கூற்று நிகழும் என்றவாறு.
தலைமகள் குறைநயந்தமை தலைமகற்குக் கூறிய செய்யுள்:-
"நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க செல்கஞ் செலவியங் கொண்மோ வைகலும் ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே". (குறுந்.114)
எனவும்,
"கடும்புலால் புன்னை கடியுந் துறைவ படும்புலால் புள்கடிவான் புக்க - தடம்புல்ஆம் தாழைமா ஞாழல் ததைந்துயர்ந்த தாழ்பொழில்
ஏழைமான் நோக்கி இடம்"
(திணைமாலை.44)
எனவும் வரும்.
இன்னும் நயம்புரி யிடத்தும் என்றதனால் களவொழுக்கம் நிகழா நின்றுழிக் கூறுங் கூற்றும் ஈண்டே கொள்க. அது தலைவன்
வருமெனவும் வந்தா னெனவுங் கூறுதலும் தலைமகன் பகற்குறிக்கண்
நீங்கிய வழிக் கூறுதலும் எனப் பலவாம்.
"கவர்பரி நெடுதேர் மணியும் இசைக்கும் பெயர்பட வியங்கிய இளையரும் ஒலிப்பர் கடலாடு வியலிடைப் பொலிந்த நறுந்தழைத் திதலை யல்குல் நலம்பா ராட்டிய வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் இற்பட வாங்கிய முழவுமுதற் புன்னை மாவரை மறைகம் வம்மதி பானாள் பூவிரி கானல் புணர்குறி வந்துநம் மெல்லிணர் நறும்பொழிற் காணாதவன்
அல்லல் அரும்படர் காண்கநாம் சிறிதே". (நற்றிணை.307)
இது வருகின்றான் எனக் கூறியது.
"நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று ஓவத் தன்ன இடனுடை வரைப்பில் பாவை அன்ன நப்புறம் காக்குஞ் சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினன் கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக்கொண் டாங்கு நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் கண்டனம் வருகஞ் செல்மோ தோழி கீழு மேலுங் காப்போர் நீத்த வறுந்தலைப் பெருங்களிறு போலத்
தமியன் வந்தோன் பனியலை நிலையே". (நற்றிணை.182)
இது வந்தான் எனக் கூறியது.
"நெய்தல் கூம்ப நிழல்குணக் கொழுகக் கல்சேர் மண்டிலஞ் சிவந்து சினந்தணியப் பல்பூங் கானலும் அல்கின் றன்றே இனமணி ஒலிப்பப் பொழுதுபடப் பூட்டி மெய்ம்மலி காமத்து யாந்தொழுது ஒழியத் தேருஞ் செல்புறம் மறையும் ஊரோடு யாங்கா வதுகொல் தானே தேம்பட ஊதுவண்டு இமிருங் கோதை மார்பின் மின்னிவர் பெரும் பூண் கொண்கனொடு
இன்னகை மேவிநாம் ஆடிய பொழிலே". (நற்றிணை.187)
இது பகற்குறிக்கண் தலைவன் நீங்கியவழிக் கூறியது.
எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் என்பது- எண்ணுதற்கு அரிய பல நகையாட்டுக்களைத் தலைவனிடம் குறித்த வகையுங் கூற்று நிகழும் என்றவாறு.
அஃது அலராகுமென்று கூறுதல். இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாயினால் அவர் தூற்றி நகைப்பராகலின் நகையாயிற்று.
உதாரணம் :-
"நிறைஅரியர் மன்அளியர் என்னாது காமம்
மறைஇறந்து மன்று படும்". (குறள்.1138)
"அன்னையும் அறிந்தனள் அலரு மாயின்று நன்மனை நெடுநகர் புலம்புகொள உயிர்க்கும் இன்னா வாடையும் மலையும்
நும்மூர்ச் செல்கம் எழுகமோ தெய்யோ". (ஐங்குறு.238)
எனவும் வரும்.
புணர்ச்சி வேண்டினும் என்பது- மேற்சொல்லப்பட்ட பல்லாற்றானும்
தலைவற்கறிவுறுத்தவழிப் பின்னும் புணர்ச்சி வேண்டினும் ஆண்டுத்
தோழி கூற்று நிகழும் என்றவாறு.
"நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றாற் கௌவையாற் காமம் நுதுப்பேம் எனல்." (குறள்.1148)
"இவளே, நின்சொற் கொண்ட என்சொல் தேறிப் பசுநனை ஞாழற் பல்கிளை ஒருசிறைப் புதுநல னிழந்த புலம்புமார் உடையள் உதுக்காண் தெய்ய உள்ளல்வேண்டும் நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக் கடலுங் கானலுந் தோன்றும்
மடல்தாழ் பெண்ணையஞ் சிறுநல் லூரே." (குறுந்.81)
இது பின்னும் புணர்ச்சி வேண்டிய தலைவற்கு இடமுணர்த்தியது.
இரவு வருவானைப் பகல் வாவென்றலும் பகல் வருவானை இரவு
வாவென்றலுங் குறிபெயர்த்தலும் எல்லாம் ஈண்டே கொள்க.
"ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச் சேய்த்தும் அன்று சிறுகான் யாறே இரைதேர் வெண்குருகு அல்லது யாவதும் துன்னல் போகின்றாற் பொழிலே யாம்எம் கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே." (குறுந்.113)
இது பகற்குறி நேர்ந்தது. ஆண்டுத் தலைவிக்குக் கூறுமாறு:-
"ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடான் சிறுகட் பெருங்களி றுவயப்புலி தாக்கித் தொல்முரண் சோருந் துன்னருஞ் சோலை நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே."
குறுந்.88)
என வரும்.
வேண்டாப் பிரிவினும் என்பது - புணர்ச்சி வேண்டாது பிரிவு
வேண்டினும் என்றவாறு.
இது தலைவன் நெஞ்சினாற் பிரியானென்பதனான் வேண்டாப்
பிரிவென்றர். அதுதாளா .... வென்பது அலராகுமென்று அஞ்சி ஒருவழித்
தணத்தலும் ஒன்று. அவ்வழித் தலைவிக்கு உரைத்தனவும் தலைவற்
குரைத்தனவும் உளவாம் . அவை வருமாறு:-
"இறவுப்புறத் தன்ன பீணர்படு தடவுமுதற் சுறவுக்கோட்டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற் றுமருப்பின் அன்ன அரும்புமுதிர்பு நன்மான் உழையின் வேறுபடத் தோன்றி விழவுக்களங் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச் செலீஇய சேறி யாயின் இவளே வருவை யாகிய சின்னாள்
வாழா ளாதல்நற் கறிந்தினை சென்மே".
|