இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   71
Zoom In NormalZoom Out


 

என்பது  தடுமாறுதல்.  தெய்வமாயின் நின்றவழி நிற்கும். அவ்வாறன்றி,
நின்றுழி  நிற்கின்றிலள் என்று சுழற்சியும் அறிதற்குக்  கருவியா  யிற்று.
இமைப்    பென்பது    கண்ணிமைத்தல்.    தெய்வத்திற்குக்    கண்
இமையாமையின்  அதுவும்  அறிதற்குக்  கருவியாயிற்று. அச்சமென்பது
ஆண்மக்களைக்  கண்டு  அஞ்சுதல். அது தெய்வத்திற்கு இன்மையான்
அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அன்னவை  பிறவும்  என்றதனான்
கால்   நிலந்தோய்தல்   வியர்த்தல்   நிழலாடுதல்  கொள்க.  இவை
கருவியாகத் துணியப்படும் என்றவாறு.

காட்சி  முதலாகிய இத்துணையும் கைக்கிளைக் குறிப்பாம். இதற்குச்
செய்யுள்   வந்தவழிக் காண்க. இனிக் குறிப்பறிதல் கூறுகின்றாராகலின்,
அக்குறிப்பு நிகழும் வழி இவையெல்லாம் அகமாம்.  என்னை? இருவர்
மாட்டு மொத்த நிகழ்ச்சி யாதலான். இவை தலைமகள்மாட்டுப் புலப்பட
நிகழாது. ஆண்டுக் குறிப்பினாற் சிறிது நிகழுமென்று கொள்க.

அவை வருமாறு :-

"உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று".            [குறள்.1090]

என வரும். பிறவும் அன்ன.

93 நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி உரைக்குங் குறிப்புரை யாகும்.

என் - எனின்,  மேல் தலைமகளை இத்தன்மையள் எனத் துணிந்த
தலைமகள் குறிப்பறியாது சாரலுறின் பெருந்திணைப் பாற்படுமாகலானும்
இக் கந்திருவநெறிக்கு  ஒத்த  உள்ளத்  தாராதல்  வேண்டுமாதலானும்,
ஆண்டு   ஒருவரோடொருவர்    சொல்லாடுதல்    மரபன்மையானும்.
அவருள்ளக்   கருத்தறிதல்   வேண்டுதலின்,   அதற்குக்  கருவியாய்
உணர்த்துதல் நுதலிற்று.

நாட்டம்   இரண்டும்   என்பது  - தலைமகன்கண்ணும் தலைமகள்
கண்ணும் என்றவாறு.

அறிவுடம்படுத்தற்கு என்பது - ஒருவர் வேட்கைபோல இருவர்க்கும்
வேட்கை   உளதாகுங் கொல்லோ எனக்  கவர்த்து  நின்ற  இருவரது
அறிவினையும் ஒருப்படுத்தற்கு என்றவாறு.

கூட்டியுரைக்குங் குறிப்புரையாகும்  என்பது - தமது வேட்கையொடு
கூட்டி ஒருவர் ஒருவருக்கு உரைக்குங் காமக் குறிப்புரையாம் என்றவாறு.

இதன்   பொழிப்பு:-   இருவர்க்குங்   கவர்த்து   நின்ற  அறிவை
ஒருப்படுதற் பொருட்டு  வேட்கையொடு கூட்டிக் கூறுங் காமக் குறிப்புச்
சொல் இருவரது நாட்டமாகும் என்றவாறு.

ஆகும் என்பதனை நாட்டம் என்பதனொடு கூட்டியுரைக்க. இதற்குச்
செய்யுள்.

"பானலந் தண்கழிப் பாடறிந்து தன்ஐமார்
நூல்நல நுண்வலையாற் கொண்டெடுத்த - கானற்
படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் நோக்கம்
கடிபொல்லா என்னையே காப்பு."   (திணைமாலை நூற்:32)

கண்ணினான் அறிப என்றவாறு.

94 குறிப்பே குறித்தது கொள்ளு மாயின்
ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்.

என் - எனின், மேலதற்கொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

ஒருவர்    குறிப்பு   ஒருவர்   குறித்ததனைக்   கொள்ளுமாயின்,
அவ்விடத்துக் கண்ணினான் வருங் குறிப்புரை நிகழும் என்றவாறு.

எனவே,  குறிப்பைக்  கொள்ளாதவழி   அக்  குறிப்புரை நிகழாது
என்றவாறாம்.  இதனாற்  சொல்லியது   கண்ட   காலத்தே  வேட்கை
முந்துற்றவழியே இக்குண்ணினான் வருங்குறிப்பு நிகழ்வது; அல்லாதவழி
நிகழாது  என்றவாறு. இனிக் குறிப்பு நிகழுமாறும்  அதன்  வேறுபாடும்
மெய்ப்பாட்டியலுள் கூறுப. ஈண்டும் சில உதாரணம் காட்டுவம்.

"நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்".                 (குறள்,1093)

எனவும்,

"அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்."                (குறள். 1098)

எனவும் வரும். பிறவும் அன்ன. தலைமகன்  குறிப்புத்  தலைமகன்
அறிந்த வழியும் கூற்று நிகழாது, பெண்மையான். (6)

95 பெருமையும் உரனும் ஆடூஉ மேன.

பெருமை  யாவது - பழியும்  பாவமும் அஞ்சுதல். உரன் என்பது -
அறிவு.

இவை யிரண்டும் ஆண்மகனுக்கு இயல்பு என்றவாறு.

இதனானே  மேற்சொல்லப்பட்ட  தலைமகனது வேட்கைக் குறிப்புக்
கண்ட தலைமகன், அந்நிலையே  புணர்ச்சியை  நினையாது  வரைந்து
எய்தும் என்பது பெறுதும்.

"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு"               (குறள். 422)

என்பவாகலின். தலைமகன் இவ்வாறு கூறியதற்குச் செய்யுள் :-

"வேயெனத் திரண்டதோள் வெறிகமழ் வணர்ஐம்பால்
மான்வென்ற மடநோக்கின் மயிலியல் தளர்பொல்கி
ஆய்சிலம்பு அரியார்ப்ப வவிரொளி இழைஇமைப்பக்
கொடியென மின்னென அணங்கென யாதொன்றும்
தெரிகல்லா இடையின்கட் கண்கவர்பு ஒருங்கோட
வளமைசால் உயர்சிறப்பின் நுந்தைதொல் வியனகர்
இளமையான் எறிபந்தோ டிகத்தந்தாய் கேளினி;
பூந்தண்தார்ப் புலர்சாந்தின் தென்னவன் உயர் கூடல்
தேம்பாய அவிழ்நீலத் தலர்வென்ற அமருண்கண்
ஏந்துகோட் டெழில்யானை யொன்னாதார்க் கவன்வேலிற்
சேந்து நீ யினையை