இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   84
Zoom In NormalZoom Out


 

நாளின்கண்  மறைந்தொழுகா நின்ற  தலைவன் செவிலி முதலாயினாரை
முட்டினவழியும் இவ்வொழுக்கத்தினை  நின்   தோழிக்கு  உரையெனத்
தலைவன்   கூறியவழியும்   தலைவி  தானே  கூறுங்  காலமும்  உள
என்றவாறு.

உம்மை  எதிர்மறையாதலாற்  கூறாமை  பெரும்பான்மை.  காலமும்
என்றது இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாங் காலம்.  அக்காலத்துத்
தோழி மதியுடம்படாமல் அறிவிக்கும் என்றவாறு.

இனி   வரைவிடை   வைத்த   காலத்து  வருத்தமுற்றவழிக் கூறிய
செய்யுள்:-

"புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட சில்குரல்
அறியா துண்டனம் மஞ்ஞை யாடுமகள்
வெறியுறு வனப்பின் வேர்த்துற்று நடுங்குஞ்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பாகின்றே"        (குறுந்.105)

என வரும்.

வரையா நாளிடை வந்தோன் முட்டியவழித்  தலைவி   கூறியதற்குச்
செய்யுள்:-

"தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை
மாழைமான் நோக்கின் மடமொழி - நூழை
நுழையு மடமகன் யார்கொலென் றன்னை
புழையும் அடைத்தாள் கதவு."            (கைந்நிலை.59)

எனவும்,

"அறியா மையின் அன்னை அஞ்சிக்
குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்
விழவயர் துணங்கை தழுவுகஞ் செல்ல
நெடுநிமிர் தெருவிற் கைபுகு கொடுமுடை
நொதும லாளன் கதுமெனத் தாக்கலின்
கேட்பார் உளர்கொல் இல்லைகொல் போற்றென
யாணது பசலை என்றனள் அதனெதிர்
நாணிலை எலுவ என்றுவந் திசினே
செறுநரும் விழையுஞ் செம்ம லோனென
நறுநுதல் அரிவை போற்றேன்
சிறுமை பெருமையில் காணாது துணிந்தே"   (நற்றிணை.50)

எனவும் வரும், இதன்கண்   என்றானென ஒரு சொல்   வருவிக்க.
உரையெனத் தோழிக்கு உரைத்தற்குச் செய்யுள்:-

"பொன்இணர் வேங்கை கவினிய பூம்பொழிலுள்
நன்மலை நாடன் நலம்புனைய - மென்முலையாய்
போயின திந்நாள் புனத்து மறையினால்
ஏயினார் இன்றும் இனிது".           (ஐந்திணையைம்.11)

என வரும்.

இன்னும், `உரையெனத் தோழிக் குரைத்துற் கண்ணும்'  என்பதற்குத்
தலைவற்கு உரையெனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும் என்றுமாம்.

உதாரணம்:-

"என்னை கொல் தோழி அவர்கண்ணும் நன்கில்லை
அன்னை முகனும் அதுவாகும் - பொன்னலர்
புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்ல தில்லென் றுரை".          (ஐந்தினையெழு.56)

என வரும்.

111. உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக் கிழவன் உள்வழிப் படினும்
தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்
ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே.

இதுவும் அது.

உயிரினும்    நாண்    சிறந்தது;    அதனினும்   குற்றந்   தீர்ந்த
காட்சியினையுடைய   கற்புச்   சிறந்தது;   என   முன்னோர்  கூற்றை
யுட்கொண்டு  தலைவனுள்ள  விடத்துச்செல்லலும்   வருத்த   மில்லாச்
சொல்லைத்  தலைவி  சொல்லுதலுமாகிய  அவ்வகை பிறவுந் தோன்றும்
அவை பொருளாம் என்றவாறு.

மன்   ஆக்கத்தின்கண்   வந்தது.   எனவே  இவ்வாறு   செய்தல்
பொருளல்ல  என்று  கூறற்க  என்றவாறு. இதனுள் நாணத்தினும் கற்புச்
சிறந்த தென்றவாறு.

நொது மலர் வரைவு நோக்கிக் கூறுவது:-

"அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீடு உழந்தன்று மன்னே இனியே
வான்பூங் காம்பின் ஓங்கு மணற் சிறு சிறை
தீம்புனல் நெரிதர வீழ்ந்துக் காஅங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில் லாதே."            (குறுந்.149)

"கோடீ ரிலங்குவளை நெகிழ நாடொறும்
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுஇனி வாழியென் நெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பலவேற் கட்டி நன்னாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே."      (குறுந்.11)

இது காமக்கிழவ னுள்வழிப் படுதல்.

தாவில் நன்மொழி கூறியதற்குச் செய்யுள்:-

"மன்ற மரா அத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதுங்
கொடியர் அல்லர்எம் குன்றுகெழு நாடர்
பசைஇய பசந் தன்று நுதலே
ஞெகிழிய ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே".   (குறுந்.87)

என வரும்.

112. நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்
புணர்ச்சி எதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉம்
உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர் பொருள் நாட்டத் தானும்
குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப்
பெருமையிற் பெயர்ப்பினும் உலகுரைத் தொழிப்பினும்
அருமையின் அகற்சியும் அவளறி வுறுத்துப்
பின்வா வென்றலும் பேதைமை யூட்டலும்
முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும்
அஞ்சியச் சுறுத்தலும் உரைத்துழிக் கூட்டமொடு
எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும்
வந்த கிழவனை மாயஞ் செப்பிப்
பொறுத்த காரணங் குறித்த காலையும்
புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணுங்
குறைந்தவட் படரினும் மறைந்தவ ளருகத்
தன்னொடும் அவளொடும் முன்னமுன் தளைஇப்
பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்
நன்னயம் பெற்றுளி நயம் புரி இடத்தினும்
எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும்
புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்
வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தினும்
புணர்ந்துழி உணர்ந்த அறி