சொல்லப்பட்ட முற்பட்ட மூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய
வரும் - பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள்
வாழ்த்தொடு பொருந்தி வரும்.
உதாரணம்
"பூங்கண் நெடு முடிப் பூவைப்பூ மேனியான்
பாம்புண் பறவைக் கொடிபோல - ஓங்குக
பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க்
கொல்யானை மன்னன் கொடி."
(புறப்.பாடாண்.39)
இது கொடிநிலை.
"அன்றெறிந் தானும் இவனால் அரண்வலித்து
இன்றிவன் மாறாய் எதிர்வார்யார் - கன்றும்
அடையார் மணிப்பூண் அடையாதார் மார்பின்
சுடராழி நின்றெரியச் சோ."
(புறப்.உழிஞை. 7)
இது கந்தழி.
வள்ளியிற் சார்ந்து வருமாறு வந்தவழிக் கண்டுகொள்க.
"வந்தது கொண்டு வாராத
துணர்த்தல்" (தொல்.மரபி.110)
என்பதனால் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும்
சார்த்தி வருமெனவும் கொள்க. முருகாற்றுப்படையுள்,
"மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி"
(திருமுருகு . 71-73)
என்றவழி, ஒரு முகத்தாற் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காண்க.
இனிப் பரவற்குச் சார்ந்து
வருமாறு:- "கெடலரு மாமுனிவர்
கிளர்ந்துடன்" என்னுங் கலிப்பாட்டினுள்,
"அடுதிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டெழின் மார்பில்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயல்உறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன்
ஒன்று முதுகடல் உலகம் முழுவதும்
ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே"
(யாப்-விரு.83.மேற்கோள்)
என்பதனுட் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தியவாறு காண்க.
பிறவும் அன்ன. (27)
86. கொற்ற வள்ளை ஓரிடத்தான.
இது, பாடாண் திணைக்கு
உரியதொரு பொருள் வேறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.
கொற்றவள்ளை ஓர் இடத்து ஆன - கொற்ற வள்ளையும் ஓர்
இடத்துப் பாடாண்பாட்டாம்.
என்றது, துறைகூறுதல்
கருத்தாயின் வஞ்சியாம்; புகழ்தல்
கருத்தாயின் பாடாண்திணையாம் என்றவாறு.
உதாரணம்
"வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்தலுற் றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற
நின்ஒன்று கூறுவது உடையேன் என் எனின்,
நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை அவர்நாட்டு
இறங்குகதிர்க் கழனிநின் இளைஞருங் கவர்க
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க
மின்னுநிமிர்ந் தன்ன நின் ஒளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க என்னதூஉம்
கடிமரந் தடித லோம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே."
(புறம்.57) (28)
87. கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்
அடுத் தூர்ந் தேத்திய இயல்மொழி வாழ்த்தும்
சேய்வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க் குரைத்த கடைநிலை யானும்
கண்படை கண்ணிய கண்படை நிலையும்
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்
வேலை நோக்கிய விளக்கு நிலையும்
வாயுறை வாழ்த்தும் செவியறி வுறூஉவும்
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்
கைக்கிளை வகையோடு உளப்படத் தொகைஇத்
தொக்க நான்கும் உளவென மொழிப.
இது, பாடாண்திணைக்குத் துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
'கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தல்,
முதலாக' வேலை நோக்கிய விளக்குநிலை 'ஈறாகச் சொல்லப்பட்டனவும், 'வாயுறை வாழ்த்து 'முதலாகக்'
கைக்கிளை' உளப்பட்ட நால்வகையும் பாடாண்திணைக்குத் துறையாம் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல் என்றது கொடுப்போர் ஏத்தல்
எனவும், கொடார்ப் பழித்தல் எனவும்,
கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் எனவும் மூவகைப்படும்.
இதனாற் பெற்றது, ஈவோரைப் புகழ்தலும்,
ஈயாதோரைப் பழித்தலும். ஈவோரைப் புகழ்ந்து ஈயாதோரைப் பழித்தலும் என்றவாறு.
கொடுப்போர் ஏத்தல் வருமாறு
"தடவுநிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாம்சில
அரிசி வேண்டினேம் ஆகத் தான்பிற
வரிசை அறிதலில் தன்னுந் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே அன்னதோர்
தேற்றா ஈகையும் உனதுகொல்
போற்றார் அம்ம பெரியோர்தங் கடனே,"
(புறம்.140)
"பாரி பாரி யென்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டீண்டு உலகுபுரப் பதுவே."
(புறம்.107)
கொடார்ப் பழித்தல் வருமாறு
"ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது அல்லென மறுத்தலும் இரண்டும்
|