் கடந்து சிவன் வெளிவருகிறான். முனிவர்கள் எழுவரும் வாழ்த்து மொழிகிறார்கள்.
ஆதித்தர் பன்னிருவர் பல்லாண்டு பாடுகிறார்கள். அகத்தியர் யாழ் இசைக்கிறார்.
அக்கினித் தெய்வம் நறும்புகை ஏந்துகிறான். வருணன் நிறைகுடம் ஏந்துகிறான். வாயு வீதிகளைத்
தூய்மை செய்ய, மேகம் நீர் தெளிக்கிறது. சந்திரன் குடை பிடிக்கிறான். குபேரன் தானமாகப்
பொருள்களை வீசுகிறான். கங்கையும் யமுனையும் கவரி வீசுகிறார்கள். மின்னல்களே கொடிகள்.
இடிகளே முரசுகள். அரம்பை, ஊர்வசி முதலானோரின் நாட்டியம் நடைபெறுகிறது. இவ்வாறே
மற்றத் தேவர்களும் தம்மால் இயன்ற
|