முகப்புதொடக்கம்

iii


சொற்பொருள் உணர்த்தும் மரபு:

அகரமுதலியின் பயன் ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களையும் பொருள்களுக்குரிய பெயர் விளக்கங்களையும் எண்ணிய மாத்திரத்தில் எளிதில் அறிவிப்பதேயாம் . சொற்பொருள் உணர்த்தும் மரபைத் தொடங்கிவைத்த முதல்வர் தொல்காப்பியரேயாவார் . இவர் தாம் ஆக்கிய பெருநூலாகிய தொல்காப்பியச் சொல்லதிகார உரியியலில் 120 உரிச்சொற்களின் பொருளை நூற்பாவில் அறிவித்துள்ளார் . இதனால் இவரே சொற்பொருள் காட்டும் ' உரிச்சொற் பனுவல்கள் ' தோன்ற அடிகோலியவராகிறார் .

இவருடைய நூலின் பிற பகுதிகளிலும் சொற்பொருள் சுட்டும் இடங்கள் பலவாகும் . வழக்குமொழி , செய்யுள்மொழி என்னும் இரண்டன் மரபுகளையும் எடுத்துரைப்பதோடு அவ் விருவகை வழக்கில் மட்டுமே தனித்துவரும் சிறப்பு மரபுகளையும் ஆங்காங்கே சுட்டிச் செல்லுகின்றார் .

தமிழ்மொழியில் உள்ள பெயர் , வினை , இடை , உரி என்னும் நால்வகைச் சொற்களையும் நன்கனம் விளக்கியுள்ளார் . இச் சொற்கள் இயற்சொற்கள் , திரிசொற்களாய் அமைந்துகிடக்கும் பான்மையையும் எடுத்துரைத்துள்ளார் . உருவம் சிதைந்து மாறிவரும் மரூஉ வழக்குகளையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை . தமிழ்நாட்டினைச் சுற்றியுள்ள பிற நாடுகளிலிருந்து வந்து புகுந்த வேற்றுமொழிச் சொற்களையும் ' திசைச்சொல் ' என்று ஏற்றுக்கொள்கிறார் .

அந் நாளிலேயே சமசுகிருதம் எனப்படும் வடமொழி வழக்குகள் தமிழ்வழக்கில் வந்து புகுந்தமையால் அவற்றையும் செய்யுட்குரிய சொல்லாக ஏற்றுக்கொண்டு அவற்றை வடசொல் என இனங்கண்டு கூறுகிறார் . அவ் வடசொற்கள் தமிழில் வருங்கால் அமையும் நெறிமுறைகளையும் வகுத்து உரைக்கின்றார் .

திவாகரம்:

தொல்காப்பியரின் வழிமுறையைத் தழுவிய நூல்கள் சில அவர் காலத்தை அடுத்தும் பின்னரும் தோன்றியிருக்கலாம் . எனினும் , கி பி . எட்டாம் நூற்றாண்டில் திவாகரர் ஆக்கிய ' திவாகரமே ' தொல்காப்பியரின் வழியில்வந்த முதற்பெரும் நூலாக நமக்குக் கிட்டியுள்ளது . இந் நூல் சொற்பொருள்களையும் பொருள்களுக்குரிய பல பெயர்களையும் வகுத்தும் தொகுத்தும் தொகைப் பெயர் விளக்கங்களைச் சேர்த்தும் பன்னிரு தொகுதிகளில் விளக்கம் தருகின்றது .

உரிச்சொற் பனுவல்:

உரிச்சொற் பொருளைத் தொல்காப்பியர் விளக்கியமையை அடியொற்றியே சொற்பொருள் விளக்கமாக அமைந்த நூல்களும் நூற்பா முதலிய பாவகைகளில் விளக்க முற்பட்டமையால் அவ்வகை நூல்களை ' உரிச்சொல் ' என்றும் , ' உரிச்சொற் பனுவல் ' என்றும் பின்னையோர் போற்றுவாராயினர் .

"இன்னது இன்னுழி இன்னணம் இயலும்
என்றிசை நூலுள் குணகுணிப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலின் ; பிங்கலம் முதலா
நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே " ( நன். 460 )

என நன்னூலில் பவணந்திமுனிவர் பரந்துபட்ட பெயர்களை அறியவேண்டின் , 'பிங்கலம்' முதலாக வந்துள்ள உரிச்சொல் - தொகுதிகளில் காண்க என்கிறார் . திவாகரத்தை அடுத்து வந்த சொற்பொருள் விளக்கப் பெருநூல் பிங்கலமுனிவர் ஆக்கித்தந்த பிங்கலம் . இந்த இரு நிகண்டுகளும் நூற்பாவினால் இயன்றவை .

நிகண்டு:

பின்னாளில் மண்டலபுருடர் என்பார் ' சூடாமணி நிகண்டு ' என்னும் உரிச்சொற் பனுவலை விருத்தப்பாவில் ஆக்கியளித்தார் . நிகண்டுநூல்களை மனப்பாடம்செய்து போற்றி வந்த முன்னையோர் இவர் எடுத்துக்கொண்ட விருத்தப்பாவகை மனனம் செய்ய எளிமையாயிருந்தமையின் , இந் நிகண்டினையே மிகுதியும் போற்றிக் கற்றுவரலாயினர் . மண்டலபுருடர் தம் நூலின் பாயிரத்தில் , ' நிகண்டு சூடாமணி என ஒன்று சொல்வன் ' என்று உரிச்சொற் பனுவல்களை ' நிகண்டு ' என்னும் புதுப்பெயரால் சுட்டலாயினார் .