மடச் சிறப்பினும்
ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்
செங்கடு மொழியான் சிதைவுடைத் தாயினும்
என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ
அன்புதலை அடுத்த வன்புறைக் கண்ணும்
ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்
காப்பின் கடுமை கையற வரினும்
களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக்
காதல் மிகுதி உளப்படப் பிறவும்
நாடும் ஊரும் இல்லும் குடியும்
பிறப்புஞ் சிறப்பும் இறப்ப நோக்கி
அவன்வயின் தோன்றிய கிளவியோடு தொகைஇ
அனைநில வகையான் வரைதல் வேண்டினும்
ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப்
பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்
அவள்விலங் குறினுங் களம்பெறக் காட்டினும்
பிறன்வரை வாயினும் அவன்வரைவு மறுப்பினும்
முன்னிலை அறனெனப் படுதலென் றிருவகைப்
புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்
வரைவுடன் பட்டோர்க் கடாவல் வேண்டினும்
ஆங்கதன் தன்மையின் வன்புறை உளப்படப்
பாங்குற வந்த நாலெட்டு வகையினும்
தாங்கருஞ் சிறப்பின் தோழி மேன.
என்றது, களவொழுக்கத்தின்கண் தோழிக்குரிய
கிளவியெல்லாம்
தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
நாற்றமு....... நாட்டத்தானும் என்பது-நாற்ற முதலாகச் சொல்லப்பட்ட ஏழினானும் புணர்ச்சிக்கு
முந்துற்ற நிலைமையை உட்கொண்டுவரும் மனநிகழ்ச்சி
யேழினும் புணர்ச்சியுண்மை யறிந்த பின்றை மெய்யினானும் பொய்யினானுந்
தலைவி குலத்தினுள்ளார் நிலைமையிற்
பிழையாது
பலவாகி வேறுபட்ட கவர்த்த பொருண்மையுடைய ஆராய்தற் கண்ணும்
என்றவாறு.
நாற்றம் என்பது-பூவினானும் சாந்தினானும் தலைவன் மாட்டுளதாகிய கலவியால் தலைவிமாட்டுளதாய நாறுதல்.
தோற்றம் என்பது - புணர்ச்சியான் வரும் பொற்பு.
ஒழுக்கம் என்பது - ஆயத்தாரொடு
வேண்டியவாறொழுகுதலன்றித் தன்னைப் பேணியொழுகுதல்.
உண்டி என்பது - உண்ணும் அளவிற் குறைதல்.
செய்வினை மறைத்தல் ஆவது - பூக்கொய்தலும் புனலாடலும்
போலும் வினைகளைத் தோழியை மறைத்துத் தனித்து நிகழ்த்துதல்
அன்றியும் தலைவன் செய்த
புணர்ச்சியாகிய கருமத்தினைப்
புலப்படவிடாது தோழியை மறைத்தலும் என்றுமாம்.
செலவினும் என்பது - எத்திசையினும் சென்று
விளையாடுவாள் ஒரு
திசையை நோக்கிச் சேறல்.
பயில்வினும் என்பது - ஓரிடத்துப் பயிலுதல்.
புணர்ச்சி எதிர்ப்பாடு ஆவது - புணர்வதற்கு முந்துற்ற காலம்.
உள்ளுறுத்தல் ஆவது - உட்கோடல்.
உணர்ச்சி ஏழாவது - நாற்ற முதலாகச் சொல்லப்பட்டவற்றால்
வரும் மன நிகழ்ச்சி ஏழும்.
பல்வேறு கவர்பொருள் நாட்டம் என்பது - ஒன்றொடொன்று
ஒவ்வாத வேறுபட்டனவாகி இருபொருள்
பயக்கும் சொற்களாலே
யாராய்தல்.
அவற்றுள் சில வருமாறு :
"கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலும்
நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே
வாங்கமை மென்றோள் மடந்தை
யாங்கா யினள்கொல் என்னும்என் நெஞ்சே." (சிற்றெட்டகம்)
இது தலைவி தோற்றங்கண்டு பாங்கி கூறியது. பிறவும் அன்ன.
குறையுறற் கெதிரிய கிழவனை மறையுற என்பது- களவொழுக்கத்தின் கண்ணே
யுறுதற்காகத் தனது குறையைச் சொல்லவேண்டி எதிர்ப்பட்ட தலைவனை யென்றவாறு.
மறையுற என்பதனை முன்னே கூட்டுக.
பெருமையிற் பெயர்ப்பினும் என்பது - தலைவனது பெருமையான் நீக்கலும் என்றவாறு.
"இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீனெறி பரதவர் மகளே நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஒப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதும் செலநின் றீமோ
பெருநீர் விளையுள்எம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்ம னோரிற் செம்மலும் உடைத்தே".
(நற்றிணை.45)
என வரும்.
உலகுரைத் தொழித்தல் என்பது - உலகத்தார் மகட்கொள்ளுமாறு கொள்ளெனக் கூறுதல்.
"கோடீர் எல்வளைக் கொழுமடற் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தெண்கழிச் சேயிறாற் படூஉந்
தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ." (ஐங்குறு.199)
இன்னும் உலகுரைத் தொழித்தல் என்றதனாற்
கையுறை மறையுங் கொள்க.
"நீடுநீர்க் கானல் நெருநலும் நித்திலங்கொண் டைய வந்தீர்
கோடுயர்வெண்மணற் கொற்கையெம்
ஊரிவற்றாற்குறையிலேமியாம்
ஆடுங் கழங்கும் அணிவிளக்கும் அம்மனையும்
பாடி யவைப்பனவும் பந்தாடப் படுவனவும் பனிநீர் முத்தம்."
அருமையின் அகற்சியும் என்பது - தலைவியைக் கிட்டுதற்கு
அருமை கூறியகற்றுதல்.
உதாரணம்:-
"நெருநலும் முன்னா ளெல்லையும் ஒருசிறைப்
புதுவை யாகலின் அதற்கெய்த நாணி
நேரிறை வளைத்தோள்
|