பக்கம் எண்: - 191 -

இடையர்களின் தலைவனைப் பார்த்தும் பாடும் முறையில் அமைந்தவை; கருத்தெல்லாம் கடவுளைப்பற்றியும் ஞானநெறியைப்பற்றியும் அமைந்திருக்கும். மனம் என்னும் கரணத்தை ஒரு பேயாகக் கருதிப் பாடுபவர் அகப்பேய்ச் சித்தர். குதம்பை என்னும் காதணி அணிந்த பெண்ணை விளித்துப் பாடும் முறையில் பாடல்களை அமைத்த காரணத்தால் ஒருவர் குதம்பைச் சித்தர் என்று குறிக்கப்பட்டார்.

மாங்காய்ப் பால்உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி

என்பது அவருடைய பாடல்களுள் ஒன்று. மாங்காய், தேங்காய், பால் என்பன வெளிப்படையாகத் தெரிந்த எளிய சொற்கள். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மறைபொருள் அமைத்துப் பாடியுள்ளார்.

உள்ளங்கால் வெள்ளெலும்பு ஆகத் திரியினும்
வள்ளலைக் காணுவையோ - குதம்பாய்
வள்ளலைக் காணுவையோ?

இவ்வாறே சித்தர் பாடல்கள் பல, தெளிந்த நடையில் எளிய சொற்களில் அமைந்து ஆழ்ந்த நுண்பொருள் உணர்த்துவனவாக உள்ளன.

சைவ சாத்திரங்கள்

சைவ நாயன்மார்களின் பாடல்களாக உள்ள பக்தி நூல்கள், சைவசித்தாந்த சமயத்தின் தோத்திர நூல்கள் எனப் போற்றப்படும். கி. பி. 12, 13, 14-ஆம் நூற்றாண்டுகளில் உய்யவந்த தேவநாயனார் முதலானவர்களால் இயற்றப்பட்ட பதினான்கு நூல்கள் சைவசித்தாந்த சமயத்தின் சாத்திர நூல்கள் எனப்படும். அவற்றை இயற்றியவர்கள் புலமை நிரம்பியவர்கள்; அக்காலத்தின் தேவைக்கு ஏற்ப, இலக்கியம் இயற்றாமல். சாத்திரங்கள் இயற்றினார்கள். அந்தச் சாத்திர நூல்களில் பெரும்பாலானவை, இலக்கிய மரவை ஒட்டி, பழைய நூல்களின் வாய்பாடுகளை அமைத்து இயற்றப்பட்டுள்ளன. உய்யவந்த தேவநாயனார் இயற்றிய திருவுந்தியார் எனப்படுவது, பெண்கள் உந்தீ பற என்று சொல்லி விளையாடிப் பாடும் பாடலின் வடிவில் அமைந்தது; அழகான நடையில் உயர்ந்த சமய உண்மைகளை விளக்குவது. திருக்களிற்றுப்படியார் அவர் வழி வந்த சான்றோர் ஒருவர் இயற்றிய செய்யுள் நூல். பதி பசு பாசம் என்னும் முப்பொருள் உண்மையை விளக்கிச் சைவ சித்தாந்தத்தின் அடிபடைநூலாக விளங்குவது சிவஞானபோதம். அது மெய்கண்டார் இயற்றியது. பன்னிரண்டு சூத்திரங்கள் உடையது. அவருடைய நாற்பத்தொன்பது மாணவர்களுள் தலையானவராகிய அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார்