பக்கம் எண்: - 158 -

மறுப்பதற்காகவே - சமய நோக்கம் கொண்டே - அவர் அதை இயற்றினார் என்று அறிகிறோம். அந்நூலின் செய்யுள்ளாக இப்போது கிடைப்பவை 29 மட்டுமே ஆகும்.

அதை மறுத்துச் சைன சமயத்தின் சிறப்பை நிலைநிறுத்த ஒரு புலவர் முன்வந்தார். அவர் எழுதிய காப்பியம் நீலகேசி என்பது. அந்நூலில் வரும் நீலி என்னும் பெண் சைன முனிவர் ஒருவரின் மாணவி ஆகிறாள். அவள் குண்டலகேசியை எதிர்த்து வாதிட்டுத் தோல்வியுறச் செய்கிறாள். பிறகு பௌத்தத் துறவியார் ஒருவரிடம் சென்று, பௌத்த பிட்சுகளின் ஒழுக்கக் கேடுபற்றி எடுத்துச் சொல்லி வாதம் செய்கிறாள். தொடர்ந்து வேறு பௌத்தத் துறவிகளைக் கண்டு சைன சமயச் சிறப்புகளை எடுத்துக் கூறி விளக்குகிறாள். இவ்வாறே 894 விருத்தங்கள் கொண்ட இந்த நூல் முழுதும் பிற சமய எதிர்ப்பும் சைன சமயப் போற்றுதலுமாகச் சமயக்கொள்கைகளே ஓங்கியுள்ளன. சமய விளக்கம் இடம் பெற்ற அந்த அளவிற்கு இலக்கியச் சிறப்பு இடம் பெறவில்லை.

வாமனாச்சாரியார் இயற்றிய மேரு மந்தர புராணமும் சைனக் காப்பியம் ஆகும். பல பிறவிகள் எடுத்து அலைந்தபிறகு, சகோதரர் இருவர் தவம் செய்து பிறப்பு ஒழித்து முத்தி பெற்றதை விளக்கும் நூல் அது.

சாந்திபுராணம் என்ற பெயருள்ள வேறொரு சைன நூலும் தமிழில் இருந்திருக்கிறது. அதுவும் விருத்தச் செய்யுளால் இயற்றப்பட்டது. இப்போது ஒன்பது செய்யுள்கள்மட்டுமே எஞ்சியுள்ளன. சைன தீர்த்தங்கரருள் ஒருவருடைய வரலாற்றை விளக்குவதற்காக இயற்ப்பட்ட நூல் அது.

நாககுமார காப்பியம் என்பதும் சைன சமயத்தை வலியுறுத்தி எழுதப்பட்ட காப்பியமாம். அந்த நூல் ஒரு செய்யுளும் எஞ்சாமல் மறைந்தது.

யசோதர காப்பியம் என்பதில் 330 செய்யுள்கள் உள்ளன. எல்லாம் விருத்தங்களே. வடமொழியில் உள்ள யசோதர சரிதத்தைத் தழுவி எழுதப்பட்ட சைன நூல் இது. இதில் உயிர்க்கொலை கூடாது என்னும் கொள்கை மிக வற்புறுத்திக் கூறப்பட்டுள்ளது. சீவகசிந்தாமணியும் சூளாமணியும் சைன சமயக் கொள்கைகளை வற்புறுத்தும் நூல்களே ஆயினும், இலக்கியத்திற்கு உரிய சிறப்புகள் எல்லாம் அவற்றில் குறையாமல் உள்ளன. யசோதர காவியத்தைப் பற்றி அவ்வாறு கூறுவதற்கு இல்லை.

சைவ வைணவ நூல்களுக்குப் போட்டியாய்ச் சைனரும் பௌத்தரும் இயற்றிய காப்பியங்களைக் கற்ற பிற்கால அறிஞர் சிலர் அவற்றை ஒரு பாகுபாட்டுக்குள் அமைக்க விரும்பினர். ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் என்று இரண்டாகப் பாகுபாடு செய்தனர். ஆனால் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று பெருமை சிறுமைகளைக் கற்பனை