பக்கம் எண்: - 223 -

           ஓர்தட்டி லேபொன்னும் ஓர்தட்டி லேநெல்லும் ஒக்கவிற்கும்
           கார்தட் டியபஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்
           ஆர்தட் டினும்தட்டு வாராமலே அன்ன தானத்துக்கு
           மார்தட் டியதுரை மால்சீதக் காதி வரோதயனே.

வேலூர்க் கலம்பகம் என்பதும் அவரால் இயற்றப்பட்டது.

           மட்டாலும் தென்களந்தைப் படிக்காசான்ன்
                உரைத்ததமிழ் வரைந்த ஏட்டைப்
           பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும்
                பரிமளிக்கும் பரிந்துஅவ் ஏட்டைத்
           தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும்
                வாய்மணக்கும் துய்ய சேற்றில்
           நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே
                பாட்டில் உறுநளினம் தானே.

என்று சொக்கநாதர் இவரைப் புகழ்ந்து பாடியுள்ள பாட்டால் இவர் பெற்றிருந்த சிறப்பு விளங்குகிறது.

நல்லாப்பிள்ளை

பதினெட்டாம் நூற்றாண்டில் பாரதத்தைக் கற்பதும் சொற்பொழிவு  செய்வதும் தமிழர்களிடையே செல்வாக்குப் பெற்றன. வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் அவ்வகையில் பெரிதும் பயன்பட்ட நூல். அந்நிலையில் பாரதக் கதையை மேலும் விரிவுடையதாக்க வேண்டும் என்ற எண்ணம் சிலர்க்கு ஏற்பட்டது. வில்லிபாரதம் சுருக்கமாக உள்ளது என்ற குறையைப் போக்க முயன்றார்கள். அம் முயற்சிக்கு உதவியாக முன்வந்த புலவர்கள் நல்லாப்பிள்ளையும் முருகப்ப உபாத்தியாயரும் ஆவர். வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதத்தில் உள்ள நாலாயிரத்து முந்நூறு செய்யுளோடு மேலும் பதினாயிரத்து நானூறு செய்யுள் பாடி விரிவாக்கியவர்கள் அவர்கள். அவர்களுள் நல்லாப்பிள்ளையே மிகுதியான செய்யுள்பாடிய காரணத்தால் அவர் பெயராலே நூல் வழங்குகிறது. இன்றும் பல ஊர்களில் பாரதக் கதை இருபது முப்பது நாட்கள் சொற்பொழிவு செய்யப்பட்டுப் பெரிய விழா நடப்பது உண்டு. அப்போதெல்லாம் பாரதப் பிரசங்கியார் நல்லாப்பிள்ளை பாரதத்தைப் பயன்படுத்திப் பல்வேறு கிளைக்கதைகளையும் விரிவாக எடுத்துரைப்பது உண்டு. வில்லிபுத்தூராரின் செய்யுள்போலவே ஓசையும் நடையும் அமையப் பாடிச் சேர்த்த காரணத்தால், இந்தப் பிற்காலத் தொண்டு அந்தப் பழைய நூலோடு இயைந்த இலக்கியப் படைப்பாகவே விளங்குவதாயிற்று.