நொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்
கால மன்றியுங் கரும்பறுத்து ஒழியாது
அரிகால் அவித்துப் பலபூ விழவில்
தேம்பால் மருதம் முதல்படக் கொன்று
வெண்டலைச் செல்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்
சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம்
முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயருஞ்
செழும்பல் வைப்பிற் பழனப் பாலும்
ஏனல் உழவர் வரகுமீது இட்ட
கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை
மென்தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலந் தழீஇய புறவணி வைப்பும்
பல்பூஞ் செம்மற் காடுபயம் மாறி
அரக்கத்து அன்ன நுண்மணற் கோடுகொண்டு
ஒண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும்
பணைகெழு வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
"கடலவுங் காட்டவும்
அரண்வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக்
கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்து அருந்திறல்
மரபிற் கடவுட் பேணியர் உயர்ந்தோன் ஏந்திய
அரும்பெறற் பிண்டங் கருங்கண் பேய்மகள்
கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகிழ்
இரும்பலி எறும்பு மூசா இறும்பூது மரபிற் கருங்கண்
காக்கையொடு பருந்திருந்து ஆர ஓடாப் பூட்கை
ஒண்பொறிக் கழற்காற் பெருஞ்சமந் ததைந்த
செருப்புகல் மறவர் உருமுநிலன் அதிர்க்குங்
குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற்கு
எறியும் படுஞ்சினவேந்தே நின்தழங்குகுரல்
முரசே." (பதிற்றுப்.30)
வென்றோர் விளக்கமும் - வென்றோர்மாட்டு உளதாகிய விளக்கமும்.
"அறாஅ யாணர் அகன்கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பகடு உதிர்த்த மென்செந் நெல்லின்
அம்பண அளவை உறைகுவித் தாங்குக்
கடுந்தேன் உருகிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாரின்
அலந்தனர் பெருமநின் உடற்றி யோரே
ஊரெரி கவர உருத்தெழுந்து உரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப
மதில்வாய்த், தோன்றல் ஈயாது தம்பழி ஊக்குநர்
குண்டுகண் அகழிய குறுந்தாள் ஞாயில்
ஆரெயில் தோட்டி வௌவினை ஏறொடு
கன்றுடை ஆயம் தரீஇப் புகல்சிறந்து
புலவுவில் இளையர் அங்கை விடுப்ப
மத்துக்கயிறு ஆடா வைகற்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழுநர் கழுவுள்தலை மடங்கப்
பதிபாழ் ஆக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றென
அருஞ்சமத்து அருநிலை தாங்கிய புகர்நுதல்
பெருங்களிற்று யானையொடு அருங்கலந் தராஅர்
மெய்பனி கூரா அணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் ஊழி
உரவரும் மடவரும் அறிவுதெரிந்து எண்ணி
அறிந்தனை அருளாய் ஆயின்
யாரிவண் நெடுந்தகை வாழு மோரே." (பதிற்றுப்.71)
தோற்றார் தேய்வும் - தோற்றோர் தேய்வு கூறுதலும்.
உதாரணம்
"வான்மருப்பின் களிற்றியானை
மாமலையிற் கணங்கொண்டவர்
எடுத்தெறிந்த விறல்முரசம்
கார்மழையின் கடிதுமுழங்கச்
சாந்துபுலர்ந்த வியன்மார்பின்
தொடி சுடர்வரும் வலிமுன்கைப்
புண்ணுடை எறுழ்த்தோள் புடையலங் கழற்கால்
பிறக்கடி ஒதுங்காப் பூட்கை ஒள்வாள்
ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று உரைஇ
இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென
அம்புடை வலத்தர் உயர்ந்தோர் பரவ
அனையை ஆகல் மாறே பகைவர்
கால்கிளர்ந்து அன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
புலவரைத் தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் தெம்முனை யானே." (பதிற்றுப்.80)
குன்றா சிறப்பின் கொற்றவள்ளையும் -
குறைவுறுதலைச் செய்யாத வென்றிச் சிறப்பினையுடைய கொற்றவள்ளையும்.
கொற்றவள்ளை: தோற்ற கொற்றவன் அளிக்கும்
திறை.
உதாரணம் வந்துழிக் காண்க.
அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ - மாற்றார்
விடுபடைக்கலன் முதலியனவற்றைத்
தம்மாட்டுத் தடுத்து உளன்
அழிந்தோர்ப் பேணித் தழுவிக்கோடலொடு தொகுத்து எண்ணின்.
உதாரணம்
"வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
நூலரி மாலை சூடிக் காலின்
தமியன் வந்த மூதி லாளன்
|