|
வரையறை
இல்லாமையால், விருத்தம் பலவகையாக விரிவு அடைந்தது. ஒரு விருத்தத்தின் அடிகள் நீண்டு
ஒலிக்கலாம்; மற்றொரு விருத்தத்தின் அடிகள் குறுகி ஒலிக்கலாம். சிறுசிறு சீர்கள்
கொண்ட ஒரு விருத்தம் பரபரப்பாகவோ துடிதுடிப்பாகவோ ஒலிக்கலாம். நீண்ட சீர்கள்
கொண்ட மற்றொரு விருத்தம் ஆழமுடையதாகவோ, அமைதியுடையதாகவோ, உணர்ச்சி நீண்டதாகவோ
ஒலிக்கலாம். ஆகவே, விருத்தம் என்ற பெயர் கொண்ட ஒரு செய்யுள்வகையாக இருந்தாலும்,
அது நூற்றுக்கணக்கான ஓசை வேறுபாடுகளைப் படைத்துக் காட்ட இடம் தந்தது. பழைய வெண்பாவிலும்
அகவலிலும் முடியாத இது இந்த விருத்தம் என்ற செய்யுளால் முடிந்தது. திருத்தக்கதேவர்க்குப்
பிறகு வந்த புலவர்கள் பலரும் இந்தச் செய்யுளில் பல புதுமைகளைப் படைப்பதிலும், பாட்டின்
பல்வகை உணர்ச்சி வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு பல்வகை ஓசைவேறுபாடுகளை அவற்றில் அமைப்பதிலும்
தம் திறமையைக் காட்டத் தொடங்கினர். தமிழ்க் கவிதையில் ஏற்பட்ட இந்த புரட்சியால்
உணர்ச்சிக்கு ஏற்றவாறு கவிதையின் நடையை மாற்றியமைக்கும் வடிவச் சிறப்பு மேன்மேலும்
வளர்ந்து பெருகத் தொடங்கியது. திருத்தக்கதேவரைவிடக் கம்பர் முதலான புலவர்கள்
இதில் வெற்றி பெற்று விளங்கினர் ஆயினும், இவ்வகையில் வழிகாட்டிய பெருமை திருத்தக்கதேவரையே
சாரும்.
திருத்தக்கதேவர்
முதலில் இயற்றியது நரிவிருத்தம் என்ற சிறுநூல் ஆகும். அது நரியின் செயலைக் கொண்டு
நீதியை வற்புறுத்தும் நூல். இந்த ஆசிரியரின் திறமையை அறிவிப்பதற்காக முதலில் இது
இயற்றப்பட்டது என்பர்.
சீவக
அரசனின் கதைபற்றி இவர் எழுதிய காப்பியம் சீவக சிந்தாமணி எனப்படும். காப்பியத்
தலைவனான சீவகன் எட்டுப் பெண்களை மணந்துகொள்வதாலும், அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும்
ஒவ்வோர் இலம்பகம் பாடப்படுவதாலும் இந்த நூலுக்கு மண நூல் என்னும் பெயர் உண்டு. இறுதியில்
சைனசமயக் கொள்கையின்படி சீவகன் துறவுபூண்டு முத்திபெறுவதைக் கூறும் பகுதி முத்தியிலம்பகம்
எனப்படும். அந்த முத்தியே முடிந்த முடிவாக வற்புறுத்தப்படும் சைன சமயக் கொள்கையினை
ஒட்டி, முத்தி நூல் என்றும் இதனைக் கூறுவது உண்டு. இதுவும் வடமொழியில் உள்ள க்ஷத்திர
சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஸ்ரீபுராணம் முதலிய நூல்களில் உள்ள கதையைத் தழுவி இயற்றப்பட்டதாகும்.
படிப்பவர்க்கு இது தழுவல் நூல் என்ற எண்ணமே ஏற்படாமல், சிலப்பதிகாரம்போல் தமிழர்
உவந்து போற்றத்தக்க வகையில் சுவையான தமிழ்க் காப்பியமாக அமைந்துள்ளது. சைன
முனிவர் ஒருவர் தம்சமயக் கொள்கையை வற்புறுத்தி இயற்றிய நூலாக இருந்தபோதிலும்,
வருணனைகள் முதலியன தமிழிலக்கிய மரபை ஒட்டி அமைந்திருப்பதாலும்,
|