பக்கம் எண்: - 317 -

மனோன்மணி அம்மையார் (1863 - 1908) என்பவர் இன்று பெயர் அறியப்படாதவராக ஆகிவிட்டார். ஆயினும் அன்று பெண்பாலருள் புலமை நிரம்பியவராய், பதினைந்து செய்யுள் நுல்களுக்கு ஆசிரியராக விளங்கினார் என்பது கருதத்தக்கது.

சலசலோசனச் செட்டியார் (1876 - 1897) பழைய முறையின்படி செய்யுளியற்றுவதிலும் வல்லவர்; புதிய முறையின்படியும் எழுத வல்லவர். ஷேக்ஸ்பியரின் சிம்பலின் என்ற நாடகத்தைத் தமிழில் எழுதித் தாமே நடித்தார். அவர் தம் இளமையிலேயே இருபத்தொன்றாம் வயதிலேயே மறைந்தமையால், அவருடைய படைப்பாற்றல் அவ்வளவில் குறுகி முடிந்தது.

அந்த நூற்றாண்டில் வாழ்ந்த அண்ணாமலை ரெட்டியார், அந்தாதி, பிள்ளைத்தமிழ் முதலிய செய்யுள் நூல்கள் இயற்றினார். இசைப் பாடல்களில் காவடிச்சிந்து தனிச் சிறப்பான மெட்டுடையது; அது நாட்டுப்பாடல் என்னும் வகையில் முருகனடியார்கள் பாடிக் கோயில்களில் பூவும் பாலும் கொண்ட காவடி எடுத்து வழிபடுவது. காவடிச்சிந்துப் பாடல்கள் பாடித் தம் புகழை நிலைநாட்டியவர் அண்ணாமலை ரெட்டியார். அவருடைய சிறந்த இசையறிவு அந்தப் பாடல்களை இயற்றத் துணை புரிந்தது. பாடல்கள் சொற்சுவையும் பொருட்சுவையும் நிரம்பியவை; அவற்றின் இசைச் சிறப்பு கேட்போரைக் கிறுகிறுக்க வைப்பது. காவடி எடுத்துத் தோள்மேல் வைத்து ஆடியவாறே இன்றும் பலர் பாடிவருகிறார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டால் உள்ளம் களித்துத் துள்ளும்; அத்தகைய இனிய இசைச் சிறப்பு வாய்ந்த பாடல்கள் படைத்துத் தந்தமையால் அவர் புகழ் வாழ்கிறது.

பழங்கால மரபின்படி கற்றுப் புலமை நிரம்பியவராய் வாழ்ந்து நூல்கள் இயற்றியவர் ரா. ராகவ ஐயங்கார். (கி. பி. 1870 - 1948) மதுரையில் ஏற்பட்ட இலக்கிய இதழாகிய ‘செந்தமிழ்’ என்பதன் முதல் ஆசிரியராக விளங்கி அதை வளர்த்தார். இலக்கிய நயங்களை எடுத்து விளக்கும் கட்டுரைகள் பல எழுதினார். பகவத்கீதையையும் சாகுந்தல நாடகத்தையும் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்தார். குறுந்தொகைக்கு விளக்கமான உரை எழுதினார். வஞ்சிமாநகர், நல்லிசைப்புலமை மெல்லியலார், தமிழ் மொழி வரலாறு என்னும் ஆராய்ச்சி நூல்களை இயற்றினார். பழைய முறையின்படி அவர் இயற்றிய செய்யுள் நூல்கள் புவியெழுபது, பாரிகாதை என்பன. அவற்றுள் பொருள்நயமும் கற்பனைச் செல்வமும் உடைய பாடல்கள் பல உள்ளன. பாரிகாதை, வெண்பாவால் ஆகிய ஒரு நல்ல காப்பியம், அதில் பழங்கால வள்ளலாகிய பாரியின் சிறப்பை இலக்கிய நயம் நிரம்பிய பாக்களால் விளக்கியுள்ளார்.