கைக் குதவி யுறையும்
கடவுளர் கண்தங்கி னேன்;
சோலை,மலர்வேய்ந்த மான்பிணை யன்னார் பலர்நீ
கடவுண்மை கொண்டொழுகு வார்"
எனவும்,
"சிறுவரைத் தங்கின் வெகுள்வர் செறுத்தக்காய்
தேறினென் சென்றீநீ செல்லா விடுவாயேல்
நற்றார் அகலத்துக் கோர்சார மேவிய
நெட்டிருங் கூந்தற் கடவுள ரெல்லார்க்கும்
முட்டுப்பா டாகலும் உண்டு" (கலி.மரு.28)
எனவும் புணர்ச்சிக்கு உடன்படாது கூறுதலானும்,குறும்பூழ்ப் பாட்டினுள்,
"விடலைநீ நீத்தலின் நோய்பெரி தேய்க்கும்
நடலைப்பட் டெல்லாநின் பூழ்"
என்றவழி மருதநிலத்தின் தலைமகனை விடலை என்றமையானும்,
இதனுள்,
"பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள்இனி" (கலி.மரு.30)
என இரந்தமையானும் கண்டுகொள்க.
"ஒரூஉக், கொடியியல் நல்லார் குரனாற்றத் துற்ற
முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத்
தொடீஇய எமக்குநீ யாரை பெரியார்க்கு
அடியரோ ஆற்றா தவர்;
கடியதமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று,
வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின்
மாய மருள்வார் அகத்து;
ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா
என்கண் எவனோ தவறு;
இஃதொத்தன், புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம்போல்
வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவும்
ஒள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியும் நல்லார்
சிரறுபு சீறச் சிவந்தநின் மார்பும்
தவறாதல் சாலாவோ கூறு;
அதுதக்கது, வேற்றுமை என்கண்ணோ ஓராதி தீதின்மை
தேற்றக்கண் டீயாய் தெளிக்க;
இனித்தேற்றேம் யாம்
தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார்
தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி
நீகூறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி
யார்மேல் விளியுமோ கூறு" (கலி.மரு.23)
இதனுள் இரத்தலும் தெளித்தலும் வந்தவாறு கண்டுகொள்க.
கலித்தொகையிற் கடவுட் பாட்டினுள் உரிப்பொருண்மை பற்றி வரும்
பாட்டுக்களும் மருதநிலத்துத் தலைமகன் பெயர் கூறாது பிறபெயர்
படக் கோத்தமையானும் ஊடற்பொருண்மையின் வேறுபாடுண்மை அறிக.
'உரைத்திறம் நாட்டம் கிழவோன் மேன' என்பது, இவ்விவ்விடங்கள்
பற்றி உரையாடுங் குறிப்புத் தலைமகன் மேலன என்றவாறு. (44)
45. எஞ்சி யோர்க்கு மெஞ்சுதல் இலவே.
இதுகாறும் பிரிவின்கண் கூறுதலுரியார் பலருள்ளும் நற்றாயும்,
செவிலியும், கண்டோரும், தோழியும், தலைமகனும் கூறுங்கூற்றுக்
கூறினார். இஃது அவரை யொழிந்த தலைமகட்கும், பாங்கற்கும்,
பார்ப்பார்க்கும், பாணர்க்கும், கூத்தர்க்கும், உழையோர்க்கும் கூற்று
நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இல - முன்னர்க் கூறாது எஞ்சி
நின்றார்க்கும் கூற்று ஒழிதல் இல.
'பாங்கர் முதலாயினாரை இச் சூத்திரத்தாற் கூறுப; தலைமகள்
கூற்றுத் தனித்துக்கூறல் வேண்டும். இவரோடு ஒரு நிகரன்மையின்'
எனின் ஒக்கும். தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப்
பழைமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினார் போலும், ஆசிரியர்
இச்சூத்திரத் தானும் பொருள் கொள்ள வைத்தமையின், தலைமகள்
கூற்று வருமாறு; தலைமகள் பிரிதலுற்ற தலைமகன் குறிப்புக் கண்டு
கூறுதலும், பிரிவுணர்ந்து கூறுதலும், பிரிவுணர்த்திய தோழிக்குக்
கூறுதலும், உடன் போவல் எனக்
கூறுதலும், இடைச்சுரத்து
ஆயத்தார்க்குச் சொல்லி விட்டனவும், தமர் வந்துற்றவழிக் கூறுதலும்,
மீளலுற்றவழி ஆயத்தார்க்குக் கூறிவிட்டனவும், பிரிவாற்றாமையும்,
ஆற்றுவல் என்பது படக் கூறுதலும், தெய்வம் பராவலும், பருவங்கண்டு
கூறுதலும், வன்புறை எதிரழிந்து கூறுதலும் இவையெல்லாம்
கூறப்படும்.
பிரியலுற்ற தலைமகன் குறிப்புக்கண்டு கூறியதற்குச் செய்யுள்
"நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்தும்தாம்
அஞ்சிய தாங்கே அணங்காகும் என்னும்சொல்
இன்தீங் கிளவியாய் வாய்மன்ற நின்
|