காகவும் தன்குறி தப்பும் என்றவாறு.
நெறிப்படு.. .மறைப்பினும் என்பது - கூட்டம் உண்மை வழக்கியலால் நாடுகின்ற
காலத்து மெய் வேறுபாடு நிகழ்ந்துழி, தோழி அறியாமலும்
செவிலி அறியாமலுந் தலைவி மறைப்பினும் என்றவாறு.
பொறியின்...இயல்பின் கண்ணும் என்பது - பொறி யென்பது ஊழ். ஊழாற்
கட்டப்பட்ட புணர்ச்சியைக் குறித்து
ஒற்றுமைப்பட்ட
நண்பினானே தலைவன் வரைதற்குக் குறையுறுகின்றதனைத் தெளிந்த
தலைவி செய்தற்கு அருமையமைந்த
எண்வகையினாற் பெருமை
இயைந்த இயல்பினளாகி நிற்றற் கண்ணும் என்றவாறு.
எண்வகையாவது மெய்ப்பாட்டியலுள் மனன்
அழிவில்லாத கூட்டம்
என ஓதுகின்ற.
"முட்டுவயிற் கழறல் முனிவு மெய்ந் நிறுத்தல்
அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல்
தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல்
காதல் கைம்மிகல் கட்டுரையின்மை".
(மெய்ப்பாட்.23)
என்பன. அவற்றுள்,
முட்டுவயிற் கழறல் ஆவது - களவொழுக்கம் நிகழா நின்றுழி நிலவு வெளிப்பாடு,
காவலர் கடுகுதல். தாய்துஞ்சாமை,
ஊர்துஞ்சாமை,
தலைவன் குறிவருதற்கு இடையீடுபடுதல், இவ்வழிக்களவொழுக்கத்தினாற்
பயனின்மை கூறல். அவ்வாறுகூறி இனி
இவ்வொழுக்கம் அமையுமென
வரைந்தெய்துதல்காறும்
புணர்ச்சியை விரும்பாது கலக்கமின்றித்
தெளிவுடையளாம்.
முனிவு மெய்ந்நிறுத்தல் ஆவது -
இவ்வொழுக்கத்தினான் வந்த துன்பத்தைப் பிறர்க்குப் புலனாகாமை மெய்யின்கண்ணே நிறுத்தல்.
அவ்வழியும் வரைந்தெய்தல் சான்றமையும் புணர்ச்சியெனக் குறி
வழிச் செல்லாளாம்.
அச்சத்தின் அகறல் ஆவது - இதனைப் பிறரறிவர் என்னும் அச்சத்தினாலும் குறிவழிச் செல்லாளாம்.
அவன் புணர்வுமறுத்தல் ஆவது -தலைவன்
புணர்ச்சியில் வழியும் குறிவழிச் செல்லாளாம்.
தூது முனிவின்மை ஆவது - அவ்வழித் தலைவன்மாட்டுத் தூதாகி வருஞ்சொற்கேட்டலை முனிவின்மை.
துஞ்சிச்சேர்தல் ஆவது - உறங்காமையின்றி யுறக்கம் நிகழ்தல்.
காதல் கைம்மிகல் ஆவது -
இவ்வாறு செய்யுங் காதல்
அன்பின்மையன்றி அன்பு மிகுதல்.
கட்டுரை யின்மை ஆவது - கூற்று நிகழ்தலின்மை.
இவையெல்லாம் கலக்கமில்லாத நிலைமையாதலிற்
பெருமை சான்ற
இயல்பாயின.
பொய்தலையடுத்த மடவின் கண்ணும் என்பது - பொய்ம்மையால்
மடலேறுவன் எனத் தலைவன் கூறியவழியும் வெறுத்த உள்ளத்தளாம். குறிவழிச் செல்லாளாம்.
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் என்பது - தோழி
கையினால் தலைவி கண்ணீர் துடைத்தவழியுங் குறிவழிச் சொல்லாளாம்.
வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும் என்பது - தலைவி வேறுபாடு எற்றினானாயிற்றெனச்
செவிலி வெறியாட்டுவிக்க வரும் அச்சத்தினாலுங் குறிவழிச் செல்லாளாம்.
குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் என்பது - தலைவன் செய்த
குறியை ஒப்புமைபற்றிச் சென்று அஃது அவ்வழி மருளுதற்கண்ணும்
குறிவழிச் செல்லாளாம்.
அஃதாவன புள்ளெழுப்புதல் போல்வன. அவைபெற்றுப் புள்ளரவம் எழும். அவ்வாறு மருளுதல்.
வரைவுதலை வரினும் என்பது - தலைவன் வரையவருகின்ற நாள் அணித்தாக வரினும் குறிவழிச் செல்லாளாம்.
கள வறிவுறினும் என்பது - களவினைப் பிறர்
அறியினும் குறிவழிச் செல்லாளாம்.
தமர்தற்காத்த காரண மருங்கினும் என்ப - தன்னைத் தமர்
காத்த காரணப் பக்கத்தினும் என்றவாறு.
அஃது ஐயமுற்றுக் காத்தல்.
அவற்றுள் வேற்றுவரைவு வரின் அது மாற்றுதற்குத் தலைவி
கூறிய செய்யுள்:-
"அன்னை வாழிவேண் டன்னை புன்னை
பொன்நிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்றும் யாமே இவ்வூர்
பிறிதொன் றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே."
(ஐங்குறு.110)
என வரும்.
நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தமை மறைத்தற்குச் செய்யுள்:
"துறைவன் துறந்தெனத் துறையிருந் தழுதஎன்
மம்மர் வாண்முக நோக்கி அன்னை நின்
அவலம் உரையென் றனளே கடலேன்
பஞ்சாய்ப் பாவை கொண்டு
வண்டலஞ் சிறுமனை சிதைத்ததென் றேனே"
என வரும்.
முட்டுவயிற் கழாற்குச் செய்யுள்:-
"இரும்பிழி மாரி அழுங்கன் மூதூர்
விழவின் றாயினுந் துஞ்சா தாகும்
மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்
வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சான்
பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சில்
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்குவேல் இளையர் துஞ்சின் வைஎயிற்று
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்
அரவவாய் ஞமலி மகிழாது மடியிற்
பகலுரு உறழ நிலவுக்கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே
திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்
இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும்
வளைக்கட் சேவல் வாளாது மடியின்
மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்
எல்லா மடிந்த காலை யொருநாள்
நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே, அதனால்
அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து
ஆதி போகிய பாய்பரி நன்மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல்முதிர் புறங்காட் டன்ன
பலமுட் டின்றால்
|