இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   56
Zoom In NormalZoom Out


 

காதல்    அரியசிறப்பினாற்    பல    நெறியாயினும்    நில்லாத
உலகத்தைப் பொருந்திய நெறியை யுடைத்து.

பாங்கருமையாவது, ஒருவற்கு ஒரு துணையாகாமை.

நிலையாமை    மூவகைப்படும்.   இளமை  நிலையாமை,  செல்வம்
நிலையாமை, யாக்கை நிலையாமை என, இவற்றுள்,

இளமை நிலையாமை யாவது,

"பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்
கனிஉதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோற்கண்ணள் ஆகுங் குனிந்து"     (நாலடி - இளமை. 7)

செல்வம் நிலையாமையாவது,

"அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண்டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று."         (நாலடி.செல்வம்.1)

யாக்கை நிலையாமையாவது முன்னர்க் காட்டுதும்.

அதற்கு இது புறனாயவாறு என்னையெனின்,   "ஏறிய  மடற்றிறம்"
(அகத்திணை.54)
    முதலாகிய     நோந்திறக்    காமப்     பகுதி
அகத்திணை  ஐந்தற்கும்    புறனாயவாறு   போல   இது புறத்திணை
ஐந்தற்கும் புறனாகலானும்  இதுபோல   அதுவும்        நிலையாமை
நோந்திறம்பற்றியும் வருதலானும் அதற்கு இது புறனாயிற்று.        (18)

77. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்
பண்புற வரூஉம் பகுதி நோக்கிப்
புண்கிழித்து முடியும் மறத்தி னானும்
ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன்
பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்
இன்னனென்று இரங்கிய மன்னை யானும்
இன்னது பிழைப்பின் இதுவா கியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும்
இன்னகை மனைவி பேஎய் புண்ணோன்
துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்
நீத்த கணவற் றீர்த்த வேலின்
பெயர்த்த மனைவி வஞ்சி யானும்
நிகர்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும்
முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டான்
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ
ஈரைந் தாகும் என்ப பேரிசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
மாய்ந்த பூசல் மயக்கத் தானும்
தாமே எய்திய தாங்கரும் பையுளும்
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமும்
நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையும்
கழிந்தோர் தேஎத்துக் கழிபடர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்
காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்
நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்
சொல்லிடை இட்ட மாலை நிலையும்
அரும்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பயந்த
தாய்தப வரூஉந் தலைப்பெயல் நிலையும்
மலர்தலை உலகத்து மரபுநன்கு அறியப்
பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு
நிறையருஞ் சிறப்பின் துறையிரண்டு உடைத்தே.

இது காஞ்சித்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

'மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை' முதலாகத் தலையொடு முடிந்த
நிலையொடு     கூடப்    பத்தாகும்  என்பர்  சிலர்,  'பூசல் மயக்கம்'
முதலாகக் 'காடுவாழ்த்து' உட்பட  வருவனவற்றொடும்  இருவகைப்பட்ட
துறையை உடைத்து.

[எனவே,    முற்கூறிய  பத்தும்  ஒருவகை  யென்பதும்  பிற்கூறிய
பத்தும் மற்றொரு வகை யென்பதும் பெறப்பட்டன.]

மாற்று  அருங்  கூற்றம் சாற்றிய பெருமையும் - மாற்றுதற்கு அரிய
கூற்றம் வருமெனச் சொல்லப்பட்ட பெருங்காஞ்சியும்.

உதாரணம் 

"இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடையிலை நடுவணது இடைபிறர்க் கின்றித்
தாமே யாண்ட ஏமங் காவலர்
இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே
அதனால், நீயுங் கேள்மதி அத்தை வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே
கள்ளி யேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்குநோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கலன் ஆக விலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாராமுன்னே
செய்ந்நீ முன்னிய வினையே
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே."      (புறம்.363)

கழிந்தோர் ஒழித்தோர்க்குக்  காட்டிய முதுமையும் - அறிவான்
மிக்கோர் அல்லாதார்க்குச் சொன்ன முதுகாஞ்சியும்.

உதாரணம்

"பல்சான் றீரே பல்சான் றீரே
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயன்இல் மூப்பின் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்குங் காலை இரங்குவிர் மாதோ
நல்லது