தீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத் துரும்எறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக
கராஅங் கலித்த குண்டுகண் அகழி
இடங்கருங் குட்டத் துடன்தொக் கோடி
யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉங்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புறழ் புரிசைச் செம்மல் மூதூர்
வம்பணி யானை வேந்தகத்து உண்மையின்
நல்லஎன் னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை செருவத் தானே."
(புறம்.37)
திறற்பட ஒருதான் மண்டிய குறுமையும் - வலிபட ஒரு தானாகிச்
சென்ற குற்றுழிஞையும்.
உதாரணம்
"கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக்
குடுமி களைந்தநுதல் வேம்பின் ஒண்டளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல் வாழ்க அவன் கண்ணி தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு
அயினியும் இன்றயின் றனனே வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
அழுந்தப் பற்றி அகல்விசும்பு ஆர்ப்பெழக்
கவிழ்ந்துநிலஞ் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே." (புறம்.77)
உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில் - வெகுண்டு
வருகின்ற படையைப் பேணார் ஆரெயில் உழிஞையும்.
உதாரணம்
"மயிற்கணத்து அன்னார் மகிழ்தேறல் ஊட்டக்
கயிற்கழலார் கண்கனல் பூப்ப - எயிற்கண்ணார்
வீயப்போர் செய்தாலும் வென்றி அரிதரோ
மாயப்போர் மன்னன் மதில்."
(புறப்.உழிஞை.11)
உளப்பட சொல்லப்பட்ட நாலிரு வகைத்து - உட்படக்
கூறப்பட்ட
எட்டு வகைத்து.
பதினெட்டு, இருபத்தொன்பது
என்பார் மதம் விலக்கியமை
தோன்றப் பெயர்த்துந் தொகை கூறினார்.
இது கூறியது கூறலன்று; தொகை.
(10)
69. குடையும் வாளும் நாள்கோள் அன்றி
மடையமை ஏணிமிசை மயக்கமுங் கடைஇச்
சுற்றமர் ஒழிய வென்றுகைக் கொண்டு
முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய
அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்றதன்
புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும்
நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று
ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும்
மதில்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும்
இகல்மதிற் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும்
வென்ற வாளின் மண்ணோடு ஒன்றத்
தொகைநிலை என்னுந் துறையொடு தொகைஇ
வகைநான் மூன்றே துறையென மொழிப.
இதுவும் அது.
குடை நாட்கோள் முதலாகச் சொல்லப்பட்டுள்ள பன்னிரண்டு
துறையும் உழிஞைக்குரிய துறை,
மேற்சொல்லப் பட்டவற்றின்
விரியும் பன்னிரண்டு உள என்றவாறு.
குடையும் வாளும் நாள்கோள் -
குடைநாட்கோள் வாள்நாட்கோள்
என வருவனவும்.
உதாரணம்
"நெய்யணிக செவ்வேல் நெடுந்தேர் நிலைபுகுக
கொய்யுளைமா கொலைகளிறு பண்விடுக - வையகத்து
முற்றக் கடியரணம் எல்லா முரண் அவிந்த
கொற்றக் குடைநாட் கொள."
(புறப்.உழிஞை.2)
இது குடைநாட்கோள்.
"வாள்நாட் கொளலும் வழிமொழிந்து வந்தடையாப்
பேணார் பிறைதொடூஉம் பேர்மதில் - பூணார்
அணிகொள் வனமுலையார் ஆடரங்கம் ஏறிப்
பிணிகொள்பே யாடும் பெயர்த்து."
(புறப்.உழிஞை.3)
இது வாள்நாட்கோள்.
மடை அமை ஏணி மிசை மயக்கமும்-மதிலிடத்துமடுத்தல்
அமைந்த
ஏணிசார்த்தி அதன்மேல் பொரும் போர்மயக்கமும்.
உதாரணம்
"சுடுமண் நெடுமதில் சுற்றிப் பிரியார்
கடுமுரண் எஃகங் கழிய- அடுமுரண்
ஆறினார் அன்றி அரவும் உடும்பும்போல்
ஏறினார் ஏணி பலர்."
(புறப். உழிஞை. 19)
கடைஇச் சுற்றமர் ஒழிய வென்றுகைக்கொண்டு முற்றியமுதிர்வும்
செலுத்திச் சுற்றமர் ஒழிக என்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும்.
உதாரணம்
"காலை முரசம் மதிலியம்பக் கண்கனன்று
வேலை விறல்வெய்யோன் நோக்குதலும் - மாலை
அடுதும் அடிசிலென்று அம்மதிலுள் இட்டார்
தொடுகழலார் மூழை துடுப்பு."
(புறப்.உழிஞை.23)
முற்றிய அகத்தோன்
வீழ்ந்த நொச்சியும் - முற்ற
அகப்பட்ட அகத்தினுள்ளான் வீழ்ந்த நொச்சியும்.
உதாரணம்
"நீரறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
மெல்லிழை மகளிர் ஐதகல் அல்குல்
தொடலை யாகவுங் கண்டனம் இனியே
வெருவரு குருதியொடு மயங்கி
|