பக்கம் எண்: - 247 -

           நேர்வந்து நின்னைக் கண்டு நேற்றுஇராத் திரியே மீண்டேன்;
           ஊர்வந்து சேர்ந்தேன் என்றன் உளம்வந்து சேரக் காணேன்;
           ஆர்வந்து சொலினும் கேளேன்; அதனைஇங்கு அனுப்புவாயே!

பழைய விருத்தப்பாவால் பாடியபோதிலும், உரைநடையைவிட எளிமையாக அமைந்துள்ளது. அவருக்குத் தமிழ் அவ்வளவு இயல்பாக வந்து உதவியது.

கிருஷ்ண பிள்ளை

வைணவராகப் பிறந்து வளர்ந்து தம் முப்பதாம் வயதில் கிறிஸ்தவராக மாறி, கிறிஸ்து பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு வாழ்ந்த தமிழ்ப் புலவர் கிருஷ்ணபிள்ளை (1827 - 1900), அவர் இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக் குறள் என்னும் நூல்களை இயற்றினார். அவர் கம்பராமாயணத்தை நன்கு கற்றவர் என்பதை, அவருடைய செய்யுள்களின் நடையையும் கற்பனையையும் தமிழ் வளத்தையும் கொண்டு உணரலாம். அவற்றுள் சிறந்த நூலாகிய இரட்சணிய யாத்திரிகம் என்பது 3800 செய்யுள் கொண்ட காப்பியம். அந்தக் காலத்தில் புலவர்களின் திறமைக்குச் சான்றாகப் போற்றப்பட்ட சொல்லணிகள் - யமகம், திரிபு, சிலேடை, மடக்கு முதலியவை அமைந்த செய்யுள்கள் இருபத்தொன்று உண்டு. மற்றப் பாட்டுகள் இனிய எளிய சொற்களால் அழகான நடையில் அமைந்துள்ளன. இது ஜான் பனியன் என்னும் ஆங்கிய அறிஞர் எழுதிய பரதேசியின் முன்னேற்றம் (Pilgrim’s Progress) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. தமிழ் மக்கள் விரும்பத்தக்க வகையில் தமிழ் மரபுகள் அமைய நூலை இயற்றியுள்ளார். இதில் உள்ள பக்திப் பாடல்கள் ஆழ்வார் நாயன்மார்களின் பாடல்களைப் போல் உருக்கமான முறையில் அமைந்துள்ளன. பாவமுள்ள உயிர் கவலையால் நொந்து கிறிஸ்துவின் அருளால் திருந்தி மோட்சம் அடைவதை இந்தக் காப்பியம் விளக்கிக் கூறுகிறது. காப்பியத்தின் தலைவராக உள்ளவர் ஏசு கிறிஸ்து.