பணிந்துமொழி யலனே
இஃதிவர் படிவம் ஆயின் வைஎயிற்று
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
மரம்படு சிறுதீப் போல
அணங்கா யினன்தான் பிறந்த ஊர்க்கே."
(புறம்.341)
கொண்டோன் தலையொடு முலையும் முகனும் சேர்த்தி முடிந்தநிலையொடு
தொகைஇ ஈர் ஐந்து ஆகும் என்ப -
தன்னைக் கொண்டான் தலையொடு
தனது முலைகளையும் தம்
முகத்தையும் சேர்த்தி இறந்த நிலையும் கூடிப் பத்தாகும் என்பர் சிலர்.
உதாரணம்
"கொலையானாக் கூற்றே கொடிதே கொழுநன்
தலையானான் தையலாள் கண்டே- முலையான்
முயங்கினாள் வாள்முகமுஞ் சேர்த்தினாள் ஆங்கே
உயங்கினாள் ஓங்கிற்று உயிர்." (புறப்.காஞ்சி.13)
பேர்இசை மாய்ந்தமகனை சுற்றிய
சுற்றம் மாய்ந்த
பூசல்மயக்கமும் - பெரிய
இசையையுடையனாய் மாய்ந்தவனைச்
சுற்றிய சுற்றத்தார் அவன் மாய்ந்தமைக்கு அழுத மயக்கமும். [ மகன் - ஆண்மகன். ]
உதாரணம்
"மீன்உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே."
(புறம்.277)
தாம் எய்திய தாங்கு அரும் பையுளும் - சிறைப்பட்டார்
தாம் உற்ற பொறுத்தற்கு அரிய துன்பத்தினைக் கூறுங்
கூற்றும்
உதாரணம்
"குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே."
(புறம்.74)
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கி செல்வோர் செப்பிய மூதானந்தமும்
- கணவனொடு இறந்த செலவை நோக்கிச் செல்வோர்
செப்பிய மூதானந்தமும்.
உதாரணம்
"ஓருயி ராகஉணர்க உடன்கலந்தார்க்கு
ஈருயிர் என்பர் இடைதெரியார் - போரில்
விடன்ஏந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும்
உடனே உலந்தது உயிர்."
(புறப்.சிறப்பிற் பொதுவியல் - 9)
நனி மிகு சுரத்திடை கணவனை இழந்து தனிமகள் புலம்பிய
முதுபாலையும் - மிகுதி மிக்க சுரத்திடைக்
கணவனை யிழந்து
தனியளாய்த் தலைமகள் வருந்திய முதுபாலையும்.
உதாரணம்
"ஐயோ எனின்யான் புலியஞ் சுவலே
அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கவல்லேன்
என்போற் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
இன்னா செய்த அறனில் கூற்றே
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழற் சேர்க நடத்திசின் சிறிதே."
(புறம்.255)
கழிந்தோர் தேஎத்து கழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் -
செத்தோர்மாட்டுச் சாவாதார் வருத்தமுற்றுப் புலம்பிய
கையறு நிலையும்.
உதாரணம்
"செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும்
உற்றன் றாயினும் உய்வின்று மாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார்
மண்டமர்க் கடக்குந் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே."
( புறம்.226)
காதலி இழந்த
தபுதாரநிலையும் - காதலியை இழந்த
கணவனது தபுதாரநிலையும்.
உதாரணம்
"யாங்குப்பெரி தாயினும் நோயள வெனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே."
(புறம்-245)
காதலன் இழந்த தாபத நிலையும் - காதலனை இழந்தவள்
நிற்கும்
தாபத நிலையும்.
உதாரணம்
"அளிய தாமே சிறுவெள் ஆம்பல்
இளையம் ஆகத் தழையா யினவே, இனியே
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படூஉம் புல்லா யினவே."
(புறம்.248)
நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇ இடையிட்ட மாலைசொல் நிலையும் -
கணவனொடு கிழத்தி பெரிய
அழற்புகுவழி
இடையிட்ட மாலைக்காலத்துக் கூறும் கூற்றும்.
உதாரணம்
"பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரல்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கரிது ஆகுக தில்ல எமக்கெம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே."
(புறம்.246)
அரும்பெருஞ் சிறப்பின் புதல்வன் பயந்ததால் தப வரூஉம் தலைப்
பெயல் நிலையும் - அரும்பெருஞ் சிறப்பினையுடைய மகற்பெற்ற
தாய் சாதற்கண் அவனைத் தலைப்பெயல் நிலையும். [தலைப்பெயல் - சேர்தல்]
உதாரணம்
"இடம்படு ஞாலத்து இயல்போ கொடிதே
தடம்பெருங்கண் பாலகன் என்னுங் - கடன்கழித்து
முள்ளெயிற்றுப் பேதையா
|