தன்னலம் அணுவின் முனையளவும் இல்லாது தமிழர்களின் மேன்மைக்கு உழைத்த தந்தை பெரியாரை - மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் நூற்றாண்டு நினைவாக அவர் படைத்த நூல்களை வெளியிடும் இந்த நேரத்தில் பெரியாரின் பெருந்தொண்டை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

மொழிநூல் வல்லுநர் பாவாணர்

மறைக்கப்பட்ட தமிழின வரலாற்றையும், சிதைக்கப்பட்ட ஒப்புயர்வற்ற மொழியையும், தமிழின் தொன்மையையும், அதன் செம்மாப்பினையும், தமிழர்களின் பெருமையையும் உலகறியச் செய்தவர் தொல்தமிழ் அறிஞர், மொழிநூல் வல்லுநர் பாவாணர் ஆவார். இவர் தமிழ்மொழி ஆய்விலேயே ஐம்பது ஆண்டுகள் மூழ்கித் திளைத்தவர். இப்படிப்பட்ட பேரறிஞர் ஒருவரைத் தமிழகம் இதுநாள்வரை கண்டதில்லை. தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளுக்குப் பிறகு தனித்தமிழ் இயக்கத்தை மரமாக வளர்த்தெடுத்துப் பலருக்கு நிழல் தந்தவர் பைந்தமிழறிஞர் பாவாணர் ஆவார். இவர் இலக்கண இலக்கியப் புலமையும், மொழிநூல் புலமையும், வரலாற்று அறிவும், நிலநூல், உயிர்நூல், மாந்தனூல் தேர்ச்சியும் ஒருங்கே பெற்ற ஒப்பற்ற நுண்ணறிவாளர். தமிழின்பால் எல்லையற்ற அன்பும் தமிழைப் பண்டுபோல் புதுமொழியாக ஆக்கிக் காட்ட வேண்டும் என்ற உணர்வுமுடையவர். தமிழர்கள் தங்கள் வாழ்வு நலன்களைத் தேடி முன்னேறுவதற்குத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்.

உலகமொழி அனைத்திற்கும் நம் தமிழே மூலமொழி என்று பறைசாற்றியவர்; செந்தமிழ் மொழியின் செம்மாப்பினை தம் ஆங்கில அறிவால் நூலாக்கி உலக மொழிநூல் வல்லுநர்களின் வாயை அடைத்தவர்; தமிழ்மொழியின் வரலாற்றையும், வடமொழியின் வரலாற்றையும், தமிழர்களின் வரலாற்றையும், தமிழிலக்கியத்தின் வரலாற்றையும் தமிழர்களுக்குக் களஞ்சியமாய் விட்டுச் சென்றவர். தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், புரட்சிப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன், தமிழ்த்தென்றல் திரு.வி.க.பேரறிஞர் அண்ணா, பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார், மொழிப்போராளி பேரா.இலக்குவனார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் மற்றும் பல தமிழ்ப் பெருமக்களால் போற்றிப் புகழப்பட்ட இப் பெருமகன், எழுதிய நூல்களை,