முகவுரை
உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள், தொன்மை,
முன்மை; எண்மை (எளிமை), ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை; தூய்மை; செம்மை,
மும்மை; இனிமை, தனிமை; பெருமை, திருமை; இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புக்களை
ஒருங்கேயுடையது தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை. அதற்குக்
கரணியம், (காரணம்), பழம் பாண்டிநாடாகிய குமரிக்கண்டத்தைக் கடல்கொண்டதும், ஆரிய
வருகைக்கு முற்பட்டதும் முதலிரு கழகக்காலத்ததுமான பல்துறைப் பண்டைத் தமிழிலக்கியம்
முற்றும் அழிவுண்டதும், தமிழ வேந்தர் வேத ஆரியரை நிலத்தேவர் (பூசுரர்) என நம்பித்
தம்மையும் தம் இனத்தாரையும் தாழ்த்திக் கொண்டதும், வேதஆரியமும் சமற்கிருதமுமாகிய
வடமொழி தேவமொழி என நம்பப்பட்டதும், வாய்மைத் தமிழ்ப்புலவர் வாழ்க்கையிழந்ததும்,
தமிழின் தூய்மை குலைவுண்டதும், தமிழ் வரலாறு மறைவுண்டதும், தமிழ் கோயில்வழிபாட்டிற்குத்
தகாதமொழியென்று தள்ளப்பட்டதும், தமிழரே தமிழை இகழ்ந்து புறக்கணித்ததும், பிறப்பொடு
தொடர்புற்ற ஆரியக் குலப்பிரிவினையால் தமிழர் சின்னபின்னமாகச் சிதைவுண்டு ஒற்றுமையற்றதும்,
பேதைமையூட்டும் புராண மென்னும் தொல்கதைகளையே நீளக் கற்றுங் கேட்டும் பகுத்தறிவிழந்ததும்,
அவருள் நூற்றிற்குத் தொண்ணூற்றைவர் தற்குறிகளானதும், பிறப்பிழந்த போலித்தமிழர் தொன்றுதொட்டுத்
தமிழைக் காட்டிக்கொடுத்து வருவதும், பிற்காலத்தமிழகத்தை அடுத்தடுத்துப் பல்வேறு வேற்றரசர்
ஆண்டதும், ஆகும்.
ஆங்கிலராட்சியாலும்
ஆங்கிலக் கல்வியாலும், ஒரு சார்த்தமிழர்க்குக் கண்திறக்கப் பெற்றதின் பயனாக,
மறைமலையடிகளின் தனித்தமிழியக்கந் தோன்றித் தமிழ் மீண்டுந் தளிர்த்துத் தழைக்கத்
தொடங்கிற்று. ஆயின், ஆங்கிலர் நீங்கியபின், ஆரியப்பகை புதிய இந்தித் துணையொடு
வந்து அரசியல்வாயிலாகத் தமிழை அடர்த்துவருகின்றது. இதனால், அரசியல், பொதுவியல்,
பல்கலைக்கழகவியல் ஆகிய முத்துறையிலும், தமிழுக்கும் உண்மைக்கும் மாறான
சொற்பொழிவுகளும் வெளியீடுகளும் தொடர்ந்து நிகழ்கின்றன. தமிழைக் காக்கவேண்டிய பொறுப்பான
பதவியிலுள்ள பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப்பேராசிரியர், தமிழைக் காட்டிக்கொடுப்பதும்
அதற்கு உடந்தையாயிருப்பதும் அதைப்பற்றிக் கவலாதிருப்பதுமாக முந்நிலைப் பட்டுள்ளனர்.
அவருள், காட்டிக்கொடுப்பவர் ஆரிய அடிப்படையில் தமிழைக் கற்றவர்; ஏனையர் ஆரியத்தை
அடியோடறியாதவர். இவ்விரு சாரார்க்கும், நெல்லை வட்டார நாட்டுப்புறத் தமிழை அறியாமை,
சொந்தமாய், மொழியாராய்ச்சி செய்யாமை, தென்சொல்வளந் தெரியாமை, தமிழ்ப்பற்றின்மை,
தன்னல முதன்மை, நெஞ்சுர மின்மை ஆகியவை பொதுவாம்.
|