11.
பத்தொன்பதாம் நூற்றாண்டு
அச்சு
யந்திரங்களும் உரைநடையும்
பதினாறாம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டுக்கு அச்சு யந்திரங்கள்
வந்தன. இந்திய மொழிகளில் முதல்முதலில் தமிழ்எழுத்துகளிலே அச்சிடும் முயற்சி கி.பி.
1577-இல் நடந்தது. கிறிஸ்தவப் பாதிரிமார்கள் தம் சமய நூல்களை அச்சிட்டார்கள்.
பாதிரிமார்களிடத்திலும் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடத்திலும்மட்டுமே பதினேழு
பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அச்சு யந்திரங்கள் இருந்தன. பொதுமக்களின் கைக்கு
வரவில்லை. பத்தொன்பதாம் நுற்றாண்டில்தான் இந்தியமக்கள் அச்சு யந்திரத்தைப்
பயன்படுத்தும் உரிமை பெற்றார்கள். அதன் பிறகே பனைஓலையில் ஏட்டுச்சுவடிகளாக இருந்த
நூல்களை அச்சிடத் தொடங்கினார்கள்; புதிய உரைநடை நூல்களை எழுதி அச்சிடும் முயற்சியிலும்
ஈடுபட்டார்கள். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தம்தம் சமயங்களைப் பரப்புவதற்குத்
தமிழில் நூல்கள் எழுதி அச்சிட்டபடியால், இந்துக்களும் தம் சமயத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக
நூல்கள் எழுதி அச்சிடுதல் தேவையாயிற்று. இவ்வாறு சமய நூல்களை அச்சிடுவதற்கு பயன்படுத்திய
கருவிகள், பிறகு இலக்கிய நூல்களை அச்சிடுவதற்கும் பயன்பட்டன. பழைய செய்யுள் இலக்கியம்,
புதிய செய்யுள் இலக்கியம், புதிய உரைநடை நூல்கள், திங்கள் இதழ், வார இதழ் முதலியவற்றை
அச்சிட்டுப் பரப்புவதற்கு அச்சுக் கருவிகள் நன்றாக பயன்பட்டன. ஆங்கிலேயரின் கல்விமுறையைப்
பின்பற்றி இந்நாட்டில் கல்வி நிலையங்கள் ஊர்தோறும் ஏற்படுத்தப்பட்டன. அங்குக்
கற்கும் மாணவர்களுக்கு உரிய பாடநூல்களை அச்சிட்டுத் தரவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தப்
பாட நூல்களின் வாயிலாகவும் தமிழில் உரைநடை வளர்ந்தது. ஏட்டுச் சுவடிகள் விலையுயர்ந்தவை;
அவற்றைச் சில செல்வர்கள்மட்டுமே வாங்க முடிந்தது; அச்சிட்ட நூல்கள் குறைந்த விலைக்குக்
கிடைத்தமையால், பலர் வாங்கிப் படிக்க முடிந்தது. ஆகவே, நூல்களை வாங்கிப் படிப்பவரின்
எண்ணிக்கையும் திடீரென உயர்ந்துவிட்டது. அதனால் உரைநடை நூல்கள் எழுதுவதற்கு ஏற்ற
சூழ்நிலை அமைந்து, பலர் நூல்களும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார்கள். ஆகவே, இத்தனை
நூற்றாண்டுகளாக இயற்றப்பட்ட நூல்களைவிடப் பலமடங்கு நூல்கள் இந்த இரு நூற்றாண்டுகளில்
எழுதப்படலாயின. தரமான இலக்கியங்கள் பல உண்டா என்று ஐயுறலாம். தரமானவற்றின் தொகை
பெருகாவிட்டாலும்,
|