மலையருவி
iii

முகவுரை

இந்த வெளியீட்டில் திரு. பர்ஸி மக்வீன் I.C.S. என்பவரால் சேகரிக்கப்பட்ட நாடோடிப் பாடல்களில் ஒரு பகுதி அடங்கியுள்ளது. அன்னாரால் சேகரிக்கப்பட்ட பாடல்கள் சென்னைச் சர்வகலாசாலைக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து வருகின்றன. ஆகையால் இந்நூல் நமது சரஸ்வதிமஹால் நூல் நிலையத்தைச் சேர்ந்ததல்ல. எனினும் சுவடிகளை வெளியீட்டிற்குத் தெரிந்தெடுப்பதற்காக சென்னை சர்க்கார் அவர்களால் நியமிக்கப்பட்ட   குழுவினரால் இந்நூலும் தெரிந்தெடுக்கப்பட்டு நமது நூல் நிலையத்தாரால் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் அடங்கியுள்ள பாடல்கள் தெம்மாங்கு வகையைச் சேர்ந்தவை. சென்னைச் சர்வகலாசாலையில் உள்ள தொகுதியில் சில பாடல்கள் சபைக்கு அருகமில்லாமல் இருந்தன. அவற்றை விலக்கி இந்த வெளியீட்டிற்கான பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. “கலைமகள்” ஆசிரியரும் தமிழில் சிறந்த புலமைவாய்ந்தவருமான ஸ்ரீ கி. வா. ஜகந்நாதன் அவர்கள் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்துக் கொடுக்கும் பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதோடு நமது நாடோடிப் பாடல்களின் வரலாற்றைப்பற்றி ஓர் முகவுரையையும் எழுதியளித்துள்ளார். அன்னார் செய்திருக்கும் அரிய சேவைக்கு எமது நன்றி உரித்தாகும்.

இந்த நூலையும், இன்னும் பல அரிய நூல்களையும் வெளியிடுவதற்கு உதவியாக நமது சென்னை அரசாங்கத்தார் செய்திருக்கும் நிதி உதவிக்காக அவர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

சரசுவதிமகால்
18-3-58 

}

எஸ். கோபாலன்
கௌரவக் காரியதரிசி