இகலிரிய எங்கோன்
கடிமுரசங் காலைச்செய் வித்து."
(புறப். பாடாண்.14)
வேலை நோக்கிய விளக்குநிலையும் - வேலினைக் குறித்த விளக்கு நிலையும்.
நோக்குதலாவது, விளக்கு ஏதுவாக வேலின் வெற்றியைக் காட்டுதல்.
உதாரணம்
"வளிதுரந்தக் கண்ணும் வலந்திரியாப் பொங்கி
ஒளிசிறந்தாங்கு ஓங்கி வரலால் - அளிசிறந்து
நன்னெறியே காட்டும் நலந்தெரி கோலாற்கு
வென்னெறியே காட்டும் விளக்கு." (புறப். பாடாண்.12)
வாயுறை வாழ்த்தும் - வெஞ்சொல்லைப் பிரித்தலின்றிப் பிற்பயக்குமென்று
வேம்பும் கடுவும்போல ஓம்படைக் கிளவியாலே
மெய்யுறக் கூறுதலும்.
வாயுறை வாழ்த்தின் இலக்கணம்
"வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்
தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று
ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே." (தொல்.செய்யு.108)
உதாரணம்
"காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு ஆயினுந் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமுங் கெடுமே."
(புறம்.184)
செவியறிவுறூவும் - உயர்ந்தோர்மாட்டு அவிந்து
ஒழுகுதல்
வேண்டும் எனச் செவியறிவுறுத்துக் கூறுதலும்.
செவியுறையின் இலக்கணம்
"செவியுறை தானே
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடனெனச் செவியுறுத் தற்றே." (தொல்.செய்யு.110)
உதாரணம்
"அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர்
தந்தைதாய் என்றிவர்க்குத் தார்வேந்தே - முந்தை
வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி
மொழிநின்று கேட்டல் முறை."
(புறப்.பாடாண்.33)
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்-மன்னன் இடத்ததாகி வரும் புறநிலை வாழ்த்தும். அது,
உதாரணம்
"வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே" (தொல்.செய்யு.106)
என்பதனால், இனிது வாழ்மின் என்னும் பொருள்மேல் வரும்.
உதாரணம்
"தென்றல் இடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை
முன்றில் முகைவிரியும் முத்தநீர்த் தண்கோளுர்க்
குன்றமர்ந்த கொல்ஏற்றான் நிற்காப்ப - என்றுந்
தீரா நண்பின் தேவர்
சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே."
(யா.விரு, 55-மேற்கோள்)
கைக்கிளை வகையொடு-ஆண்பாற்கூற்றுக்
கைக்கிளையும் பெண்பாற் கூற்றுக் கைக்கிளையும்.
இவையும் பாடாண் பாட்டாம் என்றவாறு.
உதாரணம்
"துடியடித் தோற்செவித் தூங்குகை நால்வாய்ப்
பிடியேயான் நின்னை இரப்பல் - கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலும்எம்
சாலேகம் சார நட"
(முத்தொள்.50)
எனவும்,
"அணியாய செம்பழுக்காய் வெள்ளிலையோ டேந்திப்
பணியாயோ எம்பெருமான் என்று - கணியார்வாய்க்
கோள்நலங் கேட்பதூஉங் கொங்கர் பெருமானார்
தோள்நலஞ் சேர்தற் பொருட்டு"
எனவும் வரும். பிறவும் அன்ன.
உளப்பட தொகைஇ தொக்க நான்கும் உள என மொழிப-உளப்படத் தொகைஇத்
தொக்க நான்கும் (முன்னையவும் இத்திணைக்கு) உள என மொழிப. (29)
88. தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயில்எடை நிலையும்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்
சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வயின் பெருமங் கலமும்
சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும்
நடைமிகுத்து ஏத்திய குடைநிழல் மரபும்
மாணார்ச் சுட்டிய வாள்மங் கலமும்
மன்எயில் அழித்த மண்ணுமங் கலமும்
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்
பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி
நடைவயின் தோன்றிய இருவகை விடையும்
அச்சமும் உவகையும் எச்சம் இன்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலங் கண்ணிய ஓம்படை உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே.
இதுவும் அது.
'துயிலெடை நிலை'
முதலாகப் 'பரிசில் விடைஈறாகச்
சொல்லப்பட்டனவும், நாளும் புள்ளும் நிமித்தமும் ஓம்படையும்
உட்பட்ட உலக வழக்கின் அறியும் மூன்று
காலமும் பற்றி வரும்
பாடாண்திணை என்றவாறு.
கிடந்தோர்க்கு தாவில் நல்இசை கருதிய சூதர் ஏத்திய துயில்எடை நிலையும்
- கிடந்தோர்க்குக் கேடு இல்லாத நற்புகழைப் பொருந்த
வேண்டிச் சூதர் ஏத்திய துயில் எடைநிலையும்.
உதாரணம்
"அளந்த திறையார் அகலிடத்து மன்னர்
வளந்தரும் வேலோய் வணங்கக் - கனந்தயங்கப்
பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்மைசூழ் தாமரைத்
தூமலர்க்கண் நேர்க துயில்".
(புறப்.பாடாண்.9)
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி
உறழத் தோன்றி பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇ சென்று
பயன் எதிர சொன்ன பக்கமும்.
|