![]() |
அணிந்துரை |
தமிழ்மொழியின் பழங் கலைகளுள் ஒன்று அகராதிக் கலை (அகரமுதலிக் கலை). தொல்காப்பியர் காலத்திலேயே வித்தூன்றப்பட்ட இக் கலை ஏனைய பழங் கலைகளைப் போலல்லாமல் என்றும் நிலைத்து நிற்கும் புத்தம் புதிய கலையாய் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. மொழி வளர்ச்சி என்னும் மாளிகையின் மேற்கட்டுமானமாக இருப்பவை காவியங்கள் என்றால் அதன் அடித்தளமாக அமைவது அகராதிக் கலை எனலாம். எனவேதான், மொழி வளர்ச்சிக்கு ஆதாரமான இந்தக் கலையில் இன்று உலகிலுள்ள எல்லா மொழியாளர்களும் பெருமளவில் ஆர்வமும் அக்கறையும் காட்டிவருகிறார்கள். தமிழ்மொழியைப் பொறுத்தமட்டிலும் இன்று சிலபல அகரமுதலிகள் வழக்கில் இருப்பது உண்மைதான். எனினும் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறையினர், தமிழ் ஆய்வாளர்கள் என்னும் அனைத்துப் பிரிவினருக்கும் பயன்படத்தக்க, அடக்கமான ஓர் அகராதி தேவை என்று உணரப்பட்டது. இந்தப் புதிய தேவையினை நிறைவுசெய்யும் பணியில் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் ஈடுபட்டது. கல்வித் துறையில் தமிழ்மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்கப் பாடுபட்டுவரும் பாடநூல் நிறுவனம் இப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது எல்லா வகையிலும் பொருத்தமானது. இப் பணி இன்று நிறைவுபெற்றுத் தமிழ்மக்களின் கைகளில் தவழவிருக்கிறது. தமிழ்மொழியின் அண்மைக்கால வளர்ச்சி இந்த அகரமுதலியில் பக்கத்துக்குப் பக்கம் எதிரொலிப்பதை நாம் நன்கு காணமுடிகிறது. 64,048 சொற்களடங்கிய இவ் வகரமுதலி தமிழ்மொழியில் திறமைபெற விரும்புகிற அனைவருக்கும் உறுதுணையாக இருந்து கைகொடுக்கும் என்பது திண்ணம். இவ் வகரமுதலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட அனைவரும் தமிழ்மக்களின் பாராட்டுக்கு உரியவர்களாகிறார்கள். இதனைத் தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காகத் தமிழ்கூறும் நல்லுலகம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
|
![]() | ![]() |