இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   72
Zoom In NormalZoom Out


 

யால் ஒத்ததோ சின்மொழி;
பொழிபெயல் வண்மையான் அசோகந்தண் காவினுள்
கழிகவின் இளமாவின் தளிரன்னாய் அதன்தலைப்
பணையமை பாய்மான் தேர் அவன்செற்றார் நிறம்பாய்ந்த
கணையினு நோய்செய்தல் கடப்பன்றோ கனங்குழாய்;
வகையமை தண்தாரான் கோடுயர் பொருப்பின்மேல்
தகையிணர் இளவேங்கை மலரன்ன சுணங்கினாய்
மதவலி மிகுகடாஅத் தவன்யானை மருப்பினும்
கதவவால் தக்கதோ காழ்கொண்ட இளமுலை;
என வாங்கு
இனையன கூற இறைஞ்சுபு நிலநோக்கி
நினையுபு நெடிதொன்று நினைப்பாள் போன் மற்றாங்கே
துணையமை தோழியர்க் கமர்த்த கண்ணள்
மனையாங்குப் பெயர்ந்தாளென் அறிவகப் படுத்தே." 
                                        (கலித்.57)

"உறுகழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறுகரு நெய்தல் கண்போல் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை யிருந்த அல்குல்
ஐய அரும்பிய சுணங்கின் வைஎயிற்று
மையீர் ஓதி வாணுதற் குறுமகள்
விளையாட் டாயமொடு வெண்மணல் உதிர்த்த
புன்னை நுண்தாது பொன்னின் நொண்டு
மனைபுறந் தருதி யாயின் எனைய தூஉம்
இம்மனைக் கிழமை யெம்மொடு புணரில்
தீதும் உண்டோ மாத ராயெனக்
கடும்பரி நன்மான் கொடிஞ்சி நெடுந்தேர்
கைவல் பாகன் பையென இயக்க
யாந்தற் குறுகினம் ஆக ஏந்தெழில்
அரிவே யுண்கண் பனிவர லொடுக்கிச்
சிறிய இறைஞ்சினள் தலையே
பெரிய எவ்வம் யாமிவ ணுறவே."            (அகம் 230)

இவை உள்ளப்புணர்ச்சியான் வரைதல் வேண்டிப் பாங்கற்கு உரைத்தன.
                                                       (7)

95 அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.

என் - எனின். இது தலைமகட்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல்.

அச்சமும் நாணும் பேதைமையும் இம்மூன்றும் நாடோறு முந்துறுதல்
பெண்டிர்க்கு இயல்பு என்றவாறு.

எனவே    வேட்கையுற்றுழியும்   அச்சத்தானாதல்   நாணானாதல்
மடத்தானாதல்   புணர்ச்சிக்கு   இசையாது   நின்று   வரைந்தெய்தல்
வேண்டுமென்பது போந்தது. இவ்வாறு இருவரும் உள்ளப் புணர்ச்சியால்
நின்று வரைந்தெய்தி மெய்யுறும். இதற்குச் செய்யுள்:

"தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந்
தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த
பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு
முல்லையுந் தாய  பாட்டங்கால் தோழிநம்
புல்லினத் தாயர் மகளிரோ டெல்லாம்
ஒருங்கு விளையாட அவ்வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை
முற்றிழை  ஏஎர் மடநல்லாய் நீயாடுஞ்
சிற்றில்  புனைகோ சிறிதென்றான் எல்லா நீ
பெற்றேம்யா மென்று பிறர்செய்த இல்லிருப்பாய்
கற்ற திலைமன்ற காண்என்றேன் முற்றிழாய்
தாதுசூழ் கூந்தல் தகைபெறத் தைஇய
கோதை புனைகோ நினக்கென்றான் எல்லாநீ
ஏதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப்
பேதையை  மன்ற பெரிதென்றேன் மாதராய்
ஐய  பிதிர்ந்த  சுணங்கணி மென்முலைமேல்
தொய்யி  லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர்
செய்புறம் நோக்கி இருத்துமோ நீபெரிதும்
மையலை மாதோ விடுகென்றேன் தையலாய்
சொல்லிய வாறெல்லாம் மாறுமாறு யான்பெயர்ப்ப
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனைநீ
ஆயர் மகளிர் இயல்புரைத் தெந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின் யானுற்ற
நோயுங் களைகுவை மன்."                   (கலித்.111)

இது    தலைமகள் உள்ளப்புணர்ச்சியின் உரிமைபூண்டிருந்தவாறும்
வரைந்தெய்தக் கூறலுற்றவாறும் காண்க. (8)

96 வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றிச்
சிறப்புடை மரபினவை களவென மொழிப.

என் - எனின், மெய்யுறுபுணர்ச்சி நிகழுங்காலம் உணர்த்துதல் நுதலிற்று.

மேல், "பெருமையும் உரனும் ஆடூஉ மேன" எனவும்,

"அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப".        (தொல். கள.8)

எனவும் ஓதியவதனான் உள்ளஞ் சென்றவழியும் மெய்யுறு புணர்ச்சி
வரைந்தெய்தி நிகழ்ப என்றாராம்.  அவ்வழிச்   சாக்காடெல்லையாகிய
மெய்ப்பாடு வரின் மெய்யுற்றுப் புணரப்பெறுமென்பது உணர்த்திற்று.

வேட்கை    முதலாகச்   சாக்காடு   ஈறாக   ஓதப்பட்ட   காமச்
சிறப்புடையனவற்றாற் களவு ஆமென்று சொல்லுவர் என்றவாறு.

ஆனும்  ஆமும்  எஞ்சி  நின்றன.  இவற்றை   அவத்தையென்ப. அஃதேல்,  அவை  பத்துளவன்றே?  ஈண்டுரைத்தன ஒன்பதாலெனின்,
காட்சி  விகற்பமுங்  கூறினார்.  அஃது  உட்படப்  பத்தாம்.   காட்சி
விகற்பமாகிய ஐயமுந் துணிவும் முதலது; வேட்கை இரண்டாவது, என்று
கொள்க.

வேட்கை யாவது - பெறல்வேண்டு மென்னும் உள்ள நிகழ்ச்சி.

ஒருதலையுள்ளுத லாவது - இடைவிடாது நினைத்தல்.

"உள்ளிக்  காண்பென் போல்வன் முள்ளெயிற்று
அமிழ்தம் ஊறுஞ் செவ்வாய்க்
கமழகில் ஆரம் நாறும் அறல்போற் கூந்தற்
பேரமர் மழைக்கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே."       (குறுந்.286)

மெலித லாவது - உண்ணாமையான் வருவது.

ஆக்கஞ்செப்பலாவது - உறங்காமையும் உறுவ ஓதலும்  முதலாயின,
கூறுதல்.

"ஒண்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக்கடல் ஒலித்திரை போல
இரவி னானுந் துயிலறி யேனே".           (ஐங்குறு. 172)

என வரும்.

நாணுவரையிறத்தலாவது - நாண் நீங்குதல்.

"காமம் விடுவொன்றோ நாண்விடு நல்நெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு".             (குறள்.1247)

நோக்குவ   எல்லாம்    அவையே   போற   லாவது - தன்னாற்
காணப்பட்டன எல்லாந் தான் கண்ட உறுப்புப் போலுதல்.

"ஓங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லுங்
காந்தட் கிவரும் கருவிளம் பூக்கொள்ளும்
மாந்தளிர் கையில் தடவரு மாமயில்
பூம்பொழி னோக்கிப் புகுவன பின்செல்லுந்
தோளெனச் சென்று துளங்கொளி வேய்தொடு
நீள்கதுப் பிஃதென நீர் அறல் உட்புகும்".

என்றாற் போல்வன.

மறத்தல் - பித்தாதல்.   மயக்கமாவது -  மோகித்தல்.  சாக்காடு -
சாதல்,   இவற்றுள்   சாதல்  பத்தாம்.   அவத்தையாதலால்,  ஒழிந்த
எட்டுக்  களவு    நிகழ்தற்குக்     காரணமாம்  என்று     கொள்க.
இதுதலைமகட்கும்   தலைமகற்கும்   ஒக்கும். இவற்றிற்குச்    செய்யுள்
வந்தவழிக் காண்க.

98, முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல்
நன்னயம் உரைத்தல் நகைநனி உறாஅ
அந்நிலை யறிதல் மெலிவுவிளக் குறுத்தல்
தன்னிலை யுரைத்தல் தெளிவகப் படுத்தலென்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர்.

என்  -  எனின்,  இஃது  இயற்கைப்  புணர்ச்சிக்குரியதொரு திறன் உணர்த்துதல் நுதலிற்று.

தனியினால்   தலைமகளை   யெதிர்ப்பட்ட   தலைமகன்   தனது
பெருமையும்     அறிவும்     நீக்கி    வேட்கை    மீதூரப்புணர்ச்சி
வேண்டினானாயினும்,  தலைமகள் மாட்டு  நிற்கும்  அச்சமும்  நாணும்
மடனும்   நீக்குதலும்   வேண்டுமென்றே   அவை  நீங்குதற்பொருட்டு
இவையெல்லாம்  நிகழுமென்பது.  உலகத்துள்ளார்  இலக்கணமெல்லாம்
உரைக்கின்றாராகலின்,  இவ்வாசிரியர்  உரைக்கின்றவாற்றான்  நிகழ்தல்
பெரும்பான்மையாகவும்.

"சொல்லிய  நுகர்ச்சி  வல்லே பெற்றுழி" (தொல். களவியல் -11)
என ஓதுதலின், இவையெல்லாம் நிகழ்தலின்றிச் சிறுபான்மை  வேட்கை
மிகுதியாற் புணர்ச்சி கடிதின் முடியவும் பெறுமெனவுங் கொள்க.

முன்னிலையாக்கல்   என்பது   -   காமக்  குறிப்புண்மை அறிந்த
தலைமகன்  வேட்கையாற்  சாரநினைத்தவழித் தலைமகளும் வேட்கைக்
குறிப்புடையாளாயினும்  குலத்தின் வழி   வந்த   இயற்கையன்மையான்
நாணமும் அச்சமும் மீதுர அக் குறிப்பில்லாதாரைப்  போல்  நின்றவழி
அவளை முன்னிலையாகப் படுத்துச் சில கூறுதல்.

"ஒள்ளிழை மகளிரோ டோரையும் ஆடாய்
வள்ளிதழ் நெய்தற் றொடலையும் புனையாய்
விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய்
யாரை யோநிற்றொழுதனம் வினவுதும்
கண்டார் தண்டா நலத்தை தெண்டிரைப்
பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ
இருங்கழி மருங்கின் நிலைபெற் றனையோ
சொல்இனி மடந்தை என்றனென் அதன்எதிர்
முள்ளெயிற்று முறுவலுந் திறந்தன
பல்லிதழ் உண்கணும் பரந்தவால் பனியே." (நற்றிணை-155)

சொல்வழிப்படுத்தலாவது  -  தான்  சொல்லுகின்ற  சொல்லின்வழி
அவள் நிற்குமாறு படுத்துக் கூறுதல்.

"சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி  கதுமெனக்
காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ
கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப்
புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின்
தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின்
கண்ணே கதவ அல்ல நண்ணார்
ஆண்டலை மதில ராகவும் முரசுகொண்டு
ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன்
பெரும்பெயர்க் கூடல் அன்னநின்
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே."  
                                    (நற்றிணை-39)

நன்னய முரைத்த லாவது - தலைமகளினது நலத்தினை யுரைத்தல்.

"சேரல் மடவன்னஞ் சேரல் நடையொவ்வாய்
சேரல் மடவன்னஞ் சேரல் நடையொவ்வாய்
ஊர்திரை வேலி யுழக்கித் திரிவாள்பின்
சேரல் மடவன்னஞ் சேரல் நடையொவ்வாய்".
                                  (சிலப்.கானல் 23)

நகைநனி யுறாஅ அந்நிலை யறித லாவது - தலைமகன் தன் நன்னய
முரைத்தலைக்   கேட்ட   தலைவிக்கு  இயல்பாக  அகத்து உளவாகும்
மகிழ்வால்     புறந்தோன்றும்     முறுவற்குறிப்பு    மிக்குத்தோன்றா
அந்நிலையினைத் தலைவன் அறிதல்.

"மாண்இழை பேதை நாறிருங் கூந்தல்
ஆணமும் இல்லாள் நீர்உறை சூருடைச்
சிலம்பிற் கணங்காய் முயன்ற செறியியல்
நொதுமல் நோக்கைக் காண்மோ நெஞ்சே
வறிதால் முறுவற் கெழுமிய
நுடங்குமென் பணைவேய் சிறுகுடி யோளே."

மெலிவு விளக்குறுத்த லாவது-தலைவன் அகத்துறும் நோயாற் புறத்து
நிகழும் தளர்வினைக் குறிப்பான் எடுத்துக்கூறலும். உதாரணம் வந்துழிக்
காண்க.

குறிப்பாவன : புறத்துறுப்பா யவர்க் கின்றியமையாதன.

தன்னிலை யுரைத்த லாவது - அப்புறநிகழ்ச்சியின் பொலி விழவைக்
கண்ட  தலைமகள்   மாட்டுத்   தலைவன்   தன்  உள்ள  வேட்கை
மீதூர்வினை நிலைப்படக் கூறுதல்.

"சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின்"

என்னும் நற்றிணைப் பாட்டுள்,

"காமங் கைம்மிகில் தாங்குதல் எளிதோ
.... ...... .....
.... .... கடைமணி சிவந்தநின்
கண்ணே கதவ அல்ல".                 (நற்றிணை. 39)

எனத் தன்னிலை யுரைத்தவாறு காண்க.

தெளிவு   அகப்படுத்த லாவது  -   தலைவன்  முன்னிலையாக்கல்
முதலியன  கூறிப் பின்னர்   இயற்கைப்   புணர்ச்சியினை   விழைந்து
நின்றானாக,   அப்புணர்ச்சியினைக்    கூறுவார்    முன்னம்   ஒத்த
பண்புடைமை  உள்ளத்து  இருவர்மாட்டும்  வேண்டுதலின்  தலைமகள்
பண்பினைத்  தலைவன்  அறிந்து  அத்தெளிவைத் தன்னகப் படுத்துத்
தேர்தல்.

"யாயும் ஞாயும் யாரா கியரோ"

என்னும் குறுந்தொகைப் பாட்டுள்,

"அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே".        (குறுந்.40)

என இயற்கைப்புணர்ச்சி  முன்னர்த்  தலைவன் தலைவியர் உள்ளம்
ஒத்த பண்பினைக் கூறியவாறு காண்க.

இதுகாறும்  இயற்கைப் புணர்ச்சிக்குரிய திறன்கூறி, மேல் இயற்கைப்
புணர்ச்சி நிகழுமாறு கூறுகின்றார்.  அஃதேல்,  தன்னிலையுரைத்தலைத்
தெளிவகப்படுத்தலுடன் இணைத்து மெய்யுறுபுணர்ச்சியாக்கிய  பின்னர்த்
தோன்றுந்    துறையாகப் படுத்தாலோ  எனின்,    அது   சான்றோர்
வழக்கின்றாதலானும், மெய்யுறுபுணர்ச்சி முன்,

"மெய்தொட்டுப் பயிறல்"                   (களவியல்.11)

முதலியன  யாண்டும்   நிகழ்ந்தே  தலைவிக்கு  மெய்யுறுபுணர்ச்சி
நிகழுமாதலானும் அஃதன்றென்க.                            (10)

99. மெய்தொட்டுப்பயிறல் பொய்பா ராட்டல்
இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்
நீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல்
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇப்
பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்
பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்
நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்
குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்
பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும்
ஊரும் பேருங் கெடுதியும் பிறவும்
நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித்
தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி
குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்
தண்டா திரப்பினும் மற்றைய வழியும்
சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும்
அறிந்தோள் அயர்ப்பி னவ்வழி மருங்கில்
கேடும் பீடுங் கூறலும் தோழி
நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி
மடல்மா கூறும் இடனுமா ருண்டே.

என்-எனின்,  களவிற்  கூட்டம்  நான்கினிடத்தும் தலைவன் கூற்று
நிகழுமாறும் காதல்மிக்கு ஆற்றாமை கையிகப்பின் தலைவனாம் இயலும்
கூறுதல் நுதலிற்று.

மெய்தொட்டுப் பயிறலாவது - பெருமையும் உரனுமுடைய தலைமகன்
தெளிவகப்படுத்தியது காரணமாகக்  காதல்   வெள்ளம்   புரண்டோடத்
தலைவியின் மெய்யைத் தீண்டிப் பயிறல்.

"தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட
வில்லுடை வீளையர் கல்லிடுபு எடுத்த
நனந்தலைக் கானத்து இனந்தலைப் பிரிந்த
புன்கண் மடமான் நேர்படத் தன் ஐயர்
சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக்
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறுகண் டன்ன உண்கண்
நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே."         (குறுந்.272)

பொய்   பாராட்ட லாவது  -  தலைவியின் ஐம்பால் முதலிய கடை
குழன்று  சிதைவின்றேனும்  அஃதுற்றதாக  மருங்குசென்று தொட்டான்
ஒரு காரணம் பொய்யாகப் படைத்து உரைத்துப் பாராட்டல்.

"கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கிடுகும் இடையிழவல் கண்டாய்."  (சிலப் கானல்.17)

இடம்பெற்றுத்  தழாஅல் ஆவது -  பொய்பாராட்டல்   காரணமாத்
தலைவிமாட்டு அணிமையிடம் பெற்றுத் தழுவக்கூறல்.

உதாரணம் :

"கொல்யானை வெண்மருப்பும் கொல்வல் புலியதளும்
நல்லானை நின்னையர் கூட்டுண்டு - செல்வார்தாம்
ஓர் அம்பினானெய்து போக்குவர்யான் போகாமை
ஈர் அம்பி னானெய்தாய் இன்று".       (திணைமாலை.22)

இடையூறு  கிளத்த லாவது-நாண் மடன் நிலைக்களனாகக் கொண்ட
தலைவி  தன்  அறிவு  நலன் இழந்து ஒன்றும் அறியாது உயிர்த்தனள்.
அஃது  ஒக்குமோ  எனின்  ஒக்கும்.  புதிதாய்ப்  புக்கார், ஊற்றுணர்வு
என்றும்   பயிலாத   தம்  மெல்லியல்  மெய்யிற்பட  அறிவிழப்பினும்
உள்நெக்கு உயிர்க்கும் என்க. அது பற்றிப் புலையன்  தொடு  தீம்பால்
போல்  காதல்கூரக் கொம்பானும் கொடியானும் சார்ந்தாளைத் தலைவன்
இப்பொழுது   இவ்வூற்றின்பிற்கு   இடையூறாய்   நின்மனத்   தகத்து
நிகழ்ந்தவை யாவென வினவுதலும்.

நீடுநினைந்திரங்க  லாவது -  இருவர் இயலும் ஒருங்கு இணைந்தும்
தலைவிபெருநாணால், பால்வழி உறுகவென  எண்ணிமாற்றமுங்  குறியுங்
காட்டாது கண்புதைப்பாளைத் தலைவன் புறம் ஓச்சி நிற்கவும் ஆண்டும்
கலக்கலாம் பொழுது கூடாமைக்கு நினைந்து இரங்கல்.

கூடுதலுறுத லாவது - இங்ஙனமாய்க்  காட்சி  நிகழ்வின்  பின்னர்ப்
புணர்ச்சி எய்தலும்.

இதுவரை  இயற்கைப்புணர்ச்சியாங்  காரணங்கூறிக், கூடுதலுறுதலால்
மெய்யுறு புணர்ச்சி கூறினார். இவற்றிற்குச் செய்யுள்:

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு."                 (குறள். 1108)

இது கூடுதலுறுதல். பிற வந்துழிக் காண்க.

சொல்லிய   நுகர்ச்சி   வல்லே   பெற்றுழி  என்பது - இயற்கைப்
புணர்ச்சிக்குக்    களனாக    மேற்கூறப்பட்டவற்றுடன்   அவ்வின்பந்
திளைத்தலையும் விரைவாக ஒன்றாய்ப் பெற்றவிடத்து.

இத்தெய்வப் புணர்ச்சிக்குப்பொருள் கூறுங்கால், பயிறல், பாராட்டல்,
தழாஅல்,   கிளத்தல்,   இரங்கல், உறுதல், நுகர்ச்சி,  தேற்றம்  என்று
சொல்லப்பட்ட இருநான்கு கிளவியும் என எண்ணப்படுத்துக.

"மெய்தொட்டுப் பயிறல்" முதலாகக் "கூடுதலுறுதல்" வரை இயற்கைப்
புணர்ச்சிக்கே உரிய கூறி,

"சொல்லிய நுகர்ச்சி"  முதல்  "இருநான்கு  கிளவி  "  வரை  இடந்
தலைப்பாடும்   சேர்த்து   உணர்த்தினார்.   அற்றாயின்  நுகர்ச்சியின்
தேற்றமும்   இயற்கைப்   புணர்ச்சியன்றோ,  இடந்தலைப்  பாடாமாறு
என்னையெனின், நன்று  கடாயினாய்.    மெய்யுறு    புணர்ச்சியினைப்
பால்  கூட்டும்  நெறிவழிப்பட்டுப்  பெற்றார்க்கு  மெய்தொட்டுப்பயிறல்
முதல் அறு துறையே இன்றியமையாத்  துறையாக,  ஏனைய  இரண்டும்
இடந்தலைப்    பாட்டிற்கும்   சேர்ந்த   துறையாகலின்,   பொதுப்பட
இரண்டற்கும்  நடுவே  வைத்துச் செப்பம் ஆக்கினாரென்க. நுகர்ச்சியும்
தேற்றமும் எனப் பிரித்துக் கூட்டுக.

தீராத் தேற்ற மாவது-இயற்கைப் புணர்ச்சியுடன் முடியாத தெளிவு.

"வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்."            (குறள்.1005)

இஃது இயற்கைப் புணர்ச்சித் துறையன்று; இடந்தலைப்பாட்டின் கண்
தலைமகன் கூறியது ; நுகர்ச்சி பெற்றது.

"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள".                 (குறள்-1101)

என்பதோ எனின், இயற்கைப் புணர்ச்சிக்கண் நுகர்ச்சி யுற்றமை கூறிற்று
என்க.

"எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறுஞ்
செந்நெல் வான்பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேர்இறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே."                (குறுந்.53)

இஃது இயற்கைப்புணர்ச்சிப் பின்றைச் சொற்ற  தீராத்   தேற்றவுரை
"இன்னிசை யுருமொடு" என்னும் அகப்பாட்டுள்,

"நின்மார் படைதலின் இனிதா கின்றே
நும்மில் புலம்பினும் உள்ளுலதாறும் நலியும்".   (அகம் 58)

என்றது இடந்தலைப்பாட்டில் நேர்ந்த தேற்றம்.

"பேராச் சிறப்பின்" எட்டு என்றல்.

பெரும் சிறப்பினை ஆறு என்றலை எடுத்தோத்தாற் காட்டிநின்றது.

இதுவரை இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும், மேல் `வாயில்
பெட்பினும்'  என்னுமளவும்  பாங்கற்  கூட்டம் ;  மேல்  தொடர்பவை
தோழியிற் கூட்டம்.

பெற்றவழி மகிழ்ச்சியும் என்பது  -  இடந்தலைப்  பாட்டினை  யொட்டி
நிகழும் இன்பினைப் பெற்றவழி அகத்துத் தோற்றும் பெருமகிழ்வும்.

"நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றாள் இவள்."               (குறள்.1104)

"ஒடுங்கீ ரோதி ஒண்ணுதற் குறுமகள்
நறுந்தண் நீர ளாரணங் கினளே
இனையள் ஆன்றவட் புனையளவு அறியேன்
சிலமெல் லியவே கிளவி
அனைமெல் லியல்யா முயங்குங் காலே."       (குறுந். 70)

இவை புணர்ச்சியான் மகிழ்ந்ததற்குச் செய்யுட்கள்.

பிரிந்தவழிக் கலங்கலாவது-இவ்வாறு கூடின தலைமகள் பிரிந்தவழிக்
கலக்க முறுதலும் என்றவாறு.

"என்றும் இனிய ளாயினும் பிரிதல்
என்றும் இன்னாள் அளறே நெஞ்சும்
பனிமருத்து விளைக்கும் பரூஉக்கண் இளமுலைப்
படுசாந்து சிதைய முயங்குஞ்
சிறுகுடிக் கானவன் பெருமட மகளே".

எனவரும்.

இத்துணையும் இடந்தலைப்பாடு, பெற்றவழி மகிழ்தலும் பிரிந்த வழிக்
கலங்கலும் பாங்கற் கூட்டத்தினும் தோழியிற் கூட்டத்தினும் நிகழும்.

நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் என்பது - காம நுகர்ச்சி
யொன்றனையும் நினையாது  இவளாலே   நமக்கு   இல்லறம்   இனிது
நடக்குமென்று உட்கோடலும். நிற்பவை - இல்லற வினை.

"தேரோன் தெறுகதிர் மழுங்கினுந் திங்கள்
தீரா வெம்மையொடு திசைநடுக்கு உறுப்பினும்
பெயராப் பெற்றியில் திரியாச் சீர்சால்
குலத்தில் திரியாக் கொள்கையுங் கொள்கையொடு
நலத்தில் திரியா நாட்டமும் உடையோய்
கண்டத னளவையிற் கலங்குதி யெனின்இம்
மண்திணி கிடக்கை மாநிலம்
உண்டெனக் கருதி உணரலன் யானே."

இது நிற்பவை நினைஇக் கழறியது.

"இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணிற் கரக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் 9நொண்டு கொளற்கரிதே."   (குறுந் 58)

இது நிகழ்பவை உரைத்தது.

குற்றங்காட்டிய  வாயிலாவது-தலைவன் மாட்டுச் சோர்வானும் காதல்
மிகுதியானும் நேர்வுற்ற பழிபாவங்களை எடுத்துக்காட்டும் பாங்கன்.

பெட்பினும்- அத்தகைய பாங்கன் இவ்வியல் பண்டைப் பால்வழியது
என எண்ணி  இவ்வாறு  தலைமகன்  மறுத்தவழி  அதற்  குடன்படல்
அவ்வழி, நின்னாற் காணப்பட்டாள் எவ்விடத் தாள்?  எத்தன்மையாள்?
எனப்  பாங்கன்  வினாவுதலும், அதற்குத் தலைமகன் இடமும் உருவுங்
கூறுதலும், அவ்வழிப் பாங்கன் சென்று காண்டலும், மீண்டு தலைமகற்கு
அவள்  நிலைமை   கூறலுமெல்லாம்  உளவாம்.  அவ்வழிப்  பாங்கன்
வினாதலும் தலைமகன் உரைத்தனவும் உளவாம். பாங்கன் வினாயதற்குச்
செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. அவ்வழித் தலைமகன் உரைத்தற்குச்
செய்யுள் :--

"எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளாய் அத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே." (குறுந்-129)

"கழைபாடு இரங்கப் பல்லியங் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று
அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக்
கழைக்கண் இரும்பொறை