பக்கம் எண்: - 195 -

ஓரிடத்தில் கூறியதை மறுபடியும் கூறாத செறிவும், உணர்த்தும் பொருளுக்கு ஏற்றபடி சொற்களை வரையறுத்து நிறுத்து எழுதும் திறனும் அவருடைய உரையின் சிறப்பியல்புகள். வேண்டாத அடைமொழிகளுக்கு இடம் தராமல், நேரிய முறையில் உரிய பொருளை விளக்குமளவிற்கே சொற்களை அளந்து பயன்படுத்துவார். செறிவு, நுட்பம், நேர்மை ஆகிய பண்புகள் அமையத் தமிழ் உரைநடையைக் கையாண்டவர் அவர். இக்காலத்து அறிவியல் (சயன்ஸ்) கருத்துகளுக்கு ஏற்றது அவருடைய நடை. அவருடைய திருக்குறள் உரையின் நுட்பத்திலும் செம்மையிலும் உள்ளத்தைப் பறிகொடுத்த சைவ சமயச் சான்றோர் உமாபதி சிவாச்சாரியார் என்பவர், உயர்ந்த தமிழ் நூல்களின் பட்டியலைத் தரும்போது திருக்குறள் ஒன்றாகவும் பரிமேலழகர் உரை மற்றொன்றாகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார். பதினேழாம் நூற்றாண்டில் இருந்த திருமேனி இரத்தின கவிராயர் என்பவர் அவருடைய உரையில் உள்ள அரிய கருத்துகளை விளக்கி ‘நுண்பொருள் மாலை’ என்ற தனி நூலையே இயற்றினார்.

பெயர் அறியப்படாத அறிஞர்களின் உரைகள் வேறு சில இலக்கிய நூல்களுக்கு அமைந்தன. மயிலைநாதர், கல்லாடர், தெய்வச்சிலையார் முதலியவர்கள் இலக்கண நூல்களுக்கு உரை எழுதியவர்கள்.

பொதுவாக, இந்த உரையாசிரியர்களின் நடை எல்லாம் வடசொல் குறைவாகக் கலந்த நடை அல்லது தூய தமிழ்நடை என்று கூறுமாறு உள்ளன. ஆயின், ஆழ்வார்களின் பாடல்களுக்கு உரை எழுதியவர்கள், வடசொற்களும் தமிழ்ச்சொற்களும் விரவிக் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதினார்கள் (முத்தும் பவளமும் கலந்த மாலைபோல் தமிழும் வடமொழியும் கலந்த நடை என்னும் பொருளில் அந்த நடைக்கு மணிப்பிரவாளம் என்ற பெயர் வழங்கினார்கள்). பக்திப் பாடல்களின் பொருளாழத்தையும் பலவகை நயங்களையும் விளக்குவதில் அவர்களின் உரைகள் நிகரற்று விளங்குகின்றன. அவர்கள் கல்வி வல்ல அறிஞர்களாகமட்டும் நிற்காமல், சமயத்துறையில் ஈடுபட்டுத் தம்வாழ்வைத் தியாகம் செய்த சான்றோர்களாகவும் வாழ்ந்தமையால், அவர்களின் உரைகள் சாத்திர நூல்கள்போல் வைணவ அறிஞர்களால் அறவற்ற பக்தியுடன் போற்றப்படுகின்றன.

வடமொழி இதிகாசங்களையும் சைன சமய நூல்களையும் தழுவித் தமிழில் நூல்கள் இயற்றப்பட்ட இக்காலத்தில், புலவர்கள் வீரம்பற்றியும் காதல்பற்றியும் தனித்தனிப் பாடல்கள் பாடும் வழக்கம் குன்றியது. வடநூல்களிலிருந்து கதைகளையும் வருணனைகளையும் கடன்வாங்கும் பான்மை வளர்ந்தது. வாழ்க்கையில் உள்ளவற்றைப் பாடும் மரபைக் கடந்து