பிள்ளைத்தமிழ்’ என்பது அது. அவருடைய இந் நூல்களில் பழந்தமிழ்
இலக்கியங்களில் உள்ள வருணனைகளும் கற்பனைகளும் கருத்துகளும் கலந்து அமைந்திருக்கும்.
பாகவதத்தில் உள்ள குசேலருடைய கதையைக் ‘குசேலோ பாக்கியானம்’
என்ற காப்பியமாக அவரும் அவருடைய மாணவர் தேவராசபிள்ளையும் இயற்றினார்கள் என்று
கூறுவர். அந்த நூல் அழகான விருத்தப் பாடல்களால் ஆகியது; செம்மையான நடை உடையது.
இராமலிங்கர்
இராமலிங்க சுவாமிகள் (1823 - 1874) இளமையிலேயே கவிதை
பாடும் கலைச்செல்வம் வாய்க்கப்பெற்றவர். கல்வியின் சிறப்பால் பாடத் தொடங்கவில்லை
என்றும், கடவுளின் அருளால் தான் பாட முடிந்தது என்றும் அவரே நம்பினார். தம் பாடல்களில்
பல இடங்களிலும் அவ்வாறே குறிப்பிட்டார். அவருடைய பாடல்கள் அச்சிடப்பட்டு ‘அருட்பா’
என்ற பெயரால் வெளியிடப்பட்டபோது, நீதி மன்றத்தில் அது தவறு என்று வழக்குத் தொடரப்பட்டது.
யாழ்ப்பாணத்துப் பெரும் புலவராகிய ஆறுமுக நாவலரும் அவரைச் சார்ந்தவர்களும் வழக்குத்
தொடுத்தார்கள். நாயன்மார்களின் தேவாரம், திருவாசகம் ஆகியவைகளே அருட்பா என்னும்
பெயர்க்கு உரியவை என்பது ஆறுமுக நாவலரின் கொள்கை. ஆயினும் ஒரு முறை நீதிமன்றத்துக்குள்
இராமலிங்க சுவாமிகள் நுழைந்தபோது, மற்றவர்களோடு சேர்ந்து ஆறுமுக நாவலரும் எழுந்துநின்று
வணக்கம் செலுத்தினாராம். எதிரியாகிய அவரை அவ்வாறு எழுந்து நின்று வணங்கியது ஏன்
என்று ஆறுமுக நாவலரைச் சிலர் கேட்டார்களாம். “அவருடைய பாடல்களை அருட்பா அல்ல என்று
மறுத்தேனே தவிர, நான் அவரைக் குறை கூறவில்லையே! அவர் உயர்ந்த சான்றோர்; உண்மையான
ஒழுக்கத்தின் திருவுருவம்; அதனால் அவரை மதிக்கிறேன், போற்றுகிறேன்” என்றாராம்.
அவ்வாறு வாழ்ந்த காலத்திலேயே பலரும் வணங்கிப் போற்றும்படியான தூய வாழ்க்கை நடத்தினார்
இராமலிங்க சுவாமிகள். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று அவர் பாடியிருக்கிறார்.
அவ்வளவு இரக்கம் மிகுந்த நெஞ்சம் உடையவராய், பிறருடைய துன்பங்களைக்கண்டு உருகிக்
கண்ணீர் சொரிபவராய், கருணை நிறைந்த வாழ்க்கை நடத்திய ஞானி அவர். ‘எனக்கு முத்தி
பெற வேண்டும் என்ற இச்சையும் இல்லை. உலகத்து உயிர்க்கெலாம் இன்பம் செய்வது என்
இச்சையாம், எந்தையே’ என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறார். பிள்ளைச் சிறுவிண்ணப்பம்,
பிள்ளைப் பெருவிண்ணப்பம் என்ற இரு பகுதிகளில் அவருடைய தூய உள்ளம் - இரக்கமே வடிவான
உள்ளம் - புலப்படுகிறது.
|