இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   17
Zoom In NormalZoom Out


 

இறந்தஎன் மகளே"                     (ஐங்குறு-372)

என்பது, தலைமகள் கொடுமை நினைந்து கூறியது.

"ஈன்றுபுறந் தந்த எம்மும் உள்ளாள்
வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்
தனிமணி இரட்டுந் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேல் குறும்படை மழவர்
முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த
வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்

வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந்
துணிந்துபிறள் ஆயினள் ஆயினும் அணிந்தணிந்து
ஆர்வ நெஞ்சமோடு ஆய்நலன் அளைஇத்தன்
மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல
துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறைப்
பெண்ணையம் பேர்யாற்று நுண்ணறல் கடுக்கும்
நெறியிருங் கதுப்பினென் பேதைக்கு
அறியாத் தேஎத் தாற்றிய துணையே"         (அகம்-35)

என்பது செவிலி தெய்வம் பராஅயது. பிறவும் அன்ன.

40. ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்தும்
தாமே செல்லுந் தாயரும் உளரே.

இது,  தலைமகள்  உடன்போகியவழிச் செவிலிக்கு உரியதோர்திறன்
உணர்த்துதல் நுதலிற்று.

ஏமம்   பேர் ஊர் சேரியும் - ஏமம் பொருந்திய பெரிய ஊரகத்துச்
சேரியின்கண்ணும், சுரத்தும் -ஊரினின்றும்  நீங்கிய சுரத்தின்கண்ணும்,
தாமே செல்லும் தாயரும் உளர் - தாமே செல்லுந் தாயரும் உளர்.

"தாமே   செல்லுந் தாயர்" என்பதனால் செவிலி என்பது பெற்றாம்;
'தாயரும் '   என்றதனால் கைத்தாயர்  பலர்  என்று  கொள்ளப்படும்.
அவ்வழிச் சேரியோரை வினாதலும்,  சுரத்திற் கண்டோரை வினாதலும்
உளவாம்.  சேரியிற் பிரிதலும் பாலையாகுமோ எனின், அது வருகின்ற
சூத்திரத்தினால் விளங்கும். [ஈற்றேகாரம் அசை.]

சேரியோரை வினாஅயதற்குச் செய்யுள்

"இதுஎன் பாவைக் கினியநன் பாவை
இதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி
இதுவென் பூவைக் கினியசொற் பூவையென்று
அலம்வரு நோக்கி னலம்வரு சுடர்நுதல்
காண்தொறுங் காண்தொறுங் கலங்கி
நீங்கின ளோவென் பூங்க ணோளே"       (ஐங்குறு-375)

என வரும்.

சுரத்திடை வினாஅயதற்குச் செய்யுள்

"எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை யந்தணீர்
வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர் இவ்விடை
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனுந்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும"  (கலி-பாலை -8)

" செய்வினைப் பொலிந்த செறிகழல் நோன்தாள்
மையணற் காளையொடு பைய இயலிப்
பாவை அன்னஎன் ஆய்தொடி மடந்தை
சென்றனள் என்றிர் ஐய
ஒன்றின வோஅவள் அஞ்சிலம் படியே"     (ஐங்குறு-389)

என வருவதும் அது.

"காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள்இழந் தனவே
அகல்இரு விசும்பின் மீனினும்
பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே"          (குறுந்-44)

என வருவது, சுரத்திடை வினா அயது நிகழ்ந்த பின்னர்க் கூறியது.
                                                     (40)

41. அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே.
இதுவும், பாலைக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல்
                                   நுதலிற்று.

அயலோராயினும்.  (சேரியினும்   சுரத்தினும்  பிரிதலன்றித்) தமது
மனையயற்கண் பிரிந்தாராயினும், அகற்சிமேற்றே - பிரிவின்கண்ணதே.

எனவே,  ஓர்  ஊரகத்து  மனையயற்கண்ணும்  பரத்தையிற் பிரிவு
பாலையாம் என்பதூஉம் உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.         (41)

42. தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்
வாய்மையும் பொய்மையுங் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சுகலுழ்ந் தோளை
அழிந்தது களையென மொழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு
என்றிவை எல்லாம் இயல்புற நாடின்
ஒன்றித் தோன்றுந் தோழி மேன.

இது,    பிரிவின்கண்   தோழிக்குக்   கூற்று    நிகழும்  இடம்
உணர்த்துதல் நுதலிற்று.

தலைவரும்    விழும.....   தோழி   மேன  - தலைவரும்  விழும
நிலையெடுத் துரைத்தல் முதலாகச் சொல்லப்பட்டன தோழிமாட்டுப்