2 திரவிடத்தாய்
 
விழிப்பின்மையாலும், நாவலந் தீவு முழுவதும் ஒருதனியாய் வழங்கிய முதுபழந்தமிழ், பல்வேறு மொழிகளாய்ப் பிரிந்து, வடநாட்டில் ஆரியமயமாயும் தென்னாட்டில் ஆரியக் கலப்பினதாயும் வேறுபட்டதுடன், ஆரியச்சார்பு மிக்க திராவிட மொழிகள் மேன்மேலும் தமிழை நெருக்கி நெருக்கித் தெற்கே தள்ளிக்கொண்டே வருகின்றன.
 
"நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு"
என்னும் இளங்கோவடிகள் கூற்றால், கி.பி.2ஆம் நூற்றாண்டு வரை வேங்கடத்தை வடவெல்லையாகக் கொண்ட தென்னாடு முழுதும் பிறமொழி வழங்காத தமிழ்நாடாயிருந்தமை புலனாம். ஆனால், 12ஆம் நூற்றாண்டில் சேரநாட்டின் வடபாகத்திற் கன்னடம் புகுந்துவிட்டது. இதை,
"வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி."
 
"கடல்கிழக்குத் தெற்குக் கரைபொருவெள் ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை யிருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கெல்லையெனச் சொல்."
 
"மேற்குப் பவளமலை வேங்கட நேர்வடக்காம்
ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப தின்காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு."
 
"வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதம்
சேரநாட் டெல்லையெனச் செப்பு"
 
என்னும் கம்பர் செய்யுட்களானறிக.
 
இற்றைநிலையிலோ, சேரநாட்டின் மேல்பாகம் முழுதும் மலையாள நாடாயும் கீழ்பாகத்தின் வடபகுதி கன்னட நாடாயும் மாறியிருப்பதுடன் சோழநாட்டின் வடமுனைப் பகுதி (தொண்டை நாட்டுப் பல்குன்றக் கோட்டம்) தெலுங்கிற் கிடந்தந்து இருமொழி நாடாய் வேறுபடுகின்றது.
 
உண்மையில் ஒரு பெருமையுமில்லாத புன்சிறு புது மொழிகளை யெல்லாம் அவ்வம் மொழியார் பலபடப் பாராட்டி வளர்த்து வருகையில், பல வகையில் தலைசிறந்த தனிப்பெருந் தாய்மொழியாகிய தமிழைத் தமிழர்