இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   60
Zoom In NormalZoom Out


 

வெய்ய
அடுந்திறல் ஆழி அரவணையாய் என்றும்
நெடுந்தகை நின்னையே யாம்."         (புறப். பாடாண்.3)

இது பரவல்,

"வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் சேறி
நெறிகொள் படிவத்தோய் நீயும் - பொறிகட்கு
இருளீயும் ஞாலத்து இடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன்."              (புறப்.பாடாண்.42)

இது புலவராற்றுப்படை,

"மாயவன் மாயம் அதுவால் மணிநிரையுள்
ஆயனா எண்ணல் அவனருளான் - காயக்
கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச்
சுழலழலுள் வைகின்று சோ."           (புறப்.பாடாண்.40)

இது கந்தழி.

"வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமிதே
ஈண்டியம் விம்ம இனவளையார் - பூண்தயங்கச்
சூலமோ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு
வேலனோ டாடும் வெறி."            (புறப் .பாடாண்.41)

இது     வள்ளி.  வள்ளி  என்பது  ஈண்டு வெறியாட்டுகொடிநிலை
வந்த   வழிக்   காண்க.   இனி   அவை சார்ந்து வருமாறு முன்னர்க்
காட்டுதும்.

இனிக் காமப்பகுதி வருமாறு :-

"மலைபடு சாந்தம் மலர்மார்ப யாம்நின்
பலர்படி செல்வம் படியேம் - புலர்விடியல்
வண்டினங்கூட் டுண்ணும் வயல்சூழ் திருநகரிற்
கண்டனங் காண்டற் கரிது."           (புறப்.பாடாண்.47)

இஃது      ஊடற்பொருண்மைக்கண்    வந்தது.  இது, இயற்பெயர்
சார்த்தியும் வரும்.

"வையைதன்
நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார்
போர் முற்றொன்று அறியாத புரிசைசூழ் புனலூரன்." 
                                    (கலி.மருதம்.2)

என்பது    குறிப்பினாற்  பாட்டுடைத்  தலைமகனே  கிளவித்தலை
 மகனாக வந்தது.

"பூந்தண்டார்ப் புலர்சாந்தில் தென்னவன் உயர்கூடல்
தேம்பாய அவிழ்நீலத் தலர்வென்ற அமருண்கண்
ஏந்தகோட் டெழில்யானை ஒன்னாதார்க் கவன்வேலில்
சேந்துநீ இனையையால் ஒத்ததோ சின்மொழி."
                                   (கலி.குறிஞ்சி.21)

இது காமத்தின்கண் வந்தது.

81. காமப்பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்.

இது,   கடவுள்   மாட்டுவருவதொரு பாடாண் பக்கம் உணர்த்துதல் நுதலிற்று.

காமப்பகுதி    கடவுளும் வரையார் - காமப்பகுதி கடவுள் மாட்டும்
வரையார். ஏனோர்பாங்கினும்   (வரையார்)   என்மனார்   புலவர்  -
ஏனோர்மாட்டும் வரையார் என்பர் புலவர்.

என்றது, கடவுள் மாட்டுத்   தெய்வப்பெண்டிர்   நயந்த   பக்கமும்,
மானிடப்பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்பெறும் என்றவாறு.

உதாரணம்

"நல்கினும் நாமிசையாள் நோம்என்னும் சேவடிமேல்
ஒல்கினும் உச்சியாள் நோம்என்னும் - மல்கிருள்
ஆடல் அயர்ந்தாற்கு அரிதால் உமையாளை
ஊடல் உணர்த்துவதோர் ஆறு."       (புறப்.பாடாண். 48)

இது தெய்வப் பெண்டிர் நயந்த பக்கம்.

"அரிகொண்ட கண்சிவப்ப அல்லினென் ஆகம்
புரிகொண்ட நூல்வடுவாப் புல்லி - வரிவண்டு
பண்நலங்கூட் டுண்ணும் பனிமலர்ப் பாசூர்என்
உண்ணலங் கூட்டுண்டா னூர்."        (புறப்.பாடாண். 49)

இது மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்.                    (23)

82. குழவி மருங்கினும் கிழவ தாகும்.

இது,   குழவிப்   பருவத்தும்  காமப்பகுதி  பாடப்பெறும்  என்பது
உணர்த்துதல் நுதலிற்று.

குழவி   மருங்கினும்    கிழவது   ஆகும்  -  குழவிப் பருவத்தும்
காமப்பகுதி   கூறல்பெறும்     (அவர்  விளையாட்டு     மகளிரொடு
பொருந்தியக்கண்.)

உதாரணம

"வரிப்பந்து கொண்டொளித்தாய் வாள்வேந்தன் மைந்தா
அரிக்கண்ணி அஞ்சி அலற - எரிக்கதிர்வேல்
செங்கோலன் நுங்கோச் சினக்களிற்றின் மேல்வரினும்
எங்கோலம் தீண்டல் இனிது."      (புறப்.பாடாண்.50)
(24)

83. ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமை யான.

இதுவும் அது,

ஊரொடு     தோற்றமும்   உரித்து   என மொழிப - ஊரின்கண்
காமப்பகுதி      நிகழ்த்தலும்   உரித்து   என்று  சொல்வர்  புலவர்,
வழக்கொடு  சிவணிய     வகைமையான  -  அது  நிகழுங்  காலத்து
வழக்கொடு பொருந்திநடக்கும் வகைமையின் கண்.

'ஊரொடு      தோற்றம்' என்பது பேதை முதலாகப் பேரிளம்பெண்
ஈறாக    வருவது.   'வழக்கு'  என்பது  சொல்லுதற்கு ஏற்ற நிலைமை.
'வகை' என்பது    அவரவர் பருவத்திற்கு ஏற்கக்கூறும் வகைச்செய்யுள்.
உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க.                         (25)

84 மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே.

இதுவும்,   பாடாண்பாட்டிற்கு   உரியதொருமரபு     உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்)  மெய்ப்பெயர்  மருங்கின்   வைத்தனர்        வழியே -
மேற்சொல்லப்பட்டனவும்    இனிக்    கூறுகின்றனவும்    ஒருவற்குக்
காரணமாகி   மெய்ப்பெயராகி    வரும்    பொதுப்பெயரான்  அன்றி
இயற்பெயரின் பக்கத்து வைத்தனர் நெறிப்பட.                  (26)

85. கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.

இது, சார்ந்துவருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

வடு  நீங்கு  சிறப்பின்  கொடிநிலை கந்தழி வள்ளி என்ற முதலன
மூன்றும்- குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய கொடிநிலை முதலாகச்