மண்அலை யாமல்
வளர்க்கின்ற வாணன்தென் மாறைவெற்பில் |
அண்ணலை ஆயிழை பாகன்என்று அஞ்சினம் அஞ்சனம்தோய் |
கண்அலை நீர்இடப் பாகமும் மேலவந்த கைக்களிற்றின் |
புண்அலை நீர்வலப் பாகமும் தோயப் பொருதஅன்றே. |
இவ்வாறு கோவையின் ஒவ்வொரு பாட்டும்
ஒவ்வொரு புகழ்ச்சியையோ உணர்ச்சியையோ எடுத்துக்கூறி, நானூறு பாட்டுகளால் ஆகிய தொடர்ந்த
கதைபோல் அமைந்திருக்கும். அவற்றுள் பல பாட்டுகள் கற்பனைச் சுவையுடன் விளங்கும்.
உரையாசிரியர்கள்
முன்னமே தமிழ்நாட்டில் இருந்த கோயில்கள்,
பெரிய பெரிய கட்டடங்களும் இக்காலத்தில் சிற்ப வேலைப்பாடுகள் நிரம்பிய மண்டபங்களும்
பெற்று விளக்கம் உற்றன. முன்னமே இருந்த சமய நூல்கள், விரிவான விளக்கங்களும் துணை
நூல்களும் பெற்று விரிவு அடைந்தன. அவைபோலவே, முன்னமே இருந்த உயர்ந்த இலக்கியங்கள்,
உரையாசிரியர்களால் நுட்பமான உரைகளும் நயமான விளக்கங்களும் பெற்றுச் சிறப்பு அடைந்தன.
உரைகளும் விளக்கங்களும் எழுதியவர்கள்
இலக்கிய வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் நல்ல தொண்டு புரிந்தார்கள். அவர்கள்
எல்லோரும் கற்றுத் தெளிந்த அறிஞர்கள். அவர்களின் எழுத்துகளிலேயே பழைய தமிழ்
உரைநடை இன்று காணமுடிகிறது. எட்டாம் நூற்றாண்டில் களவியல் என்னும் நூலுக்கு நக்கீரர்
என்னும் உரையாசிரியர் எழுதிய உரையே அவ்வகையில பழமையானது. அது செறிவும் செழுமையும்
உடையது. ஆயினும் செய்யுளில் சீர்கள் அமைப்பதுபோலவே சொற்கள் அளவுபட்டு அமைந்து
எதுகையும் மோனையும் நிரம்பிய அந்த நடை உரைநடையாக இல்லாமல், செய்யுள் நடை போன்றே
உள்ளது. அந்த உரைக்கு அடுத்த பழமை உடையது தொல்காப்பியம் முழுமைக்கும் இளம்பூரணர்
எழுதிய உரையாகும். பிறகு வந்த உரையாசிரியர்கள் அவருடைய பெயரைச் சுட்டாமல் உரையாசிரியர்
என்ற பெயராலேயே குறிப்பிடுவர். இது அவருடைய சிறப்புக்குச் சான்றாக உள்ளது. நக்கீரரின்
உரைநடைபோல் அலங்கார நடையாக இல்லாமல், இளம்பூரணரின் உரைநடை எளிமையும் தெளிவும்
பெற்றுள்ளது. அவருடைய காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனலாம்.
அடுத்துப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியத்தில் ஒரு பகுதிக்கும் திருக்கோவையார்க்கும்
உரை எழுதியவர் பேராசிரியர் என்று வழங்கப்படுபவர். அவருடைய நடை செறிவும் செம்மையும்
வாய்ந்தது. சேனாவரையர் தொல்காப்பியத்தின் இரண்டாம் பகுதிக்கு உரை எழுதினார்.
திட்பநுட்பம் செறிந்த நடை அவருடையது.
|