இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   86
Zoom In NormalZoom Out


 

நின் தோழி செய்த
ஆருயிர் வருத்தங் களையா யோவென
எற்குறை யுறுதி ராயிற் சொற்குறை
எம்பதத் தெளியன் அல்லள் எமக்கோர்
கட்காண் கடவுள் அல்லளோ பெரும்
வால்கோன் மிளகின் மலயங் கொழுங்கொடி
துஞ்சுபுலி வரிப்புறந் தைவரும்
மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே".

என வரும்.

அவளறி    வுறுத்துப்  பின்வாவென்றலும்  என்பது  -  நின்னாற்
காதலிக்கப்பட்டாட்குச் சென்று  அறிவித்துப் பின்னர்  என்மாட்டு வா
என்றவாறு.

அவற்றுள், நீயே சென்று அறிவி என்றதற்குச் செய்யுள்:-

"தன்னையுந் தான்நாணுஞ் சாயலாட் கீதுரைப்பின்
என்னையும் நாணப் படுங்கண்டாய் - என்னைய
வேயேர் மென் தோளிக்கு வேறாய் இனியொருநாள்
நீயே யுரைத்து விடு"

பின்வா வென்றற்குச் செய்யுள்:-

"நாள்வேங்கை பொன் விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியர் என்னையன்மார்-கோள்
                                     வேங்கை
அன்னையால் நீயும்! அருந்தழையாம் ஏலாமைக்கு
என்னையோ நாளை எளிது"             (திணைமாலை.2)

என வரும்.

பேதைமை   யூட்டல்    என்பது    -     நேரினும்     அவள்
அறிவாளொருத்தியல்லள் என்று தலைவற்குக் கூறல்.

உதாரணம்:-

"நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல் போல் வேண்டாது வேண்டி - எறிந்துழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு
நொந்தினைய வல்லளோ நோக்கு."     (திணைமாலை. 24)

இன்னும், பேதைமை யூட்டல் என்பதனால் தோழி  தான் அறியாள்
போலக் கூறுதலுங் கொள்க.

உதாரணம்:-

"புன்தலை மந்திக் கல்லா வன்பறழ்
குன்றுழை நண்ணிய முன்றில் போகாது
எரியகைந்து அன்ன வீததை இணர
வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைய
தேம்பெய் தீம்பால் வௌவலிற் கொடிச்சி
எழுதெழில் சிதைய அழுத கண்ணே
தேர்வண் சோழர் குடந்தை வாயில்
மாரியங் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயலுறு நீலம் போன்றன விரலே
பாஅய அவ்வயிறு அலைத்தலின் ஆனாது
ஆடுமழை தவழுங் கோடுயர் பொதியின்
ஓங்கிருஞ் சிலம்பில் பூத்த
காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே". (நற்றிணை.379)

என வரும்.

முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும் - முன்னுறு  புணர்ச்சி
முறையே நிறுத்துக் கூறலும் என்றவாறு.

நிறுத்துக்    கூறலாவது நீங்கவிடாது உடன்பட்டுக் கூறல். இன்னும்,
முன்பு கூடினாற்  போலக்  கூட  அமையுமென்று  கூறுதல். உதாரணம்
வந்தவழிக் காண்க.

அஞ்சி  அச்சுறுத்தலும் என்பது   -  தான்  அச்சமுற்று  அஞ்சின
தன்மையைத்   தலைவற்கு   அறிவித்தலும்   என்றவாறு. அது   யாய்
வருவனென்றானும்   தமையன்மார்   வருவ   ரென்றானும்    காவலர்
வருவ ரென்றானும் கூறுதல்.

உதாரணம்:-

"யானை உழலும் அணிகிளர் நீள்வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்
ஏனலுள் ஐய வரவுமற் றென்னை கொல்
காணினும் காய்வர் எமர்".             (திணைமொழி. 6)

என வரும்.

உரைத்துழிக்  கூட்டமொடு என்பது - நின்னாற் காதலிக்கப்பட்டாள்
யாவள் என வினாயவழி இத்தன்மையாள் எனச் சொல்லக்கேட்ட தோழி
அவளும்  நின்  தன்மையாள் என    இவனோடு   கூட்டியுரைத்தலும்
என்றவாறு.

ஒடு எண்ணின்கண் வந்தது.

உதாரணம்:-

"நெறிநீர் இருங்கழி நீலமுஞ் சூடாள்
பொறிமாண் வரியலவன் ஆட்டலும் ஆட்டாள்
திருநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாள்
செறி நீர்த்தண் சேர்ப்பயா னென்சொல்லிச் சேர்கேன்".

என வரும்.

எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும் என்பது - ஒழியாது கூறிய
எட்டுக் கூற்றும் என்றவாறு, முன்னைப் புணர்ச்சி முறையறிந்தாளாதலின்
அவன் இரந்து  பின்னின்றுழி ஈண்டுக் கூறிய எல்லாம் அவன் உள்ளக்
கருத் தறியுந்துணையும்  தழீஇக்   கொண்டு   கூறினல்லது   ஒழித்தல்
பொருளாகக்  கூறாள்  என்பது   கொள்ளப்படும்.    இவை   எட்டும்
குறையுறவுணர்தலின் பகுதி.

வந்த   கிழவனை  மாயஞ்  செப்பிப்  பொறுத்த  காரணங் குறித்த
காலையும்  என்பது  -  மாயம்   சொல்லிவந்த  கிழவனைத்  தலைவி
பொறுத்த காரணம் குறித்தகாலையும் தோழி கூற்று நிகழும் என்றவாறு.

அவ்வழித்   தலைவன்   குறிப்பும்  தலைவி குறிப்பும் உணர்தலும்
தலைவன் கேட்டதற்கு மாற்றம்   கூறுதலும்   உளவாம். மாயம் செப்பி
வந்த கிழவன் என மாற்றுக. மாயம் செப்புதலாவது யானை போந்ததோ
மான் போந்ததோ எனக் கூறல்.

"இரந்து குறையுறாது கிழவியுந் தோழியும்
ஒருங்குதலைப் பெய்த செவ்வி நோக்கிப்
பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
புதுவோன்  போலப்  பொருந்துபு  கிளந்து
மதியுடம்படுத்தற்கும் உரியன் என்ப".    (இறையனாரகப்.6)

என்பதனாற் குறையுறவுணர்தல் நிகழ்ந்துழி இது நிகழாதென்று கொள்க.

அதன்கட் குறிப்புணர்வதற்குச் செய்யுள்:-

"வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின்
வாங்கமை மென்தோள் குறவர் மகளிராம்
சோர்ந்து குருதி ஒழுகமற் றிப்புறம்
போந்ததில் ஐய களிறு".                (திணைமொழி.8)

எனவும்,

"நெடுந்தேர் கடைஇத் தமியராய் நின்று
கடுங்களிறு காணீரோ என்றீர் - கொடுங்குழையார்
யானை அதருள்ளி நிற்பரோ தம்புனத்துள்

ஏனற் கிளிகடிகு வார்."

எனவும்,

"ஏனல் காவல் இவளும் அல்லள்
மான்வழி வருகுவன் இவனும் அல்லன்
நர