இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   75
Zoom In NormalZoom Out


 

கொள்க.  ஐந்நிலம்   என்பதனை  முல்லை  குறிஞ்சி  முதலாயின
வென்றார் உளராலெனின், `முதலொடு  புணர்ந்த'  என்பதனால்  நிலம்
பெறுமாதலான்   நிலம்   என்பதற்கு   வேறு   பொருள்  உரைத்தல்
வேண்டுமென்க. அஃது  அற்றாக,  இற்கிழத்தி,  காமக்கிழத்தி  என்பார்
உள்ளப்புணர்ச்சியானாதல்        மெய்யுறு        புணர்ச்சியானாதல்
வரையப்பட்டாராகப் பொருட் பெண்டிராகிய காதற்பரத்தையர்  கூட்டம்
ஒத்த   காமமாகிய   வாறென்னையெனின்,  அரும்   பொருளானாதல்,
அச்சத்தானாதல்    அன்றி    அன்பினாற்    கூடுதலின்    அதுவுங்
கந்திருவப்பாற்படும்.    அவ்வாறன்றி   அவரைப்   பிறிது   நெறியாற்
கூடுவராயின்   இவன்மாட்டுத்  தலைமை  இன்றாமென்பது  உணர்ந்து
கொள்க. அஃதாமாறு:

"அன்னை கடுஞ்சொல் அறியாதாய் போலநீ
என்னைப் புலப்பது ஒறுக்குவேன் மன்யான்
சிறுகாலை இற்கடை வந்து குறிசெய்த
அவ்வழி என்றும்யான் காணேன் திரிதர
எவ்வழிப் பட்டாய் சமனாக இவ்வெள்ளல்."     (கலித்-90)

எனவும்,"கண்டேனின் மாயங் களவாதல் " என்னுங் கலியுள்.

" ..... நோயும் வடுவுங்கரந்து மகிழ்செருக்கிப்
பாடுபெயல் நின்ற பானாள் இரவில்
தொடிபொலி தோளும் முலையுங் கதுப்பும்
வடிவார் குழையும் இழையும் பொறையா
ஒடிவது போலும் நுசுப்போ டடிதளரா
வாராக் கவவின் ஒருத்திவந் தல்கல்தன்
சீரார் ஞெகிழஞ் சிலம்பச் சிவந்து நின்
போரார் கதவம் மிதித்த தமையுமோ".         (கலித்-97)

எனவும், பரத்தையர் அன்பினாற் கூறியவாறும் இவர் இற்கிழத்தியும்
காமக்கிழத்தியும்  அன்மையும்  அறிந்து  கொள்க.  இவ்வகை வருவன
ஐந்து நிலனாய் வரும். அஃதேல் மருதக்கலியுள்,

" .... .... .... .... ..... ..... ..... ..... ...
அடக்கமில் போழ்தின்கண் தந்தை காமுற்ற
தொடக்கத்துத் தாயுழைப் புக்கான்".           (கலித்-82)

எனவும்,

வழிமுறைத்தாய் எனவும்,  `புதியோள்'  எனவும்,  இவ்வாறு  கூறக்
கேட்கின்ற     காமக்கிழத்தியுமென     மனைவியர்     நால்வருளர்.
அவரெல்லாரையும் கூறாது மனைக்கிழத்தியர்   இருவர்   என்றதனாற்
பயன்  இன்றெனின்,  அவரெல்லாரும்  இற்கிழத்தியும்  காமக்கிழத்தியு
மென இரண்டு  பகுப்பினுள் அடங்குப.  அன்றியும், இவர் நால்வரோடு
பரத்தையுட்பட ஐவர் கந்திருவப் பகுதியர் என உரைப்பினும் அமையும்.

`பரத்தை  வாயில்  நால்வர்க்கும் உரித்தே' (பொருளியல்.28)
என   ஓதுதலானும்,  தலைவற்குப்  பிரமம்  முதலாக  வரும்  நான்கு
வருணத்துப்    பெண்பாலாரும்    பரத்தையும்   என   ஐவகைப்படு
மென்பதூஉம் ஒன்றெனக் கொள்க.                           (16)

105. இருவகைக் குறிபிழைப் பாகிய இடத்துங்
காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும்
தானகம் புகாஅன் பெயர்தல் இன்மையிற்
காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி
வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்
புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்
பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்
வேளாண் எதிரும் விருப்பின் கண்ணுந்
தாளாண் எதிரும் பிரிவி னானும்
நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும்
வரைதல் வேண்டித் தோழி செப்பிய
புரைதீர் கிளவி புல்லிய எதிரும்
வரைவுடம் படுதலும் ஆங்கதன் புறத்தும்
புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக்
கிழவோன் மேன என்மனார் புலவர்.

இது, தோழியிற் கூடிய தலைமகன்   வரைந்தெய்துங்காறும்   கூறும்
பொருண்மை யுணர்த்துதல் நுதலிற்று.

இருவகைக்  குறிபிழைப்பாகிய  இடத்தும்  என்பது  -  பகற்குறியும்
இரவிற்குறியும் பிழைப்பாகிய இடத்தும் என்றவாறு  பகற்குறி இரவிற்குறி
யென்பது எற்றாற் பெறுது மெனின்,

"குறியெனப் படுவ திரவினும் பகலினும்
அறியக் கிளந்த ஆற்ற தென்ப".          (களவியல்-40)

என்பதனாற் கொள்க. அக்குறிக்கண் தலைவி வரவு  பிழைத்த விடத்துத்
தலைவன் கூற்று நிகழும் என்றவாறு.

"மழைவர வறியா மஞ்ஞை யாலும்
அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி
தானெம் மருளாள் ஆயினும்
யாந்தன் உள்ளுபு மறந்தறி யேமே."         (ஐங்குறு.298)

இது, குறிபிழைத்தவழித் தோழிக்குச் சொல்லியது,

"இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு
அறிதுவேட் டனையால் நெஞ்சே காதலி
நல்லா ளாகுதல் அறிந்தாங்கு
அரியா ளாகுதல் அறியா தோயே,"           (குறுந்.120)

இது, குறிபிழைத்தவழி உள்ளத்திற்குச் சொல்லியது,

காணா  வகையிற் பொழுதுநனி இகப்பினும் என்பது- தலைமகளைக்
காணாவகையிற் பொழுது மிகவும் கடப்பினுங் கூற்று நிகழும் என்றவாறு,
செய்யுள்:

"உள்ளிக் காண்பென் போல்வல் முள்ளெயிற்று
அமிழ்தம் ஊறுஞ் செவ்வாய்க் கமழகில்
ஆரம் நாறும் அறல்போற் கூந்தற்
பேரமர் மழைக்கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே".      (குறுந். 286)

எனவரும்.

தானகம்புகாஅன்  பெயர்தல்  இன்மையிற்... பொழுதினும் என்பது -
காணா வகையிற்பொழுது மிகக்