பக்கம் எண்: - 258 -

க. வேந்தனார் என்பவரும் நல்ல கவிதைகள் பல இயற்றியவர். செல்வராசன் என்பவர் ‘தான்தோன்றிக் கவிராயர்’ என்ற பெயரால் புதிய செய்யுள் வடிவங்களில் புதிய கருத்துகளைத் தருபவர். அவர் பல கவிதைகளோடு புது வகையான வானொலி நாடகங்களும் தந்தவர்.

விஞ்ஞானப் பொருள்களைப்பற்றிக் கவிதைகள் எழுதிப் புதுமை செய்துள்ளார் சிவானந்தன் என்னும் இலங்கைக் கவிஞர். அவருடைய ‘கண்டறியாதது’ என்னும் கவிதைத் தொகுப்பில் டைனமோ, பெட்ரோமாக்ஸ், கிராமபோன், ஈர்ப்புமையம் (Centre of gravity) முதலான பலவற்றைப்பற்றிய கவிதைகள் நல்ல கற்பனையுடன் கூடி அமைந்துள்ளன. கந்தையா, வடிவேலு, ஆச்சிமுத்து என்பவர்கள் அந்த விஞ்ஞானப் பொருள்களைப்பற்றிப் பேசிக்கொள்ளும் உரையாடலாகக் கவிதைகள் இயற்றப்பட்டுள்ளன.

சிறுவர்க்கான பாடல்கள் பலவற்றை அழகாகப் பாடித் தந்துள்ளார்கள் இலங்கைக் கவிஞர்கள், அவர்களுள் வேந்தனார் என்பவர் ஒருவர். பள்ளிக்கூடச் சிறுவன் தன் தாயைப் போற்றுவதாகப் பாடியுள்ள பாட்டு ஒன்றில், பள்ளிக்கூடம் விட்டுச் சிறுவன் வீட்டுக்குத் திரும்பும்போது தாய் எதிரே பாதி வழி வந்து மகனைத் தூக்கித் தோள்மேல் ஏந்திச்சென்று மகிழ்வதை உருக்கமாகப் பாடியுள்ளார். எளிய சொற்களில் அந்த உருக்கம் இனிமையாக அமைந்து, சிறுவன் கூறும் மொழியாகவே உள்ளது:

பள்ளிக் கூடம்விட்ட நேரம்
                பாதி வழிக்கு வந்து
       துள்ளி ஓடும் என்னைத் தூக்கித்
                தோளில் போடும் அம்மா.

சச்சிதானந்தம் முதலான சிலரும் நல்ல கற்பனைகளை அமைத்து நயமாகப் பாடல்கள் தந்துவருகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர்

மலேசியாவும் சிங்கப்பூரும் நெடுங்காலமாகத் தமிழர் குடியேறி வாழ்ந்துவரும் நாடுகள். அந்த நாடுகளிலும் தமிழ் எழுத்தாளர் பலர் உள்ளனர். கவிதை, கதை, நாடகம், கட்டுரை படைத்து வருவோராக ஐம்பது அறுபதுபேர் பெயர்பெற்று வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாகவே எழுத்துப்பணியில் ஈடுபட்டவர்கள். எழுத்துக் கலையில் இருந்த ஆர்வத்தாலேயே அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டார்கள். எழுத்தைத் தொழிலாகக் கொள்ளாமல், பணத்துக்காக