கலங்கிச் சிதைந்தவழித்
தோழிக்குச்
சூழ்தலமைந்த அரிய மறைப்பொருளைச் சொல்லலும் என்றவாறு.
எனவே சிதையாதவழித் தோழிக்குச் சொல்லாளாம். என்பது
போந்தது. வேட்கை மறைக்கப்படுதலின் மறையாயிற்று.
`கைப்பட்டுக் கலங்கல்' முதலாகக் `கூறிய வாயில் கொள்ளாக் காலை' யீறாகச்
சொல்லப்பட்ட பன்னிருவகையினும் தலைமகள் தோழிக்கு உரைக்கப்பெறும். அஃது
உரைக்குங்கால் மனைப்பட்டுக் கலங்கி மேனி சிதைந்தவழியே
உரைக்கப்பெறுவது.ஆண்டும் இதற்கு என்செய்வாம் என உசாவுதலோடு
கூடத் தனது காதன்மை தோன்ற உரைக்கும் என்றவாறு மனைப்படாக்கால்
அவனைக் காண்டலால் உரைக்கவேண்டுவதில்லை யென்றவாறாயிற்று.
இப்பன்னிரண்டும் ஒருத்திமாட்டு ஒருங்கு நிகழ்வன அல்ல. இவ்விடங்கள் உரைத்தற்கு இடமென இலக்கணங் கூறியவாறு.
அவற்றுட் கைப்பட்டுக் கலங்கியதற்குச் செய்யுள் :-
`கொடியவுங் கோட்டவும்' என்னுங் குறிஞ்சிக் கலியுள்,
"நரந்தநா றிருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப்
பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
நலம்பெறச் சுற்றிய குரல்அமை ஒருகாழ்
விரன்முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்
நறாஅவவிழ்ந் தன்னஎன் மெல்விரற் போதுகொண்டு
செறாஅச் செங்கண் புதைய வைத்துப்
பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்
தொய்யில் இளமுலை இனிய தைவந்து
தொய்யலந் தடக்கையின் வீழ்பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன்;
அதனால்,
அல்லல் களைந்தனன் தோழி நந்நகர்
அருங்கடி நீவாமைகூறி னன்றென
நின்னொடு சூழ்வல் தோழி நயம்புரிந்
தின்னது செய்தாள் இவளென
மன்னா உலகத்து மன்னுவது புரைமே."
(கலித்.54)
இதனுட் கைப்பட்டுக் கலங்கியவாறும் அருமறை
உயிர்த்தவாறும்
இவ்வாறு செய்யாக்கால் இறந்துபடுவன் என்னும் குறிப்பினளாய்` மன்னா
வுலகத்து மன்னுவுது புரையும்' எனவுங் கூறியவாறு காண்க.
நாணுமிக வந்ததற்குச் செய்யுள்: -
"நோக்குங்கால் நோக்கித் தொழூஉம்பிறர் காண்பார்
தூக்கிலி தூற்றும் பழியெனக் கைகவித்துப்
போக்குங்காற் போக்கும் நினைந்திருக்கும் மற்றுநாம்
காக்கும் இடமன் றினி;
எல்லா எவன்செய்வாம் நாம்."
(கலித்.63)
இது நாணம் மிக்கவழித் தோழியொடு உசாவியது.
இட்டுப்பிரி விரங்கியதற்குச் செய்யுள்:-
"அம்ம வாழி தோழிகாதலர்
பாவை யன்னஎன் ஆய்கவின் தொலைய
நல்மா மேனி பசப்பச்
செல்வேம் என்பதம் மலைகெழு நாட்டே" (ஐங்குறு-221)
என வரும்.
அருமை செய்தயர்த்தற்குச் செய்யுள்:-
"நெய்தற் புறவின் நிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைசூழ் கானலுட் கண்டநாட் போலானாற்
செய்த குறிவழியும் பொய்யாயின் ஆயிழாய்
ஐயகொல் ஆன்றார் தொடர்பு"
(திணைமொழி.41)
எனவரும்,
வந்தவழி யெள்ளியதற்குச் செய்யுள்:-
"கண்திரள் முத்தம் மயக்கும் இருண்முந்நீர்ப்
பண்டங்கொள் நாவாய் வழங்குந் துறைவனை
முண்டகக் கானலுட் கண்டேன் எனத்தெளிந்தேன்
நின்ற உணர்விலா தேன்."
(ஐந்திணையெழு. 56)
இதனுள் `பின்னும் வருவன் என்றிருந்தேன்; அதனான்
எள்ளினேன்' என்பது கருத்து.
"..............................................................
ஏறிரங் கிருளிடை இரவினிற் பதம்பெறாஅன்
மாறினென் எனக்கூறி மனங்கொள்ளுந் தானென்ப
கூடுதல் வேட்கையாற் குறிபார்த்துக் குரல்நொச்சிப்
பாடோர்க்குஞ் செவியோடு பைதலேன் யானாக." (கலித்.46)
இஃது எள்ளினாயென நினைத்தான் என்றவழிக் கூறியது.
விட்டுயிர்த் தழுங்கியதற்குச் செய்யுள்:-
"பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க
மணிமலை நாடன் வருவன்கொல் தோழி
கணிநிற வேங்கை மலர்ந்துவண் டார்க்கும்
மணிநிற மாலைப் பொழுது".
(திணைமொழி.6)
எனவும்,
"மரையா உகளும் மரம்பயில் சோலை
உரைசார் மடமந்தி ஓடி உகளும்
புரைதீர் மலைநாடன் பூணேந் தகலம்
உரையா உழக்கும் என் நெஞ்சு".
(கைந்நிலை - 6)
எனவும் வரும்.
நொந்து தெளிவொழித்தற்குச் செய்யுள்:-
"மன்றத் துறுகற் கருங்கண் மூசு உகளுங்
குன்றக நாடன் தெளித்த தெளிவினை
நன்றென்று தேறித் தெளிந்தேன் தலையளி
ஒன்றுமற் றொன்றும் அனைத்து". (ஐந்திணையெழு - 9)
என வரும்.
அச்சம் நீடினும் என்பதற்குச் செய்யுள் :-
"மென்தினை மேய்ந்த தறுகட் பன்றி
வன்கல் அடுக்கத்துத் துஞ்சு நாடன்
எந்தை யறிதல் அஞ்சிக்கொல்
அதுவே மன்ற வாரா மையே".
(ஐங்குறு - 261)
எனவும்,
"மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லார்எங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழிய ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே"
(குறுந்-87)
எனவும் வரும்.
பிரிந்தவழிக் கலங்கியதற்குச் செய்யுள் : -
"வருவது கொல்லோ தானே வாராது
அவணுறை மேவலின் அமைவது கொல்லோ
புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை
இருவி இருந்த குருவி வெருவுறப்
பந்தாடு மகளிரிற் படர்தருங்
குன்றுகெழு நாடனொடு சென்ற என்நெச்சே." (ஐங்குறு-295)
|