"புனையிழாய் ஈங்குநாம் புலம்புறப் பொருள் வெஃகி
முனையென்னார் காதலர் முன்னிய ஆற்றிடைச்
சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக்
கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ."
(கலி.பாலை. - 15)
பருவங்கண்டு கூறியதற்குச் செய்யுள்
"என்னொடு புலந்தனர் கொல்லோ காதலர்
மின்னொடு முழங்குதூ வானம்
நின்னொடு வருதும் எனத்தெளிந் தோரே."
வன்புறை எதிரழிந்து கூறியதற்குச் செய்யுள்
"வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய் தோன்றார்
பொறுக்கவென் றாற்பொறுக்க லாமோ - ஒறுப்பிபோற்
பொன்னுள் உறுபவளம் போன்ற புணர்முருக்கம்
என்னுள் உறுநோய் பெரிது." (திணைமாலை - 67)
தூதுவிடக் கூறியதற்குச் செய்யுள்
"காண்மதி பாணநீ உரைத்தற் குரியை
துறைகெழு கொண்கன் பிரிந்தென
இறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே." (ஐங்குறு - 140)
ஆயத்தார் கூறியதற்குச் செய்யுள்
"மாந்தர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி
தான்வரும் என்ப தடமென் தோழி
அஞ்சினன் அஞ்சினன் ஒதுங்கிப்
பஞ்சு மெல்லடிப் பரல்வடுக் கொளவே."
பாணர் கூறியதற்குச் செய்யுள்
"நினக்கியாம் பாணரும் அல்லேம் எனக்கு
நீயுங் குருசிலை அல்லை மாதோ
நின்வெங் காதலி நன்மனைப் புலம்பி
ஈரிதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டும் அருளா தோயே." (ஐங்குறு - 480)
பார்ப்பார் கூறியதற்குச் செய்யுள்
"துறந்ததற் கொண்டு துயரடச் சாஅய்
அறம்புலந்து பழிக்கும் அளைக ணாட்டி
எவ்வ நெஞ்சிற் கேம மாக
வந்தன ளேநின் மடமகள்
வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே."(ஐங்குறு -393)
46. நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்.
இதுவும் பாலைக்கு நினைத்தற்கு மரபு உணர்த்துதல் நுதலிற்று.
நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் - முன்பு நிகழ்ந்தது பின்பு
விசாரித்தற்கு ஏதுவும் ஆகும். உம்மை எதிர்மறை.
உதாரணம்
"வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை
தந்துபிணி யானை அயாவுயிர்த் தன்ன
என்றூழ் நீடிய வேய்பயில் அழுவத்துக்
குன்றூர் மதியம் நோக்கி நின்றுநினைந்து
உள்ளினேன் அல்லனோ யான்முள் எயிற்றுத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல்
எமது முண்டோர் மதிநாட் டிங்கள்
உரறுகுரல் வெவ்வளி எடுப்ப நிழறப
உலவை யாகிய மரத்த
கல்பிறங்கு மாமலை உம்பரஃ தெனவே." (நற்றிணை-62)
(96)
47. நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே.
இதுவும் அது.
நிகழ்ந்தது கூறி நிலையலும் திணை - முன்பு நிகழ்ந்ததனைக் கூறிப்
போகா தொழிதலும் பாலைத் திணையாம்.
உதாரணம்
"ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப்
பொரியரை வேம்பின் புள்ளி நீழற்
கட்டளையன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்ஏர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
உள்ளினென் அல்லனோ யானே உள்ளிய
வினைமுடித் தன்ன இனியோள்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே." (நற்றிணை-3)
48. மரபுநிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும் என்ப.
இதுவும் அது.
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி விரவும் பொருளும் விரவும்
என்ப - மரபுநிலை திரியாத மாட்சிமையுடையவாகி விரவும்
பொருளும் விரவும் என்ப.
அஃதாவது பாலைக்கு ஓதிய பாசறைப் புலம்பற்கண்ணும்,
தேர்ப்பாகற்குக் கூறுதற்கண்ணும் முல்லைக்குரிய முதற்பொருளும்
கருப்பொருளும் விரவுதலாம். இந்நிகரான பிறவுங் கொள்க.
மரபுநிலை திரியாமையாவது, பாசறைக்கண் வினை முடித்த வழிக்
கார்காலம் வந்ததாயின் ஆண்டுக் கூறும் கூற்று. அஃது அக்காலத்தைப்
பற்றி வருதலின் மரபு நிலை திரியாதாயிற்று.
உதாரணம்
"வேந்து வினை முடித்த" என்னும் அகப்பாட்டினுள் (14)
கண்டு
கொள்க.
இன்னும் "மாட்சியஆகி விரவும் பொருளும் விரவும்" என்றதனால்
பாசறைக்கண் தூது கண்டு கூறுதலும், தலைமகளை இடைச்சுரத்து
நினைத்துக் கூறுதலுங் கொள்க.
உதாரணம்
"நீடினம் என்று கொடுமை தூற்றி
வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்து
யாம்வெங் காதலி நோய்மிகச் சாஅய்ச்
சொல்லியது உரைமதி நீயே
முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே." (ஐங்குறு - 478)
இது தூது கண்டு கூறியது.
"பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்
துனிமலி துயரமோ டரும்பட ருழப்போள்
கையறு நெஞ்சிற்கு உசாஅத்துணை யாகச்
சிறுவரைத் தங்குவை யாயின்
காண்குவை மன்னாற் பாண
|