‘பிரசண்ட விகடன்’ ஆசிரியராக இருந்து அவர் புதிய படைப்புகளுக்கு
வரவேற்பு அளித்தார். தரங்கிணி, கோகிலா, நடுத்தெரு நாராயணன் ஆகியவை அவருடைய கதைகள்.
விடுதலை இயக்கத்தைப் பின்னணியாக வைத்து நாவல்கள்
எழுதிய மற்றோர் ஆசிரியர் ‘அகிலன்’. நேதாஜியின் விடுதலைப் படையை அமைத்து எழுதப்பட்ட
அவருடைய நாவல் ‘நெஞ்சின் அலைகள்.’ மனிதப் பண்புகளையும் எழுத்தாளர்களின் போராட்டங்களையும்
உணர்ச்சி கலந்த நடையில் விளக்கும் நாவல் ‘பாவை விளக்கு’. பொருந்தாத திருமணத்திற்கு
ஆட்பட்டு வருந்தும் ஒருத்தியை, ‘சிநேகிதி’யில் சொல்லோவியமாக்கிக் காட்டுகிறார்.
அவளை விருப்பம்போல் வாழவிடுவதற்கு முடிவு எடுக்கிறார் அவளுடைய கணவர். ‘சித்திரப்பாவை’
என்னும் நாவலில், ‘நாகரிகத்தின் குழப்பத்தையும் பணத்தின் ஆதிக்கத்தையும் அவை
கலைஞனைத் தாக்கும் தன்மைகளையும் அகிலன் விளக்குகிறார். கட்டுப்பாடுகளைத் தகர்க்கும்
ஒரு வீர நங்கையை அதில் படைத்திருக்கிறார். ‘வேங்கையின் மைந்தன்’ என்னும் அவருடைய
வரலாற்று நாவல், பதினொன்றாம் நூற்றாண்டில் விளங்கிய சோழப் பேரரசைப் பின்னணியாகக்
கொண்டது. ‘கயல்விழி’ பாண்டியரின் ஆட்சியை விளக்குவது. ‘வெற்றித் திருநகர்’ விஜயநகர
ஆட்சியைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்று நாவல். இவை எல்லாவற்றிலும் ஆற்றொழுக்கான
நடையையும் கலைமெருகு பெற்ற வடிவத்தையும் காணலாம். அவர் பல நல்ல சிறுகதைகளையும் படைத்துள்ளார்.
அவற்றில் அவர்க்கு இயல்பான இனிய நடையையும் வடிவச் சிறப்பையும் காணலாம். அவர்
படைத்துள்ள கதை மாந்தர்கள் பலதிறப்பட்டவர்கள். கதை நிகழ்ச்சிகள் ஆசிரியரின்
முதிர்ந்த உலக அனுபவத்தைக் காட்டுவன.
பல்வேறு வகையான சூழ்நிலைகளையும் மாந்தர்களையும் படைத்து,
மிகப் பல நாவல்களை எழுதியவர் கோவி. மணிசேகரன். அவர் பல்வேறு சிறுகதைகளையும்
படைத்துள்ளார். ‘தவமோ தத்துவமோ’ என்னும் நாவலில் திரைப்பட உலகத்தில் புகழ்
பெறுவோரைப் போற்றி மயங்கும் மயக்கத்தை ஒரு பேராசிரியரின் மனைவியின் வாழ்வின்
வாயிலாக அம்பலப்படுத்தியுள்ளார். அவருடைய வரலாற்று நாவல்கள் சுவையாகக் கதை சொல்வதுடன்,
வரலாற்றுப் பின்னணியை நன்கு விளக்குவன. ‘அக்கினிக் கோபம்’, ‘பீலிவளை’, ‘செம்பியன்
செல்வி’ என்ற வரலாற்று நாவல்கள் இலக்கியத் தரம் உடையவை. அவருடைய நடையில் ஒருவகை
மிடுக்கு உள்ளது.
‘தேவன்’ என்னும் புனைபெயருடைய மகாதேவன் எட்டுச் சமுதாய
நாவல்களை எழுதினார். எல்லாம் ஆனந்தவிகடனில் தொடர்கதைகளாக
|