கண்ணும் அவற்குக் கூற்று நிகழும்.
ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் என்பது: தனக்குப்
பாங்காகித் தோன்றுவார் பக்கத்துப் பிரியும் வழியும் அவற்குக்
கூற்று நிகழும் என்றவாறு. அதுவும் வேந்தற்கு உற்றுழிப் பிரியும்
பிரிவு.
மூன்றன் பகுதியாவன, நால்வகை வலியினும் தன் வலியும்
துணைவலியும் வினைவலியும் என்பன. அவை பகைவர்மாட்டுள்ளன.
மண்டிலத்து அருமையாவது, பகைவர் மண்டிலங் கொண்ட அருமை
என்றவாறு.
தோன்றல் சான்ற என்பது, [இவை] மிகுதல் சான்ற என்றவாறு.
மாற்றோர் மேன்மையாவது, மாற்றோரது உயர்ச்சியானும் என்றவாறு.
ஆறன் உருபு எஞ்சிநின்றது.
மூன்றன் பகுதியானும் மண்டிலத்தருமையானும் தோன்றல் சான்ற
மாற்றோர் எனக் கூட்டுக.
பாசறைப் புலம்பல் என்பது, பாசறைக்கண் தலைமகன் தனிமை
யுரைத்தல் என்றவாறு.
தூதிடை வகையினானும், வேந்தற்கு உற்றுழியினானும், மாற்றோர்
மேன்மையினானும் பாசறைக்கட் புலம்பல் எனக் கூட்டுக. அஃதாவது,
தூதினும் வந்தற்குற்றுழியினும் பகைதணிவினையினும் பாசறைக்கட்
புலம்பல் உளதாகும் எனக்கொள்க.
உதாரணம்
"வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளைகளைந் தொழிந்த கொழுந்தி னன்ன
தளைபிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை
சிதரலந் துவலை தூவலின் மலருந்
தைஇ நின்ற தண்பெயற் கடைநாள்
வயங்குகதிர் கரந்த வாடை வைகறை
விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி
மங்குல் மாமழை தென்புலம் படரும்
பனியிருங் கங்குலுந் தமியள் நீந்தித்
தம்மூ ரோனே நன்னுதல் யாமே
கடிமதிற் கதவம் பாய்தலின் தொடிபிளந்து
நுதிமுகம் மழுங்கிய மண்ணைவெண் கோட்டுச்
சிறுகண் யானை நெடுநா ஒண்மணி
கழிப்பிணிக் கறைத்தோல் பொழிகணை உதைப்பத்
தழங்குகுரல் முரசமொடு மயங்கும் யாமத்துக்
கழித்துறைச் செறியா வாளுடை யெறுழ்த்தோள்
இரவுத்துயில் மடிந்த தானை
உரவுச்சின வேந்தன் பாசறை யோமே." (அகம்.24)
இது வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் கூற்று.
"வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக்
கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை யினச்சிதர் ஆர்ப்ப
நெடுநெல் அடைச்சிய கழனியேர் புகுத்துக்
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர
அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்
ஓதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக்
கோழிணர் எதிரிய மரத்த கவினிக்
காடணி கொண்ட காண்டகு பொழுதின்
நாம்பிரி புலம்பின் நலஞ்செலச் சாஅய்
நம்பிரிபு அறியா நலனொடு சிறந்த
நற்றோள் நெகிழ வருந்தினள் கொல்லோ
மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
தாதின் துவலை தளிர்வார்ந் தன்ன
அங்கலுழ் மாமைக் கிளைஇய
நுண்பல் தித்தி மாஅ யோளே." (அகம். 41)
என்பது பகையிற் பிரியும் தலைமகன் கூற்று. பிறவும் அன்ன. இவ்வாறு
வருவன குறித்த பருவம் பிழைத்துழி என்று கொள்க.
முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்
என்பது :வினை முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பப்பட்ட வினைத்
திறத்தினது வகையின் கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு.
அது பாசறைக்கட் கூறலும், மீண்டு இடைச்சுரத்துக் கூறலும் என
இருவகைப்படும். இன்னும், 'வகை' என்றதனான் நெஞ்சிற்குக்
கூறியனவுங் கொள்க.
உதாரணம்
"வந்துவினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
தந்திறை கொடுத்துத் தமரா யினரே
முரண்செறிந் திருந்த தானை இரண்டும்
ஒன்றென அறைந்தன பணையே நின்தேர்
முன்னியங்கு ஊர்தி பின்னிலை யீயாது
ஊர்க பாக ஒருவினை கழிய
நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி
துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி
பொன்னணி வல்விற் புன்றுறை யென்றாங்
கன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப்
பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக்
கண்டது நோனான் ஆகித் திண்டேர்க்
கணையன் அகப்படக் கழுமலந் தந்த
பிணையலங் கண்ணிப் பெரும்பூண் சென்னி
அழும்பில் அன்ன
|