பொருந்தித் தோன்றும்.
தலைவரும் விழுமநிலை எடுத்துரைத்தலாவது பின்பு வரும் நோய்
நிலையை எடுத்துக் கூறுதல் என்றவாறு.
உதாரணம்
"பாஅல் அஞ்செவிப் பணைத்தாள் மாநிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறதர்ப் பட்ட ஆறுமயங் கருஞ்சுரம்
இறந்துநீர் செய்யும் பொருளினும்யாம் நுமக்குச்
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்
நீள்இரு முந்நீர் வளிகலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக்
கேள்பெருந் தகையோடு எவன்பல மொழிகுவம்
நாளுங் கோள்மீன் தகைத்தலுந் தகைமே;
கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின்
புல்லென்ற களம்போலப் புலம்புகொண்டு அமைவாளோ;
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற, நாடுபோல்
பாழ்பட்ட முகத்தொடு பைதல்கொண்டு அமைவாளோ;
ஓரிரா வைகலுள் தாமரைப் பொய்கையுள்
நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ;
எனவாங்கு,
பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு
எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வது
அந்நாள்கொண்டு இறக்கும்இவள் அரும்பெறல் உயரே"
(கலி.பாலை.4)
எனவரும். இதனுள் "யாம் நுமக்குச் சிறந்தனமாதல் அறிந்தனிராயின்"
என்றமையாலும், "பொய்ந் நல்கல் புரிந்தனை" என்றமையாலும்
வரைவதன் முன்பென்று கொள்ளப்படும். இவள் இறந்துபடும்
என்றமையால் உடன்கொண்டு போவது குறிப்பு.
போக்கற்கண்ணும் என்பது ' உடன்கொண்டு பெயர் ' என்று
கூறுதற்கண்ணும் என்றவாறு.
உதாரணம்
"மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்
என்நீர் அறியாதீர் போல இவைகூறல்
நின்னீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ வெமக்கு " (கலி. பாலை. 5)
என வரும்.
விடுத்தற்கண்ணும் என்பது தலைமகன் உடன்போக்கொருப் பட்டமை
தலைமகளுக்குக் கூறி அவளை விடுத்தற்கண்ணும் என்றவாறு.
உதாரணம்
" உன்னங் கொள்கையொடு உளங்கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரஞ் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரியம் பெண்டிர் கவ்வையும் ஒழிகம்
நாடுகண் அகற்றிய உதியஞ் சேரல்
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவவினி வாழி தோழி அவரே
பொம்மல் ஓதி நம்மொடு ஓராங்குச்
செலவயர்ந் தனரால் இன்றே மலைதொறும்
மால்கழை பிசைந்த நூல்வாய் கூரெரி
மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர்
வான்றோய் புணரி மிசைக்கண் டாங்கு
மேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச்சென் றன்ன
கல்லூர்பு இழிதரும் புல்சாய் சிறுநெறிக்
காடுமீக் கூறுங் கோடேந்து ஒருத்தல்
ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம் பணைத்தோள்
நாறைங் கூந்தல் கொம்மை வரிமுலை
நிரையிதழ் உண்கண் மகளிர்க்கு
அரிய வாலென அழுங்கிய செலவே" (அகம். 65)
என வரும். இஃது உடன்போக்கு நயப்பித்தது.
"வேலும் விளங்கின வினைஞரும் இயன்றனர்
தாருந் ததையின தழையுந் தொடுத்தன
நிலநீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல்நீர் தலைஇய உலவையிலை நீத்துக்
குறுமுறி யீன்றன மரனே நறுமலர்
வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன்
தேம்படப் பொதுளின பொழிலே கானமும்
நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாள்
பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப்
போதுவந் தன்று தூதே நீயும்
கலங்கா மனத்தை ஆகி என்சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சமர் தகுவி
தெற்றி உலறினும் வயலை வாடினும்
நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும்
நின்னினும் மடவள் நனிநின் நயந்த
அன்னை அல்லல் தாங்கிநின் ஐயர்
புலிமருள் செம்மல் நோக்கி
வலியாய் இன்னுந் தோய்கநின் முலையே" (அகம். 259)
எனவரும். இது விடுத்த
|