இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   77
Zoom In NormalZoom Out


 

வாறு. செய்யுள் வந்தவழிக் காண்க,

புரைபடவந்த  மறுத்தலொடு தொகைஇ என்பது - குற்றம்பட  வந்த
மறுத்தலொடுகூட என்றவாறு,

அஃது  அவர்  மறுத்தற்  கண்ணுந்  தலைமகன்  மாட்டுக்  கூற்று
நிகழும் என்றவாறு. அதற்குச் செய்யுள்:

"பொன் அடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்
பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையுள்
திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையின ளிருந்த ஆய்தொடிக் குறுமகள்
நலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும்
பெறலருங் குரைய ளாயின் அறந்தெரிந்து
நாமுறை தேஎ மரூஉப் பெயர்ந் தவனொடு
இருநீர்ச் சேர்ப்பி னுப்புடன் உழுதும்
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பில்
தருகுவன் கொல்லோ தானே விரிதிரைக்
கண்திரள் முத்தங் கொண்டு ஞாங்கர்த்
தேன் இமிர் அகன்கரைப் பகுக்குங்
கானலம் பெருந்துறைப் பரதவன் நமக்கே".     (அகம்.280)

என வரும்.

கிழவோன் மேன என்மனார் புலவர்  என்பது-இச் சொல்லப்பட்டன
வெல்லாங் கிழவோன் இடத்தன என்றவாறு.

கூற்றென்னாது பொதுப்படக் கூறுதலான் உள்ள நிகழ்ச்சியும் கூற்றும்
கொள்ளப்படும்.                                          (17)

106. காமத் திணையிற் கண்நின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆகலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள்வயின் ஆன.

என்பது   மேல்  தலைவற்குரிய கிளவி கூறி இனித் தலைவிக்குரிய
கிளவி கூறுகின்றாராகலின்  முற்பட  அவள்  தலைவனைக்  கண்ணுற்ற
வழி வரும் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

தலைவியிடத்து   நிலைமைபெற்று  வருகின்ற   நாணமும்  மடனும்
பெண்மைக்கு அங்கமாகலின்,  காமவொழுக்கத்தின்கண்  குறிப்பினானும்
இடத்தினானுமல்லது   வேட்கை   புலப்பட  நிகழாது  தலைவியிடத்து
என்றவாறு.

காமத்திணை என்பதனைக்குறிப்பென்பதற்கு முன்னே கூட்டியுரைக்க.
அச்சமும் இயல்பன்றோவெனின்,  அதுவும்   வேட்கைக்  குறிப்பினான்
நீங்குமென்ப.   அச்சமுள்வழிவேட்கை நிகழாமையின் வேட்கையுள் வழி
நாணும்மடனும் நீங்காவோ எனின், அது வருகின்ற சூத்திரத்தாற் கூறுப,
இதனாற்     சொல்லியது     தலைவி    தலைவனை    எதிர்ப்பட்டு
முன்னிலையாக்கல்   முதலாகத்   தலைவன்மாட்டு  நிகழ்ந்தமைபோலத்
தலைவிமாட்டு    நிகழ்பவை   உளவோவெனின்,   அவள்   மாட்டுக்
குறிப்பினானாதல்,     சொல்லுதற்குத்     தக்க     விடத்தினானாதல்
தோற்றுவதல்லது, புலப்பட்டு நிகழாதென்றவாறாயிற்று.

"உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்தல் இன்று"             (குறள்.1090)

என்றது  தலைவனைக் கண்ட   தலைவி வேட்கைக்   குறிப்பினால்
தன்னுளேள் கருதியது.

இடம் பற்றி வேட்கை தோற்றியதற்குச் செய்யுள்:-

"... ... ... ... ... ... ...
நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணா மோவெனக் காலிற் சிதையா
நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும்
என்னே குறித்த நோக்கமொடு நன்னுதால்
ஒழிகோ யானென அழிதகக் கூறி
யான் பெயர்க என்ன நோக்கித் தான்தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் இன்றும்என் கட்கே".      (அகம்.110)

எனத்   தன்  குறிப்புக்  காலத்தாற்  கூறுதலாற்றாது  பின்  இடம்
பெற்றுழிக் கூறியவாறு காண்க.

107. காமஞ் சொல்லா நாட்டம் இன்மையின்
ஏமுற இரண்டும் உளவென மொழிப.

என்பது, மேலதற்கோர் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று.

வேட்கையுரையாத  கண்  உலகத்தின்மையால்  தலைவன்  ஏமுறற்
பொருட்டு நாணும் மடனும் உளவாம் என்றவாறு.

இதனாற்  சொல்லியது  மேல்  தலைவிக்கு  இயல்பாய்க் கூறப்பட்ட
அச்சமும்  நாணும்  மடனும்  என்பனவற்றுள்  வேட்கையால்  அச்சம்
நீங்கினவழி  நாணும்  மடனும்  நீங்காவோ  என்றையுற்றார்க்கு அவை
தலைமகற்கு  ஏமமாதற்பொருட்டு  நீங்காவாம் என்பதூஉம், வேட்கைக்
குறிப்புக்    கண்ணினான்   அறியலாமென்பதூஉம்   உணர்த்தியவாறு.
என்னை?  நாணும்  மடனும்  இல்லாதாரைத்  தலைமக்கள்  அவமதிப்
பாராதலால், உதாரணம்:-

"கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்."               (குறள்.1137)

இதனுள் "கடலன்ன காமம் உழந்தும் " என்றதனான் வேட்கை மிக்க
நிலையினையும், "மடலேறாப்  பெண்"  என்றமையான் நாணும் மடனும்
நீங்கா நிலையினையும் கூறுதல் காண்க.

"கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல".                      (குறள்.1100)

இதனுள்   அகத்துநிகழ்  வேட்கையினைக்  கண்ணினால்  அறியக்
கிடந்தமை கூறியவாறு காண்க.                              (19)

108. சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின்
அல்ல கூற்றுமொழி அவள்வயி னான.

என்பது,  இதுவும்  தலைவிமாட்டு   ஒரு   கூற்றுச்சொல்   நிகழுமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

தலைவன்  இயற்கைப்புணர்ச்சி  கருதிக்  கூறுஞ் சொல்லெதிர் தான்
வேட்கைக்   குறிப்பினளாயினும் அதற்குடம்பட்ட நெறியைக்   கூறுதல்
அருமையுடைத்   தாதலான் அதற்கு   உடம்பாடல்லாத   கூற்றுமொழி
தலைவியிடத்தன   என்றவாறு.   என்றது இசைவில்லாதாரைப் போலக்
கூறுதல்.

உதாரணம்:-

"யாரிவன் என்னை விலக்குவான் நீருளர்
பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க்
கல்லாப் பொதுவனை நீமாறு நின்னொடு
சொல்லலோம் பென்றார் எமர்".              (கலித்.112)

என வரும். இதன் பின்,

"....................................
எவன் கொலோ
மாயப் பொதுவன் உரைத்த உரையெல்லாம்
வாயாவ தாயின் தலைப்பட்டாம் பொய்யாயின்
சாயலின் மார்பிற் கமழ்தார் குழைத்தநின்
ஆயித முண்கண் பசப்பத் தடமென்தோள்
சாயினும் ஏஎர் உடைத்து".                 (கலித். 112)

என உடம்பாடு கூறினாளாதலின் முற்கூறியது அல்ல கூற்றாயிற்று.  (20)

109. மறைந்தவற் காண்டல் தற்காட் டுறுதல்
நிறைந்த காதலில் சொல்லெதிர் மழுங்கல்
வழிபாடு மறுத்தல் மறுத்தெதிர் கோடல்
பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்
கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும்
இட்டுப்பிரி விரங்கினும் அருமை