இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   31
Zoom In NormalZoom Out


 

மார்பனைச் சார்ந்து"               (கலித் - நெய் . 25)

மிக்க   காமத்து   மிடலாவது: ஐந்திணைக்கண்  நிகழும் காமத்தின்
மாறுபட்டு   வருவது.    அஃதாவது,    வற்புறுத்துந்   துணையின்றிச்
செலவழுங்குதலும்,  ஆற்றருமை   கூறுதலும்  இழிந்திரந்து  கூறுதலும்,
இடையூறு  கிளத்தலும் அஞ்சிக்கூறுதலும்,     மனைவி    விடுத்தலிற்
பிறள்வயிற் சேறலும், இன்னோரன்ன  ஆண்பாற்கிளவியும்,   முன்னுறச்
செப்பலும், பின்னிலை முயல்தலும் 'கணவனுள்வழி இரவுத்தலைசேறலும்,
பருவம்  மயங்கலும்,  இன்னோரன்ன        பெண்பாற்    கிளவியும்,
குற்றிசையும்;   குறுங்கலியும்   இன்னோரன்ன     பிறவுமாகிய  ஒத்த
அன்பின் மாறுபட்டு வருவன எல்லாம்  கொள்ளப்படும். அவற்றுட் சில வருமாறு:-

"நடுங்கி நறுநுதலாள் நன்னலம்பீர் பூப்ப
ஒடுங்கி உயங்கல் ஒழியக் - கடுங்கணை
வில்லேர் உழவர் விடரோங்கு மாமலைச்
செல்லேம் ஒழிக செலவு."   (புறப்.இருபாற்பெருந்திணை. 1)

இது செலவழுங்குதல்.

"பணையாய் அறைமுழங்கும் பாயருவி நாடன்
பிணையார மார்பம் பிணையத் - துணையாய்க்
கழிகாமம் உய்ப்பக் கனையிருட்கண் செல்வேன்
வழிகாண மின்னுக வான்."       (புறப்.பெருந்திணை - 1)

இஃது இரவுத்தலைச் சேறல்.

"பெரும்பணை மென்தோள் பிரிந்தார்எம் உள்ளி
வரும்பருவம் அன்றுகொல் ஆம்கொல் - சுரும்பிமிரும்
பூமலி கொன்றை புறவெலாம் பொன்மலரும்
மாமயிலும் ஆலும் மலை."  (புறப். இருபாற்பெருந்திணை-6)

இது  பருவமயங்கல். பிறவும்  வந்தவழிக்   கண்டுகொள்க.  மெய்ப்
பாட்டியலுள் "இன்பத்தை வெறுத்தல்" (மெய்ப்பாடு - 22)  முதலாக
நிகழ்பவை பெருளாக வருங்கிளவியும் இதன் பகுதியாகக் கொள்க.  (54)

55. முன்னைய நான்கும் முன்னதற் கென்ப.

இது கைக்கிளைக்குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று.

முன்னைய    நான்கும் - மேற்சொல்லப்பட்ட நான்கினும் முந்துற்ற
நிலைமை    நான்கும்,    முன்னதற்கு    என்ப  -   முற்கூறப்பட்ட
கைக்கிளைக்காம் என்ப.

அவையாவன:-    ஏறா   மடற்றிறம்,   இளமை      தீராத்திறம்,
தேறுதலொழிந்த  காமத்து மிகாத்திறம், மிக்க காமத்தின் மாறாகாத்திறம்
என்பன.

ஏறாமடற்றிறம்  வெளிப்பட  இரத்தலாம், இளமை தீராத்திறம், நலம்
பாராட்டலாம். தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம், புணராவிரக்கமாம்.
மிக்க காமத்தின் மாறாகாத்திறம், நயப்புறுத்தலாம்.

இவை ஒருவாற்றான் உணர்த்தியவாறு.

"கைக்கிளை செந்திறம் பெருந்திணை நோந்திறம்
அத்திறம் இரண்டும் அகத்திணை மயங்காது
அத்திணை யானே யாத்தனர் புலவர்."

இதனானே     கைக்கிளை    இன்பம்   பயப்ப வருமென்பதூஉம்,
பெருந்திணை துன்பம் பயப்ப வருமென்பதூஉம் அறிந்துகொள்க.   (55)

56. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர்.

இதுவும் அகத்திணைக்கு இன்றியமையாத செய்யுளை   வரையறுத்து
உணர்த்துதல் நுதலிற்று.

நாடக   வழக்காவது,    சுவைபட    வருவனவெல்லாம்  ஓரிடத்து
வந்தனவாகத் தொகுத்துக்  கூறுதல்.    அஃதாவது    செல்வத்தானும்,
குலத்தானும்   ஒழுக்கத்தானும்,   அன்பினானும்  ஒத்தார்  இருவராய்த்
தமரின்  நீங்கித்   தனியிடத்து   எதிர்ப்பட்டார்  எனவும்,  அவ்வழிக்
கொடுப்போரு  மின்றி    அடுப்போரு  மின்றி  வேட்கை  மிகுதியாற்
புணர்ந்தார் எனவும், பின்னும்  அவர்    களவொழுக்கம்      நடத்தி
இலக்கண      வகையான்    வரைந்தெய்தினார்    எனவும்,  பிறவும்
இந்நிகரனவாகிச்  சுவைபட  வருவனவெல்லாம் ஒருங்கு  வந்தனவாகக்
கூறுதல்.

உலகியல் வழக்காவது, உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது.

பாடல்  சான்ற  புலன்   நெறி வழக்கமாவது,  இவ்விருவகையானும்
பாடல்  சான்ற   கைக்கிளை   முதலாப்  பெருந்திணை    இறுவாய்க்
கூறப்படுகின்ற அகப்பொருள்.

கலியே பரிபாட்டு இரு பாவினும் உரியது ஆகும் என்மனார் புலவர்
என்றது,     கலியும்     பரிபாடலும்    என்னும்   இரண்டு பாவிலும்
உரிமையுடைத்தாம் என்று உரைப்பர் புலவர் என்றவாறு.

எனவே     இவை  இன்றியமையாதன என்றவாறு. ஒழிந்த பாக்கள்
இத்துணை     அகப்பொருட்கு      உரியவாய்       வருதலின்றிப்
புறப்பொருட்கும்  உரியவாய் வருதலின் ஓதாரா