இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   69
Zoom In NormalZoom Out


 

து   கொடுப்பது.  ஆரிடமாவது,  ஒன்றானும்   இரண்டானும்  ஆவும்
ஆனேறும் வாங்கிக்கொடுப்பது. தெய்வமாவது, வேள்விக்கு ஆசிரியராய்
நின்றார்  பலருள்ளும்  ஒருவர்க்கு  வேள்வித்தீ முன்னர்க் கொடுப்பது.
காந்திருவமாவது ஒத்த இருவர்   தாமே   கூடுங்கூட்டம்.  அசுரமாவது
வில்லேற்றினானாதல்  திரிபன்றி  யெய்தானாதல்   கோடற்குரியனெனக்
கூறியவழி அது செய்தார்க்குக் கொடுத்தல். இராக்கதமாவது  தலைமகள்
தன்னினும்   தமரினும்   பெறாது   வலிதிற்கொள்வது.  பைசாசமாவது,
களித்தார் மாட்டுந் துயின்றார்மாட்டுங் கூடுதல்.

"அறன்நிலை ஒப்பே பொருள்கோள் தெய்வம்
யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே
இராக்கதம் பேய்நிலை என்றிக் கூறிய
மறையோர் மன்றல் எட்டவை அவற்றுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் புணர்ப்பினதன்
பொருண்மை என்மனார் புலமை யோரே."

என்பதனாலுங்   கொள்க.  துறையமை  நல்யாழ்த் துணைமையோர்
சார்வாழ் கந்திருவர். அவர் இருவராகித்   திரிதலின்  துணைமையோர்
என்றார். துணையன்பாவது அவர் ஒழுகலாறோடொத்து  மக்கண்மாட்டு
நிகழ்வது. ஈண்டுக்  காமக்  கூட்டமென ஓதப்பட்டது மணவிகற்பமாகிய
எட்டனுள்ளுங்     கந்திருவமென்றவாறு.   மாலைசூட்டல்   யாதனுள்
அடங்குமெனின்    அதுவும்    ஒத்த    அன்பினராய்    நிகழ்தலிற்
கந்திருவப்பாற்படும்.

அறனும்  பொருளும்  இன்பமும்  என்னாது, இன்பமும் பொருளும்
அறனும் என்றது என்னை எனின், பலவகை உயிர்கட்கும் வரும் இன்பம்
இருவகைப்படும். அவையாவன, போகம் நுகர்தலும் வீடுபெறுதலும் என.
அவற்றுள் வீடுபேறு துறவறத்தில் நின்றார்க்கல்லது எய்தல் அரிதாதற்று.
போக நுகர்தல்  மனையறத்தார்க்கெய்துவது.   அவரெய்தும்  இன்பமும்
அவ்வின்பத்திற்குக்   காரணமாகிய   பொருளும்   அப்   பொருட்குக்
காரணமாகிய அறனும் எனக் காரிய காரணம் நோக்கி வைத்தார் என்க.

இதனாற்சொல்லியது  ஈண்டுக்  களவென்றோதப்படுகின்ற  ஒழுக்கம்
அறம்பயவாத புறநெறியன்று; வேதவிதியாகிய தந்திரம்என விகற்பமாகிய
நெறி கூறியவாறு.

90 ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே.

என் - எனின். இது காமக்கூட்டத்தின்கண்  தலைமகனும்  தலைமகளும்
எதிர்ப் படுந்திறனும் அதற்குக் காரணமும் உணர்த்துதல் நுதலிற்று.

ஒன்றே   வேறே   என்றிரு  பால்வயின்  என்பது  -  ஒருவனும்
ஒருத்தியுமாக இல்லறஞ்  செய்துழி.  அவ்விருவரையும்  மறுபிறப்பினும்
ஒன்றுவித்தலும் வேறாக்குதலுமாகிய இருவகை ஊழினும் என்றவாறு.

ஒன்றி உயர்ந்த பாலதாணையின்  என்றது-இருவருள்ளமும் பிறப்புத்
தோறும் ஒன்றி நல்வினைக்கண்ணே  நிகழ்ந்த  ஊழினது  ஆணையின்
என்றவாறு.

உயர்ந்ததன் மேற்சொல்லும் மனநிகழ்ச்சி உயர்ந்த பாலாயிற்று. காம
நிகழ்ச்சியின்கண் ஒத்த அன்பினராய்க் கூடுதல் நல்வினையான் அல்லது
வாராதென்பது கருத்து.

ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப என்பது---

ஒப்பு பத்துவகைப்படும். அவை,

"பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது
வகையே."                              (மெய்ப்.25)

என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம். அவற்றுள்
பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர்,
குறவர்,    நுளையர் என்றாற்போல    வருங் குலம்.   குடிமையாவது
அக்குலத்தினுள்ளார் எல்லாருஞ்சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய
ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்."            (குறள். 972)

எனப்  பிறரும்  குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டென்று
கூறினாராகலின்.    ஆண்மையாவது, ஆண்மைத்தன்மை.  அஃதாவது,
ஆள்வினையுடைமையும் வலி பெயராமையுமாம்.

"மொழியா ததனை முட்டின்று முடித்தல்"    (மரபியல். 190)

என்பதனால் தலைமகள்மாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது
பெண்டிர்க்கு இயல்பாகிய   நாணம் முதலாயினவும்  பெண்ணீர்மையும்.
ஆண்டென்பது,  ஒருவரினொருவர்  முதியரன்றி  ஒத்த பருவத்தராதல்;
அது  குழவிப்பருவங்  கழிந்து  பதினாறு  பிராயத்தானும் பன்னிரண்டு
பிராயத்தாளும் ஆதல். உருவு  என்பது  வனப்பு.  நிறுத்த  காமவாயில்
நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில். அஃதாவது,  ஒருவர்  மாட்டு
ஒருவர்க்கு   நிகழும் அன்பு. நிறை என்பது அடக்கம். அருள் என்பது
பிறர்  வருத்தத்திற்குப்  பரியும்  கருணை, உணர்வென்பது அறிவு. திரு
என்பது  செல்வம்.  இப்பத்து  வகையும்  ஒத்த  கிழவனும் கிழத்தியும்
எதிர்ப்படுவர் எனக் கொள்க.

மிக்கோ...  இன்றே    என்பது  -  இக்குணங்களால்   தலைமகன்
மிக்கானாயினுங் கடியப்படாது என்றவாறு.

எனவே    இவற்றுள்    யாதானும்   ஒன்றினாயினும்  தலைமகள்
மிக்காளாயின் ஐந்திணையிற் கடியப்படும் என்றவாறாம்.

பாலதாணையின்...   காண்ப     என்பது   -   ஒருவரையொருவர்
கண்டுழியெல்லாம் புணர்ச்சி வேட்கை தோற்றாமையிற் பாலதாணையான்
ஒருவரை